
பெருமழை பெய்து கழுவிவிட்ட இடம் போல வீடு ஆகிவிட்டது. வீடெங்கும் பொருள்கள் இறைந்துகிடந்தன. சின்ன பாலிதீன் கவரில் தொடங்கிப் பல்வேறு பொருள்கள் இவற்றோடு பரிசுப் பொருள்கள் கவர்கள் பிரித்து, கவர்கள் பிரிக்கப்படாமல்.. நிதானமாய் வீட்டை ஒழிக்க ஒரு வாரம் ஆகும். ரங்கராஜனும் வேதவள்ளியும் சேர்ந்து எல்லாவற்றையும் முடித்துவிட்டார்கள். ஊரே கொண்டாடிப் பேசியது. மிகையான பேச்சல்ல விருப்பமான பேச்சாக அது இருந்தது. முன்பு மகள் கல்யாணத்தின்போதும் தனித்தனி மண்டபம் அசைவத்திற்கு என்று ஒன்று சைவத்திற்கு என்று ஒன்று. அசைவம் சாப்பிடுகிறவர்களே அசந்துபோகுமளவிற்கு சைவ சாப்பாடு. தனி ஆட்கள். தனி மண்டபம். மகள் கல்யாணத்திற்கு ஐந்து வகை அழைப்பிதழ்கள். ஒவ்வொரு அழைப்பிதழுடனும் ஒரு அகன்ற எவர்சில்வர் தட்டுடன். காரின் பின்சீட்டு முழுக்க சில்வர் தட்டுகள். மாப்பிள்ளை வீட்டார்கள் எங்களுக்கு பத்து பத்திரிக்கை மட்டும் கொடுங்கள் என்று கேட்டார்கள் தட்டு வேண்டும் என்பதை சொல்லாமல். எதிலும் குறை வந்துவிடக்கூடாது என்று ரங்கராஜனும் வேதவள்ளியும் நிச்சயத்தின்போதும் சரி திருமணத்தின்போதும் சரி ஒரு சொந்தம் விடாமல் தாங்களே நேரில் போய் அழைப்புவிடுத்தார்கள்.
அப்படித்தான் இப்போதும் மகன் திருமணத்தை முடித்திருக்கிறார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும் லண்டன் கிளம்பிப்போயிருக்கிறார்கள். ரங்கராஜன் தேனிலவு டிக்கட் எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். பிள்ளைகளைத்தான் பார்ப்பார் காசு பணத்தைப் பார்க்கமாட்டார். ஆனால் திறமாகச் சம்பாதிப்பார்.
இப்போது தீவில் விட்டவர்களைப்போல இருவரும் ஆகிவிட்டார்கள். பக்கத்துதெருவரை போயிருக்கிறாள் வேதவள்ளி. ரங்கராஜன் மட்டும் தனியே. தெருக்கதவைத் தாழிட்டார். உள்ளே கூடத்திற்கு வந்து விளக்கணைத்தார். சோபாவில் அமர்ந்து வாய்விட்டு அழுதார். நெடுநேரம் அழுதார். ரங்கராஜன் வாழ்வு ஒரு துடைக்கப்பட்ட சிலேட்டுபோல. வாழ்க்கை முழுக்க நேர்மை, நேரம் தவறாமை, ஒழுக்கம், அடுத்தவரைப் புண்படுத்தாது நடத்தல், உதவுதல், தன்வேலையைக் கடினமாக செய்தல் இப்படியே வாழ்ந்து முடித்திருப்பவர். அவரின் உறவுகள் எத்தனையோ அவரைக் காயப்படுத்தியுள்ளன. அவற்றை எல்லாம் தாண்டித்தான் அவர் தன் வாழ்க்கையில் ஓடி வெற்றி பெற்றிருக்கிறார். அவரின் உறவினர் பையன் ஒருவன் வயது சின்னவன். அவன் ஒரு முறை சொன்னான் “யாருக்காவது துக்க செய்தி என்றால் நான் நள்ளிரவில்தான் சொல்லுவேன்! அப்போதுதான் அவர்கள் தூங்கமுடியாமல் தவிப்பார்கள்!” என்று. ரங்கராஜன் சொல்லியிருக்கிறார்.. “உன்னுடைய வயது சிறியது. உன் எண்ணங்கள் பெரிதாக இருக்கவேண்டும்!. ஆனால் அடுத்தவரை மட்டந் தட்டுவதிலும் வக்கிர எண்ணங்களிலும் இருப்பதால், அதுவே உன்னை ஒருநாள் படுகுழியில் எழமுடியாத அளவுக்குத் தள்ளிவிடும்” என்று. ஆனாலும் அவன் திருந்தவில்லை. ஆனால் இப்பவும் ரங்கராஜன் வருத்தப்படுகிறார் அவனுக்கு நேரும் துயரங்களுக்காக.
