
நீண்ட தெருவின் நெடிய நடைக்குப் பிறகு
சட்டென்று தட்டுப்பட்டது
மணல்
சற்றுத் தள்ளித்
தொடுமிடத்தில்
விரிந்தது நீல நிறத்தில் கடல்
மௌனப்படம் போல்
ஓசையின்றி
எழுவதும் தணிவதும்
கரையேறி வருவதும்
கவலையோடு திரும்புவதுமாக
அலைகள்
மணலோரத்தில் காற்றில்
படபடக்கிறது
பலவண்ணத் துணிப்பந்தல்
அருகே சில படகுகள்
குப்பத்து சனம் காத்திருக்க
ஓசையின்றி வந்து நிற்கிறது
அரசு மருத்துவமனை வாகனம்
காத்திருந்த மாணவர் அதிர்ந்து பார்த்திருக்கக்
கீழிறக்கப் படுகிறது
பாடமெடுக்க வேண்டிய இளம் பேராசிரியர் ஒருவனது
பாடம் செய்து ஒப்படைக்கப்பட்ட உடல்
இப்போது வீறிட்டு எழுகின்றன
கடலின் அலைகள்
அவற்றை அடக்கி
ஓங்கி எழுகிறது
ஊர் சனத்தின் பேரோலம் !
புத்தாண்டு விடியலில்
வலிய முடித்துக் கொள்ளப்பட்ட
வாழ்க்கையின் கரிப்பில்
மேலும் தன்னை
உப்பாக்கிக் கொண்டு
பொங்கி அழுகிறது
அவன் வீட்டு வாசலில்
குறுகிப்போன கடல்.

சிறப்பு
நன்று
அருமையான கவிதை அமைப்பு
ஒரு மரணத்தின் வலி கவிதையின் வடிவில் அருமையாக வெளி வந்திருக்கிறது
அடடா அருமையோ அருமை கவிஞரது கற்பனைக்கு வந்து வந்து செல்லும் அலைகளின் ஒத்துழைப்பு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர்
எழுத்தாளர் பா.ஆசைத்தம்பி
கடலூர் மாவட்டம்.
தற்கொலைக்கு அழகான மாற்று சொல்.
தன்னிடம் கால் பதித்து விளையாடி வளர்ந்து படித்த அறிவாளி இப்படி தன்னை இழந்து கிடக்கையில் ஓலமிடும் கடல் காட்சி படுகிறது.
மனதை சங்கடப்படுத்தியது! என்னதான் நடக்கிறது எமது இளைஞர்களுக்கு! நல்ல கவிதை!