பனி: வினையும் விழைவும்/சிறகா

பனி பொழியும் இவ்வேளை
நெற்றிப் பொட்டில்
மூக்கின் உச்சியில்
உள்ளூர கோர்த்து
நிற்கும் நீர்த் திவலைகள்

மின்னலாய் வெளியேறிய
அடுக்குத் தும்மலில்
துள்ளிக் குதித்து
சிற்றாறாய் வெளியேறின திசை ஒடித்து.

தொண்டைக்குள் இருந்து
இடி முழக்கம்
இருமலாய்த் தொடர

நாடி நரம்பெல்லாம்
வலியின் நர்த்தனம்.

ஆனால் பனியே,
வெண்பனியே,
உன்னை இரசித்துப் பார்த்து
மனம் மகிழும் பொழுதில்

ஐயோ, வெயிலில் நீ உருகும்
வேதனையை ஆதூரமாய்ப் பார்க்கவோ
இப் பூவுடல்.