சுயம்வரச் சோதனை – சிறுகதை/ நாகேந்திர பாரதி

சூரவர்மனின் மகள் சுந்தரவல்லியின் சுயம்வரம். முதலில் வீர விளையாட்டுப் போட்டிகள். பொறி பறக்கும் வாட்சண்டை. கைகளின் நளின வீச்சும், கால்களின் சுழற்சியும் கலந்த கண்கொள்ளாக் காட்சிகள் . சூரக்கோட்டையின் மக்களின் ஆரவாரம். உற்சாகம். அடுத்து ‘விரல்களோடு ஒட்டிக்கொண்டனவோ’ என்று திகைக்க வைக்கும் கம்புகளின் சிலம்ப வேக வீச்சின் ‘ஙவிர் விர் ‘ சப்தம் காற்றில் கலந்து காதுகளில் எதிரொலித்தது . தொடர்ந்து ஈட்டிச் சண்டை, மற் போர் என்று தங்கள் வீரத்தைக் காட்டிய இளவரசர்களில் முதல் இரண்டு இடங்களில் சந்திர வர்மனும் சூரிய வர்மனும்.

கடைசிப் போட்டியில் , இளவரசியின் கேள்விகள். சளைக்காமல் சரியான பதில் சொல்லி சரி சமமான நிலையில் இருவரும். இறுதியாக இரண்டு கேள்விகள்.

‘ நானும் அரசரும் கொடிய நோய் வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருக்கிறோம். உங்களிடம் இருக்கும் ஒரு அரிய மருந்தால், எங்களில் ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும். யாரைக் காப்பாற்றுவீர்கள் ‘

‘உங்களைத்தான் இளவரசி ‘ என்றான் சந்திரவர்மன் .
‘ஏன் ‘
‘ இந்த சுயம்வரமே உங்களை மணந்து கொள்ளத்தானே ‘

அடுத்து சூரியவர்மனை நோக்கி ‘ உங்களின் பதில் ‘
‘ அரசரைத் தான் தேவி ‘
‘ஏன் ‘
‘நீங்கள் இளையவர். நாட்டை ஆளும் அனுபவம் இல்லாதவர். அரசர் இறந்து விட்டால் நாட்டில் குழப்பம் உண்டாகும். நாட்டைக் காப்பாற்றுவதே என் முதல் கடமை ‘ என்று நான் நினைக்கிறேன் தேவி ‘ .
‘சபாஷ் , சரியான பதில் ‘

அடுத்த கேள்வி, இறுதிக் கேள்வி .

‘இப்போது நாம் மூவரும் புரவிகளில் காட்டு வழி செல்லும்போது ஒரு கொடிய மிருகம் எங்களைக் குறி வைத்துப் பாய்கிறது . இப்போதும் உங்களால் என்னையோ அரசரையோ யாரோ ஒருவரைத் தான் காப்பாற்றும் நிலைமை. யாரைக் காப்பாற்றுவீர்கள் .’

சந்திரவர்மனிடம் இருந்து தயக்கமே இல்லாமல் உடனடிப் பதில் .
‘அரசரைத் தான் இளவரசி . நாடு முக்கியம் இல்லையா ‘

சூரிய வர்மன் நிதானமாகச் சொன்னான்.
‘ உங்களைத்தான் தேவி , நாம் மூவரும் சேர்ந்து காட்டுக்குச் செல்கிறோம் என்று சொல்லும் போதே , நமக்கு மணமாகி விட்டது என்று யூகித்துக் கொண்டேன். இப்போது நாட்டைக் காப்பாற்ற அரசர் இல்லை என்றாலும் , நான் இருக்கிறேன் இளவரசனாக. எனக்கு நீங்கள் வேண்டும் தேவி ‘ என்று அவன் பார்த்த பார்வையின் கூர்மை தாங்காமல் வெட்கித் தலை குனிந்தாள் சுந்தரவல்லி.

அன்று இரவு , சந்தனக் கட்டிலின் மலர்க்குவியலுக்கு நடுவே ஒரு இள மலராக மயங்கிக் கிடந்த சுந்தரவல்லி , சூரிய வர்மனின் காதோடு தனது ரோஜா இதழ்களைப் பதித்துச் சொன்னாள் .

“சந்திர வர்மன் என்னை ‘ இளவரசி ‘ என்று அழைத்துப் பதில் சொல்ல ‘ நீங்கள் என்னைத் ‘ தேவி ‘ என்று உரிமையோடு கூப்பிட்டுப் பதில் சொல்லியபோதே நான் உங்கள் ‘தேவி’ ஆகி விட்டேன்” என்று கிறக்கத்துடன் பேசியவளை இழுத்து அணைத்து சூரிய வர்மன் ‘ அப்படியா சேதி , அது அப்பொழுது. இப்பொழுது , இந்த நேரம், நீங்கள் என் இளவரசி, நான் உங்கள் அடிமை ‘ என்று மயக்கத்தோடு தன் அணைப்பில் இருந்து அவளை விடுவித்து அவளின் மென்மையான பாதங்களில் முகம் பதித்தான். .

One Comment on “சுயம்வரச் சோதனை – சிறுகதை/ நாகேந்திர பாரதி”

Comments are closed.