இதுதான் ரங்கராஜன். அவரின் எண்ணம்போலவே மகள் திருமணத்தை முடித்தார். நினைத்தபடியே அருமையான மாப்பிள்ளையும் அமைந்தார். இப்போது மகன் திருமணத்தையும் நன்றாக முடித்துவிட்டார். இதுவரை கொண்டுவந்த இறைவனை நினைத்துக் கொண்டார். அழுகை வந்துவிட்டது. அதுவும் அவரின் பேவரிட் கடவுள் விநாயகர். விநாயகரின் பல்வேறு படங்களைக் கொண்ட பெரிய ஆல்பம் வைத்திருக்கிறார். விநாயகரைத் தவிர யாரையும் கும்பிடமாட்டார்.
எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய நோய் நொடியில்லாமல் வைத்த இறைவனை எண்ணித்தான் அழுதார்.
அழுது முடிக்கவும் வேதவள்ளி உள்ளே வரக் கதவைத் தட்டவும் சரியாக இருந்தது.
போய் திறந்தார்.
“என்ன பண்ணறீங்க? இருட்டுக்குள்ள விளக்குகூடப் போடாமல்?”
என்றாள்.
“ஒண்ணுமில்ல…! எல்லாத்தையும் நல்லபடியா என்னோட பிள்ளையார் முடிச்சிக் குடுத்திட்டார்!. அதான் நன்றி சொன்னேன்”.
“இருட்டுக்குள்ள உட்கார்ந்துட்டா.!. அழுதீங்களா?”
“எப்படித் தெரியும்?”
“ஒரு வருஷமில்ல.. முப்பத்தைந்து வருஷம் குப்பை கொட்டிட்டு வரேன் உங்களோட!”…
பேசாமல் இருந்தார் ரங்கராஜன்.
“நான் ஏற்கெனவே அழுதிட்டேன் ஒருபாட்டம் புள்ளயார்கிட்ட!”
என்றாள்.
ரங்கராஜன் மனதுக்குள் சந்தோஷம் வந்தது.
இருவரும் சேர்ந்து நன்றி செலுத்தியாகிவிட்டது.
“சரி எங்க போயிட்டு வரே?”
“பக்கத்துதெரு வசந்தி வீட்டுக்கு.”
“என்ன விசயம்?”
“அவ மகள் முழுகாம இருந்தா.! முன்கூட்டியே புள்ள பொறந்திடிச்சி..! அதான் ஆசுபத்திரிலயே ஒன்றரை மாசம் வச்சிருந்து இப்பத்தான் அழச்சிட்டு வந்தா..! ஒரு எட்டுப் போய் பாத்துட்டு பணம் வச்சிக் குடுத்திட்டு வந்துட்டேன்..”
“சரி.. இந்த சாமான்கள எப்ப ஒழிக்கறது..?”
“நம்ப புள்ள லண்டன்லேர்ந்து எப்ப வர்றான்?”
“அவன் வர பதினைந்து நாள் ஆகும்” என்றார்.
“அதுக்குள்ள ஒழிச்சிடலாம்..!” என்றாள்.
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஆமாம்.. அவன் வர்றதுக்குள்ள ஒழிச்சிடலாமான்னு கேள்வி கேப்பீங்க..! யார் என்ன பொருள் தந்தாங்கன்னு லிஸ்ட் எழுதுவீங்க..! அதத் தனித்தனியா அடுக்கி வச்சி மகன் கிட்ட காமிக்கணும்.. !”
