
எத்தனையோ நகரங்களில் நான் தலைகாட்ட
முடியாது. எத்தனையோ தெருக்களை நான் என்முகத்தை
மூடிக்கொண்டு கடக்க வேண்டியதாகவே
இருக்கிறது.
எத்தனையோ வீடுகளில் நான் நிச்சயமாக
வரவேற்கப்பட மாட்டேன். எத்தனையோ முகம்பார்க்கும்
கண்ணாடிகளில் என்முகத்தை நான் வீணாகத்தேடி
அலுத்துவிட்டேன். எத்தனையோ கதவுகள் என்னைக்
கண்டவுடன் அடைத்துக் கொண்டு விடுகின்றன,
எத்தனையோ வார்த்தைகளை நான் சுலபமாகச்சொல்லி
விடமுடிவதில்லை. எத்தனையோ அந்தரங்க சிந்தனைகளை
நானே ஒதுக்கிவிட வேண்டி வருகிறது.
எஞ்சியிருப்பது
தான் நான், எல்லாமும் போகமிஞ்சி இருப்பதே ஏன்
உலகமென்று திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாக
இருக்கிறது. சொல்லப்படாத வார்த்தைகளில் எழுதப்
படாத நூல்களில் நீ உன்னையே காட்டிக் கொள்கிறாய்.
எனக்கும் அது சாத்தியப்பட்டுவிடும் நாட்கள்
வந்து கொண்டிருக்கின்றன என்று நம்புகிறேன்
(ஞானரதம் பெப்ரவரி 1986 )
