துளி 263/நானும் புத்தகக் காட்சியும்

அழகியசிங்கர்

நான் இந்த சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். 5 புத்தகங்கள் என்னுடைய புத்தகங்கள். இரண்டு புத்தகங்கள் மற்ற எழுத்தாளர்களுடையவை.

முதன் முறையாக ‘என்பா’ சார்பில் இரண்டு கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.

என்னுடைய புத்தகங்களில் ஒன்றான ‘துளிகள் 3’ பற்றி உங்களிடம் கூற விரும்புகிறேன்.

இது ஒரு நாட்குறிப்பு மாதிரியான புத்தகம். நீளமான கட்டுரையாக இருக்காது. இது ஒரு விதத்தில் பல்வேறு அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. படிக்கச் சுவாரசியமாக இருக்கும்.

நான் இப்போது எழுதுவதும் ‘துளி’ என்ற தலைப்பில்தான். பின்னால் இதுவும் ஒரு புத்தகமாக மாறக் கூடும். இதுவரை மூன்று துளிகள் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளேன்.மூன்றாவது துளி புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை இங்கு கூற விரும்புகிறேன்.

துளிகள் 149 என்ற பகுதியில் ‘உலக கடித தினமாம்’ என்ற தலைப்பின் கீழ் இப்படி எழுதி உள்ளேன்.

அன்புள்ள நட்ராஜிற்கு, (சந்தியா பதிப்பகம்)

என்றும் 24

என் முப்பது ஆண்டு பதிப்பக அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டது, என்றும் 24. அதற்கும் கீழே அச்சடித்தால், அச்சு அடித்துக் கொடுப்பவருக்கு என்ன கிடைத்து விடப் போகிறது.

அதனால் என்றும் 24. புத்தகங்களை அச்சடித்து வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். விற்பனையாளர்களுக்குப் புத்தகங்களை விற்கக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே கொடுத்த புத்தகங்களைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள யோசித்துக் கொண்டிருக்கிறேன். தினமும் கார்டில் கடிதம் எழுதி என் கையெழுத்தைச் சரிசெய்ய விரும்புகிறேன். நீங்கள் எதுவும் எழுதவேண்டாம். ஆனால் கார்டு கிடைத்தது என்று தகவல் கொடுத்தால் போதும். கவிஞர் கடற்கரையிடம் மட்டும் இதுமாதிரி நான் எழுதும் கார்டைக் காட்டாதீர்கள். யாராவது நான் எழுதும் இக் கடிதத்தைப் படித்துச் சிரித்தால் மொபெல் போனில் படம் பிடித்து அனுப்புங்கள்.

அன்புடன்

அழகியசிங்கர்

சென்னை புத்தகக் காட்சியில் (395 – 396) இந்தப் புத்தகமும் விற்பனைக்குள்ளது. இப்போது எத்தனைப் பிரதிகள் அச்சடிக்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை.

அட்டைப் படம் 6 வயது நிரம்பிய என் பேத்தி ஆரபி வரைந்தது. இந்தப் புத்தகத்திற்கு மேலும் அழகூட்டுவது இந்த அட்டைப் படம்தான்.