வேதவள்ளி வெள்ளிந்தியானவள். அவளுக்கு உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாது. ஆனால்வெளிப்படையாக எதையும் காட்டிவிடுவாள். அது சிரிப்பாக இருந்தாலும் சரி.. கோபமாக இருந்தாலும் சரி. என்றாலும் பிடிவாதக்காரி.. நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருப்பாள். யார் என்ன சொன்னாலும் அவர்களையும் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடுவாள்.. அதுதான் வேதவள்ளி.
மகன் விஷயத்திலும் அப்படித்தான்.. மகன் விருப்பத்தைக் கேட்டுக்கொண்டாள்.. எப்படிப் பெண் வேண்டுமென்று.. அவனும் சொன்னான். அதில் ஒரு கடுகளவும் பிசகாது பார்த்துவிட்டாள். அதற்காக எத்தனை செலவுகள். எத்தனை வேண்டுதல்கள்? எத்தனை பூசைகள்? எத்தனை பரிகாரங்கள்? எத்தனைக் கோயில்கள்? எதற்கும் சளைக்கமாட்டாள்.
தினமும் அரளிப்பூப் பறிப்பாள். வெள்ளைப் பூக்கள் பறிப்பாள். நந்தியாவட்டை பறிப்பாள்.. முல்லை பறிப்பாள். எல்லாம் தோட்டத்தில் இருக்கின்றன. பூத்துக்குலுங்குகின்றன.
எல்லாவற்றையும் தனித்தனி மாலையாக சொன்ன அளவுகளில் ரங்கராஜன்தான் மாலை கட்டுவார்.
மகன்தான் அவன் கையால் மாலைகளைப் போடவேண்டும்.
அம்மனிடம் வேண்டுவாள்.. உனக்கு மாலை போடுகிறான் என் மகன். உன்னைப்போலவே அவனுக்கும் ஒரு நல்ல பெண்ணை அவன் விரும்பியபடி காண்பித்துவிடு.
அவளும் காண்பித்துவிட்டாள்.
கொரோனா காலம் என்றாலும் வேதவள்ளி ஐடியா செய்தாள். ஐந்து நாள் மண்டபம் பேசி முடித்தாள். ஐந்து தேதிகளில் பத்திரிக்கை அடித்தாள். ஒரு தேதியில் 100 பேர் என்று வைத்து ஒருவருக்கும் மற்றொருவருக்கும் 3 அடி இடைவெளி என்று இருக்கை அமைத்து மிகக் கவனமாக விருந்திட்டாள். முதல் மூன்று நாட்கள் அசைவம். அடுத்த இரண்டு நாட்கள் சைவம். பார்த்தவர்கள் வியந்துபோனார்கள்.
எல்லாம் குறைவற நடந்துவிட்டது.
மறுநாள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த ஆரம்பித்தார்கள்.
பூசை அறையில் முக்கியமான பரிசு பொருட்களை விலை அதிகமாக உள்ளதைக் கொண்டுபோய் வைத்தார் ரங்கராஜன். அப்போதுதான் கவனித்தார் அந்த களிமண் பிள்ளையாரை. விநாயகர் சதுர்த்திக்கு வாங்கியது. ஐந்தாம் நாள் ஆற்றில் கரைக்கவேண்டும். இன்றைக்கு பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன ஆனால் கரைக்கவில்லை.
“ வேதவள்ளி…என்னது இன்னமும் விநாயகரை ஆற்றில் விடாமல் வச்சிருக்கே?”
“விடணுங்க.. இப்போ வேண்டாம்!”.
“நியாயப்படி அஞ்சாம் நாள் விடணும்..! இன்னமும் விடாம எதுக்கு வச்சிருக்கே… பாவம்!”
“எனக்குத் தெரியுங்க.. இப்போ வேண்டாம்!”
“இல்லப்பா வேதவள்ளி.. கரைக்காம இருந்தா சரியா வராது”
“கரைக்கலாங்க.. ஆனா இப்போ வேண்டாம்..”
“என்னது இதுலபோய் இத்தனைப் பிடிவாதமா இருக்கே?”
“பிடிவாதம் இல்லங்க.. வேண்டுதல்!” என்றாள்.
“வேண்டுதலா?”
