
“இழுத்துப் போத்திக்கிட்டு
இன்னும் என்ன தூக்கம்? ஐயாவுக்கு!
பொழுது விடியலையா?” என்று
போர்வையை விலக்கிவிட்டு
எரிச்சலைத் தந்தாள் இல்லத்தரசி!
பொழுது போகாமல்…
தொலைக்காட்சி வழங்கிய
தொடர்நாடகம் ஒன்றின்
படத்தை நோக்கினேன்;
எல்லைமீறும் காட்சி பொறுக்காது
வெளிச்சம் விலகியதால்,
தொலை இயக்கியால்
தொல்லையை மூடினேன்!
புத்தகக் காட்சியில்
புதிதாய் வாங்கிய
புதின நூல் ஒன்றை
புரட்டிப் பார்த்தேன்!
புரியாத நடையில்
அறியாத மொழியில்
வரி யாவும் அழுததால்…
வாசிப்பை நிறுத்தினேன்!
விதியே என்று,
வெற்றிநாயகன் ஒருவர் நடித்து
புதிதாய்த் திரையிடப்பட்ட
அரங்கில் சீட்டுடன்
அமைதியாய் இருந்தேன்! – அவர்
ஆதரவாளர்களின் அடாவடித்தனங்கள்
விடாமல் தொடர்ந்ததால்
வெளியேறி விட்டேன்!
பொழுதைக் கழிக்க
வேறு வழியின்றி
வலையொளி வழங்கும்
பழைய பாடல்களின்
இசையில் நனைந்து
இன்புற்றிருந்த நான்…
கவனம் திரும்ப கனிவாய்க் கொஞ்சி
பேரக்குழந்தையிடம்
பேச்சு கொடுத்தேன்!
“போரடிக்காத தாத்தா!
‘பெப்பா பிக்’போடு!
அப்பால போ நீ!” என்று
அடம்பிடித்து அழுதது!

பணி ஓய்வுக்கு பின் இப்படி தான் உள்ளது. இயல்பாக உள்ளது