
சூரியன்
பாண்டி ஆடுகிற பெண்களை
விட்டு நகர மனமில்லாமல்
நிற்கிறது சூரியன்.
செவ்வரளி
பெயர் செவ்வரளி ஆனால்
ரோஜா வண்ணமாக
இருக்கிறது.
அழுகை
ஊரெல்லாம் கூடி அழுகிறது
அழாதிருப்பது செத்துக் கிடக்கும்.
அவன் மட்டும் தான்.
நிழல்
என் முதுகு சூரிய ஒளியின்
சுமையைத் தூக்க நான் என்
நிழலை மிதித்து நடக்கிறேன்.
குருப்பெயர்ச்சி
குரு பெயர்ந்தென்ன லாபம்
நான் இங்கே தானே
இருக்க வேண்டியிருக்கிறது.
(ஞான ரதம் மார்ச் 1986)