“ஆமாங்க.. பொதுவா விநாயகர் சதுர்த்தி கொண்டாடி ஐந்தாள் நாள் கரைக்கலன்னா.. எப்படா இந்த வீட்டை விட்டுக் கிளம்புவோமுன்னு விநாயர் துடிப்பாராம்..! அப்ப நாம எதாச்சும் வேண்டிக்கிட்டா.. சட்டுன்னு கொடுத்துட்டு தப்பிக்கப் பார்ப்பாராம். அப்படித்தான் நம்ப பொண்ணு கல்யாணத்திலேர்ந்து ஒரு சதுர்த்தி விநாயகரைக்கூட கரைக்காமப் பத்திரமாப் பொட்டியில வச்சிருக்கேன்.!. இப்போ மகன் கல்யாணமும் நினைச்சபடி நடந்தாதான் எல்லாத்தையும் கரைப்பேன்னு வேண்டிக்கிட்டேன்..” என்றாள் வேதவள்ளி.
“அடிப்பாவி.. அஞ்சு வருஷத்துப் புள்ளயாரைக் கரைக்காம வச்சிருக்கியா.!”.
“ஆமாம்..”
“எங்க வச்சிருக்கே?”
“நான் கல்யாணம் ஆகி வந்தப்ப எங்கப்பா ஒரு மரப்பெட்டி கொடுத்தாங்க.,. அதுக்குள்ள அடுக்கி வச்சிருக்கேன்!”
“சாமியறையில் அந்தப் பெட்டிக்குள்..!”
ஐந்து வருடப் பிள்ளையார்களும் களிமண் வெடிக்காமல் காத்திருந்தார்கள்.
“ என்ன வேதவள்ளி விசித்திரமா இருக்கு?”
“ஒத்த ஒத்தருக்கு ஒரு வேண்டுதல். நான் இப்படி.!”
“அதுக்காக கடவுளையே புடிச்சி வச்சி வரங்கேட்பியா?”
“அதிலென்ன தப்பு? புடிச்சவங்ககிட்டதான கேட்கமுடியும்?”
“சரி .. நம்ப பையன் கல்யாணம்தான் முடிஞ்சிடிச்சி.. நல்லபடியாவே முடிஞ்சிடுச்சி.. இனியே எல்லாத்தையும் கரைச்சிடவேண்டியதுதானே?”
“ இப்ப வேண்டாங்க?”
“அதான் ஏன்?”
“அஞ்சு வருஷமாப் புடிச்சி வச்சிருக்கேன்.. கேட்டத எல்லாம் கொடுத்திருக்காரு..! நமக்கு நன்மை செஞ்சவருக்கு நாம கெடுதல் பண்ணக்கூடாதுங்க.!”.
“என்ன வேதவள்ளி சொல்றே?”
“இப்ப புள்ளயாரை வெளியில எடுத்தா கொரோனா தொற்று புடிச்சிக்கும்.!. அநாதை மாதிரி ஆயிடுவாரு..புள்ளயாரு..! இதெல்லாம் ஒழியட்டும்.! நல்ல நாள்ல போய் நாமளே கரைச்சி அவருக்கு விடுதலை கொடுத்துடுவோம்.!”. என்றாள்.
31 பூக்குளம் புது நகர், கரந்தை, தஞ்சாவூர்.
பேச. 9442398953

சென்ட்டியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில் அது வாழ்க்கைக்கு ஒரு சுவாரஸ்யத்தைத் தருகிறது.
சில சென்ட்டிகள் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டவை. அவற்றிற்குப் போதுமான நிரூபணங்கள் இல்லாதது போலவே மறுதலிக்கவும் முடியாதவை.
கயிற்றில் துண்டு உலர்த்தும் போது இருபக்கமும் பொருந்தி வருமாறு உலர்த்த வேண்டும். அது ஒரு ஒழுக்கம் சார்ந்த நியதி என்ற அளவிலும் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் இருக்கும் என்ற அளவிலும் சரி.
