
அசை போடுகிற இந்த மாடு என்னிடம்
எதையோ சொல்ல விரும்புவது போல எனக்குத்
தோன்றுகிறது. கேட்காத குரல்கள்
எல்லாம் என்னோடு ஏதேதோ பேசுகின்றன.
போகாத ஊர்களுக்கெல்லாம் வழிகள்
எனக்குத் தெரியும். படிக்காத புஸ்தகங்களை
எல்லாம் பற்றி நான் நிறையவே பேசுவேன்
படாத அனுபவங்களும் நெருப்பாக எரிகின்றன
கையில் அகப்படாத ஒன்றைப் பிடிக்க முயலுகிறேன்.
காதுகளில் அடங்காத ஒன்றைக் கேட்ட விரும்பிக்
காத்திருக்கிறேன். கையால் தொடமுடியாததைத்
தொட எட்டுகிறேன். ஒளி எங்கேயோ தெரி
கிறது. கால்கள் இருட்டில் தவிக்கின்றன
கால்களில்
கண்கள் இல்லாமற் போனது சரியல்லவே!
