முதல் சுற்று – 46 வது சென்னை புத்தகக் காட்சி!/ஜெ.பாஸ்கரன்

இரண்டு நாட்கள் திருச்சி, ஶ்ரீரங்கம், திருநெடுங்களம், உறையூர், லால்குடி (இலால்குடியாம்!) எனச் சுற்றி வந்த களைப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. போதாக்குறைக்கு, காலையில் அயரவைக்கும் வேலை பி.எச்.சி யில். எல்லாவற்றையும் மீறி, மதியம் மூன்று மணிக்கு என் பார்த்தசாரதியுடன் கிளம்பி, 46 வது புத்தகச் சந்தைக்குச் சென்றேன் – சந்தையா, கண்காட்சியா? மாலன் அவர்கள் போஸ்ட் பார்க்கவும்!
இன்று ‘ட்ரயல் ரன்’ என்பதால் முன்னமேயே முடிவு செய்தபடி நான்கு அல்லது ஐந்து அரங்குகள் மட்டும் விஸிட் செய்ய நினைத்திருந்தேன்! அதிசயமாக எளிதில் கார் பார்கிங் கிடைத்துவிட, டிக்கட் வாங்கிக் கொண்டு அருகிலிருந்த 4 வது நுழைவாயில் வழியே உள்ளே சென்றேன். ஒல்லியாக ஒரு பெண் ஸ்டால்களின் வரிசை எண்கள் கொண்ட பேப்பரைக் கொடுக்க, இன்னும் ஒல்லியான மற்றொரு பெண் இரண்டு நிமிடம் டிக்கட்டை முறைத்துப் பார்த்து, பாதி கிழித்துக் கையில் திணித்தது!
குறுகலான, மேடும் பள்ளமுமான பாதை – இரண்டு முறை தடுக்கியது; முதியவர்கள் கவனமாக நடக்க வேண்டும், புத்தகக் கட்டு வாங்க வந்து, புத்தூருக்குக் ‘கட்டு’ போட்டுக்கொள்ள போய்விடக் கூடாது – பிரகாசமான விளக்கொளி, ஏராளமான புத்தகங்கள்! எல்லா ஸ்டால்களிலும் எல்லா பதிப்பகத்தின் புத்தகங்களும் கிடைக்கின்றன.
எப்போதும்போல், வம்சிதான் முதலில் கண்ணில் பட்டது. முகமலர்ச்சியுடன், வணக்கம் சொல்லி வரவேற்றவர் கே.வி.ஷைலஜா. இந்த வருடம் ஒரு நாவலும், பயணக் கட்டுரை நூலும் எழுதியதாகச் சொன்னார். மொழிபெயர்ப்பு நெடுங்கதைகள் ஒவ்வொன்றையும் புத்தகமாக – 25 – 30 ரூபாய் விலையில் – வெளியிட்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. அவரது ‘சஹிதா’ நாவலையும், அவர் தொகுத்திருந்த ‘பச்சை இருளனின் சகா பொந்தன்மாடன்’ – தமிழ் மலையாளச் சிறுகதைகள் தொகுப்பையும் எடுத்துக்கொண்டு வந்தேன். புன்னகையுடன் கையெழுத்திட்டுக் கொடுத்தார். பணம் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ‘இது உங்கள் உழைப்பு, பணம் கொடுத்து வாங்குவதுதான் மரியாதை’ என்றேன். அவரது அக்மார்க் புன்னகையுடன் மறுத்து, ‘பயணக் கட்டுரை நூல் இரண்டு நாட்களில் வந்துவிடும், கொடுக்கிறேன்’ என்றார்.
மூக்குக் கண்ணாடிக்குள் முழி பிதுங்க, கையில் கட்டைப் பை நிறையப் புத்தகங்களுடன், ஐம்பது வயது மதிக்கத் தக்கவர், திருவிழாவில் காணாமற்போன குழந்தையைப் போல நின்று கொண்டிருந்தார். இரண்டு கேன்களில், காபி, டீ விற்றுக்கொண்டிருந்தவர் பிஸியாக வழியில் நின்று கொண்டிருந்தார்.