ஆனால், இதற்கு ஒரு காரணம் கூறுவார்கள். ஒருபக்கம் கூடுதல் குறைச்சலாக உலர்த்தும் போது, துண்டின் உரிமையாளரின் ஆயுளை அது பாதிக்கும் என்பார்கள். அதாவது, எந்த அளவு கூடுதலாக இருக்கிறதோ, அது வாழ்நாளில் வாழ்ந்த விகிதத்தைக் குறிப்பிடுவதாம். எந்த அளவிற்குக் குறைந்த விகிதத்தில் தொங்குகிறதோ, அந்த விகிதத்திற்குத் தான் ஆயுள் பாக்கி இருக்கும் என்பார்கள்.
இதில் எந்தப் பக்கத்துக் கூடுதலும் குறைச்சலும் வாழ்நாளின் விகிதாசாரத்தை மாற்ற வல்லது என்பது யாரும் அறியாதது.
எதற்கு வம்பு என்று கொஞ்சம் மெனக்கெட்டு துணியை அளவாக உலர்த்தி விட்டுப் போவது நல்லது.
மேற்படி சுவாரஸ்யமான கதையும் இந்த மாதிரி சென்ட்டிமென்ட் சார்ந்ததே. பிள்ளையாரைப் போலவே கதையும் அலுப்புத் தட்டாமல் எழுதப்பட்டு இருப்பதை சிலாகிக்கத் தான் வேண்டும்.
ஆனாலும், ஒரு விஷயத்தைக் குறிப்பிடாமல் தாண்டிப் போக முடியவில்லை.
நல்லவன் வாழ்வான்
தீயவன் வீழ்வான்
என்பதை விட அடாஸான உடான்ஸ் வேறெதுவும் கிடையாது.
இதெல்லாம் ஆத்மதிருப்திக்கான வீண் கற்பனை.
அயோக்யர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக அட்டாணிக்கால் போட்டு அதகளம் செய்து கொண்டே இருப்பதும், கடுமையான பக்திமான்கள் முரட்டு நேர்மையாளர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் கழிவிரக்கத்தில் ஒழிந்து போவதும் கண்கூடு.
பாவங்களுக்கும் அக்ரமங்களுக்கும் அளவுகோல்கள் அவரவர் கொள்கைகளில், சந்தர்ப்பங்களில், மனநிலைகளில், சமரசங்களில் வேறு வேறு.
கடைசி கடைசியாக மறுஜென்மக் கணக்கை மதங்கள் பிரேரிபிக்கக் கூடும். இயல்புதான் அதுவும். ஆனாலும், இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று புறந்தள்ள வேண்டிய சமாதானங்கள்.
ரங்கராஜன் வீட்டுப் பிள்ளைகள் கல்யாணங்களை மண் பிள்ளையார், அவர் நேர்மை பொருட்டு நடத்தி வைப்பதும் (அப்படி நேரடியாக சொல்லப்படா விட்டாலும் அவர் விஷயத்தில் நல்லது நடக்கிறபோது அவர் நேர்மையை சிலாகித்து எழுதியிருக்கும் நிர்ப்பந்தம் அவ்வாறு யோசிக்கத் தூண்டுகிறது), துக்கிரித்தனமான அவரது உறவினன் பின்னாட்களில் துன்பப்படுவதாகக் கூறுவதும் இந்த நல்லவன் கெட்டவன் கோட்பாட்டைக் கூறுவதுதான்.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ஒரு வாசகம் வரும்.
கிட்டத்தட்ட அது, “முன்பு பார்த்திருந்தாயானால் அந்தப் பச்சை மரம் (ஒலிவம்?) தழைத்து இருந்தது. இன்று பார்த்தாயானால் அது அங்கு இல்லை. ஒழிந்து போய் விட்டது. துன்மார்க்கர்களும் இதே மாதிரி தழைத்திருந்தாலும் ஒருநாள் ஒழிந்து போவார்கள்” என்கிற மாதிரி போகும்.
இது தாவீது என்கிற, கடவுள் அருளால் கோலியாத்தை சாய்த்தவனும், அதை விட மேலாகக் கடவுளின் வலது பாரிசத்தில் அமரும் பாக்கியம் அடைந்தவனாகவும் இருக்கும் ஒருவன், தன் படைவீரன் ஒருவன் மனைவியான பத்சேபாள் மீது மையல் கொண்டு, அவளை அடையும் பொருட்டு, தந்திரமாக ஒரு யுத்தத்தை ஆயத்தப்படுத்தி, அவள் கணவனை அதில் ஈடுபடுத்தி, அவன் அதில் இறந்தும் போகிறான். தாவீது பத்சேபாளிடத்தில் தீட்டுப் படுகிறான்.
