
ஆள்அரவமற்ற தேசிய
நெடுஞ்சாலையில் வெட்டவெளியில்
ஒருகுச்சியுடன் நிற்கிறார் காவலர்.
குறைந்த தூரஇடைவெளியில்
ஆங்காங்கே இப்படித்தான் நிற்கிறார்கள்
காக்கிச்சட்டைக் காவலர்கள்….
சிலருக்கு ஒதுங்கி நிற்க மரநிழல்
கடைகள் வாய்க்கிறது…சிலருக்கு
வெட்டவெளிதான் சில..பல மணி
நேரத்துக்கு.
மாநிலமுதல்வர் கடந்து செல்லும்
வரை ஒற்றைக்குச்சிதான் பாதுகாப்பு….
சிலரிடம் அதுவும் இல்லை.
முகத்தில் அறைந்துசெல்லும்
கரும்புகையை சுவாசித்தபடிதான்
நிற்கவேண்டும்…
நேரம் நல்லபடியாய்
அமைந்தால் குடிநீருக்கு வாய்ப்பிருக்கிறது.
வழியும் வேர்வையைத் துடைத்தபடி
கடும் வெய்யிலில் நிற்கும் அவருக்கு
ஆயிரம் கவலைகள்…
இப்போதுள்ளது முதல்வரின்
வாகனம் அவரை இடையூரின்றிக்
கடக்கவேண்டும்…
விறைப்பான வணக்கத்தை
முதல்வரின் வாகனத்திற்கு
செலுத்தஆயுத்தமாய் இருக்கிறார்
திசையைப் பார்த்தபடி.
கடந்துசெல்லும் வழியில்
உங்களிடம் ஏதேனும் குடிநீர்ப்புட்டி
இருந்தால் தாகத்துக்கு கொடுத்து
உதவுங்கள்….
அவர் கேட்கவில்லையாயினும்.