விருட்சம் அரங்கில் கிருபானந்தன், அழகிய சிங்கர் இருவரும் இருந்தனர். எழுத்தாளர் கோணங்கி வந்து சேர்ந்து கொண்டார். குவிகம், விருட்சம் மற்றும் வேறு பதிப்பகங்களின் புத்தகங்களும் இருந்தன. சிறிது நேரம் ‘அளவளாவி’விட்டு, ஸிந்துஜாவின் ‘காலமும் சில கணங்களும்’ சிறுகதைத் தொகுப்பை வாங்கிக் கொண்டு கிளம்பினேன். கிருபானந்தமும் உடன் வர, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வந்தேன். இருவாட்சி (இலக்கியத் துறைமுகம் பொங்கல் சிறப்பு வெளியீடு 14) -யில் என் கட்டுரை வெளியாகி உள்ளது; அதன் பிரதி ஒன்றையும், ‘ஆறுமுகத் தாத்தாவின் ஏழாவது முகம்’ சிறுகதைத் தொகுப்பையும் (எஸ்.சங்கரநாராயணன்) வாங்கிகொண்டு, பதிப்பாளர் உதயக்கண்ணனிடம் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன்.
திருப்பத்தில், மாஸ்க், முகத்தை மறைத்தாலும், சோகமான முகத்துடன் வந்துகொண்டிருந்த கணேஷ்பாலாவைப் பார்த்துப் பேசினேன். அம்மாவை இழந்த சோகம் – ஏதோ புத்தகம் கொடுக்க வந்ததாய்க் கூறினார். ஈடு செய்ய முடியாத இழப்புதான். இருந்தாலும் தன் வேலையில் தவறாமல் யாருக்கோ புத்தகம் கொடுக்க வந்துள்ளார்.
மணிமேகலைப் பிரசுரத்தில் லேனா தமிழ்வாணனைப் பார்த்தேன்.. சிறிது நேரம் அவர்களது ’46 புத்தக வெளியீட்டு விழா’ குறித்துப் பேசிவிட்டுக் கிளம்பினேன். சுவாசம், சந்தியா, எழுத்து, சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டால்களைப் பார்த்தபடி சென்றேன். உயிர்மையில் ‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ வாங்கிக்கொண்டு (போன முறை கிடைக்காத ‘கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ நிறைய இருந்தன, விலை சற்றுக் கூடுதலுடன்!) பின் அட்டையில் சிரிக்கும் சுஜாதாவைப் பார்த்தபடி (‘கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல், சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்’) புஸ்தகா ஸ்டாலைத் தேடினேன்.
புஸ்தகாவில் என் இரண்டு புத்தகங்கள் (மட்டும்) – ‘இலக்கிய முத்துக்கள் இருபது’. ‘தி.ஜா. 50 சிறுகதைகள் ஒரு பார்வை’ – வைத்திருந்தார்கள். யாராவது வாங்கினார்களா? நான் கேட்கவில்லை!
லேடீஸ் ஸ்பெஷல் ஸ்டாலில் கிரிஜா ராகவன் புத்தகங்களும் (இன்னும் 5 புத்தகங்கள் வர வேண்டியிருக்கிறது என்றார்), தீபாவளி மலர்களும், சந்தா படிவங்களும் இருந்தன. காலண்டர் கொடுப்பதாகவும் சொன்னார்கள். இரண்டு முறை போன போதும் கிரிஜா ராகவன் ஸ்டாலில் இல்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என வெளியே வந்தேன். வரும் வழியில் தன் வாசகர்களுடன் டீ அருந்தியபடி ‘விஷ்ணுபுர’த்தில் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன். மற்றொரு ஸ்டாலில் அமைதியாகத் தனியாக ஏதோ புத்தகம் எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தவர் ‘குங்குமம்’ ஆசிரியர் சிவராமன். ஒரு ‘ஹாய்’ சொல்லி, புகைப்படமும் க்ளிக்கிக் கொண்டு வெளியில் சூடான டீ அருந்திவிட்டுக் கிளம்பிவிட்டேன்! ஞானாம்பிகாவுக்கு அடுத்தமுறை செல்ல வேண்டும்!
வொர்க்கிங் டே – நான் போன நேரம் கொஞ்சம் கூட்டம் குறைவு. ஆனாலும் பல இளைய தலைமுறைகளைக் காணமுடிந்தது. திரைப்படம் சம்பந்தப் பட்ட புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் பக்கம் அவர்கள் பார்வை இருந்தது குறிப்பிடத்தக்கது!