தன் நாட்டை இழந்து, தெருக்களில் விரோதிகளால் தேடப்பட்டு, பிடிக்கப் பட்டு, தப்பித்து, கடைசியில் கடவுளிடம் சரணாகதி அடையும் பொருட்டு, நூற்றைம்பது பாடல்கள் பாடுகிறான்.
கடவுள் அவன் கோரிக்கையை ஏற்று, அவன் நாடு திரும்பக் கிடைக்கிறது. வலது பாரிசமும் கிடைக்கிறது.
இதில், பத்சேபாளின் அப்பாவிக் கணவனின் மரணத்திற்கு என்ன நியாயம் கிட்டியது? அதேபோல் பாவத்திற்கு உடன்பட்ட பத்சேபாளுக்கு என்ன தண்டனை கிடைத்தது?
ஆக, கடவுள் நினைத்தால் நல்லதையும் தீமையையும் இடமாற்றம் செய்ய முடியும்.
பணக்காரனாக இருப்பவன், பட்டை பட்டையாக எதையாவது தீற்றிக் கொண்டு நாள் முழுக்க எதையாவது பாராயணம் செய்து, பொழுது சாய்ந்த பிற்பாடு தீட்டுப் படலாம்.
அசட்டு சென்ட்டிமெண்டுகள் வெகுவாக இந்த மாதிரி இலக்குகளுக்குத்தான் மனிதர்களை இட்டுச் செல்வதில் வெற்றி அடைகின்றன.
கடமையைச் செய்… பலன் உனதல்ல என்கிற கீதை சரியானது என்று தோன்றுகிறது.
இது மதம் சார்ந்த அனுமானம் அல்ல.
ஒரு திருடன், தான் சார்ந்த தொழிலை (திருட்டு), முழு கவனத்துடனும் கடமையாகவும் செய்யும் போது அவன் மாட்டிக் கொள்வது இல்லை. தன் பொருளை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டியவன் கடமை பிறழும் போது அவதிக்கு உள்ளாகிறான்.
அயோக்யர்களும் இந்த வகையில் தான் வெற்றி அடைகிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களை எதிர்க்கும் கடமையுள்ளவர்கள், அதை விட்டு விட்டு, அவர்களை அழிக்கக் கடவுளை நாடும்போது, கடவுளுக்கே சிக்கல் உண்டாகி விடுகிறது.
கடமையில் வெற்றி பெறும் அயோக்யன், கடமை தவறும் பக்தன், இருவருக்கும் இடையேயான துவந்த யுத்தத்தில் கடவுள் தன் கடமை தவறாது, தான் கூறியபடியே அயோக்யன் பக்கம் நின்று அவனை வெற்றி அடையச் செய்கிறார்.
முடிவாக, தன் செயலை, பாவபுண்ணியம் பார்க்காது, கடமையாகச் செய்கிறவன் எப்போதுமே வெற்றி தான் அடைகிறான்.
இது மறுஜென்மத்தில் அயோக்யன் அல்லலுறுவான் என்கிற உடான்ஸை விடத் தோதான தத்துவமாகப் படுகிறது எனக்கு.
பிகு : வேதவள்ளியா, வேதவல்லியா…எது சரியான பிரயோகம்?
நல்லவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் வாழுங்காலத்தில் இருக்கும். அவர்களின் இழப்புகளையும் சோதனைக் காலங்களையும் மீறி. அது போதும் அவர்களுக்கு. வாழ்நாள் சாதனையாளர் உண்மையில் அவர்கள் தான். பூமி இன்னும் குளிர்வது அவர்களாலே தான். ஏமாற்றுபவர்களின் மகிழ்ச்சிக்குத் தரும் விலை வெளி நபர்களுக்குத் தெரிவதில்லை. நாம் எதையுமே அளவிடுவது தவறான துலாக்கோலில் தான். அதனால்தான் எல்லாத் துயரமுமே.
வாழ்த்துகள் ஹரணி.