
நேற்றுமுன்தினம் 3,1.2016 எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர் டால்கினின் பிறந்தநாள். மத்திய பூமி என்ற உலகத்தையும் அதன் தொன்மப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்து, ‘ஹாபிட்’டையும் ‘மோதிரங்களின் மன்ன’னையும் நமக்குத் தந்தவர் அவர். ஃபேன்டஸி இலக்கியத்தின் ஒப்பற்ற படைப்புமேதை. ஆலிஸின் அற்புத உலகத்துக்குப் பிறகு சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் புத்தகமாக ‘தி ஹாபிட்’ ‘திகழ்’கிறது. ’லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ நவீன இலக்கிய உலகில் ஒரு இதிகாசம். இவற்றை ஒட்டி இக்காலத்தில் வந்த தொடர் திரைப்படங்களால் இவற்றின் புகழ் இன்று பரவியிருந்தாலும் தம் புனைவுத் திறத்தால் முன்னணியில் என்றும் நிற்பவை இவை. இவ்விரண்டின் பின்னணியாக பல தொகுதிகள், கலைக்களஞ்சியங்கள், விமர்சன நூல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. ஆடன் போன்றவர்கள் மேலிரு புத்தகங்கள் வந்தகாலத்தில் அதன் பிரச்சார பனியன்களைப் போட்டுக்கொண்டு அலைந்திருக்கிறார்கள்.நான் 80களில் இருந்து (படித்து) சேர்த்துவைத்த டால்கினின் முக்கிய நூல்கள் புத்தகஅலமாரிகளில் இரு ரேக் முழுக்க நிறைந்திருக்கின்றன.தற்போதைய இணைய வசதியில் அவரது அனைத்து நூல்களும் ஆடியோ வீடியோக்களும் அவரைப் பற்றிய விமர்சன நூல்களும் எனது மின்நூல் நூலகத்தில் சேர்ந்துள்ளன.
