
அன்று நிழல் அவனிடம் மிகவும் கோபமாகச் சொன்னது.
‘ இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. நீ மட்டும் வெளியே போகும்போது குடை பிடித்து , செருப்புப் போட்டுச் சென்று உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாய். ஆனால் நான் தரையில் கிடந்து அடிபட வேண்டியதாக இருக்கிறது . வெயில் காலத்தில் தரையின் சூடு பொறுக்க முடியவில்லை. மழைக்காலத்திலோ ஒரே சகதி . ‘
‘சில சமயம் முன்னாலும் சில சமயம் பின்னாலும் தரையில் கிடந்து அவதிப்படுகிறேன். சில சமயம் நடுவில் வரும் என்னை நீயே உன் கால்களால் போட்டு மிதிக்கிறாய் . கொஞ்சம் கூட என் மேல் இரக்கம் இல்லை உனக்கு. என்னால் இனி மேலும் பொறுக்க முடியாது. என்னை விட்டுவிடு. நான் தனியே போய்க் கொள்கிறேன்’ என்ற நிழலைப் பார்த்து அவன் சிரித்தான்.
‘ நீ என்னோடு தானே வரவேண்டும். என்னை விட்டு எப்படி நீ பிரிய முடியும்’ என்றவனுக்கு ‘ நீ இன்று ஒரு நாள் வீட்டுக்குள்ளேயே இரு . ஒரு நாளாவது எனக்கு விடுதலை கொடு. நான் மிகவும் கஷ்டப்படாமல் இருப்பேன்’
என்று சொன்னது. அவனும் ‘ சரி இன்று ஒரு நாள் நான் வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன்’ என்றான். ‘ ஆனால் இதை மீறினால் உன் பாடு ஆபத்து’ என்று எச்சரித்தது நிழல். சிரித்தபடி அன்று காலை முதல் மாலை வரை வீட்டுக்குள்ளேயே இருந்தான்.
ஆனால் மாலையில் போன் அடித்தது. அவனது நண்பன் ஒருவன் ஆஸ்பத்திரியில் இருப்பதாக செய்தி வந்தது. போக வேண்டிய கட்டாயம். வெளியே கிளம்பினான். ‘போகாதே ‘ என்று எச்சரித்தது நிழல் . ‘ சீ , சும்மா கிட ‘ என்று அதன் பேச்சை அலட்சியப்படுத்தி விட்டு வெளியே கிளம்பினான்.
வெளியே கொஞ்ச தூரம் தான் போயிருப்பான். அவனோடு சேர்ந்தே தரையில் படுத்தபடி வந்த அந்த நிழல் திடீரென்று கோபத்தோடு பெரிய உருவம் ஆகி எழுந்தது . அவனைப் பிடித்து இழுத்துக் கீழே சாய்த்தது . தரையில் வேகமாக மோதி விழுந்து அடிபட்ட அவனைச் சுற்றியுள்ளவர்கள் தூக்கி வந்து வீட்டில் கிடத்தினார்கள். பலன் இல்லை. உயிர் போய்விட்டு இருந்தது.
குடும்பத்தினர் அழுது முடித்து , அனைவரும் வந்து அவனைப் பாடையில் ஏற்றித் தூக்கிக் கொண்டு போகும்போது அங்கே தெரிந்தது பாடையின் நிழல் மட்டும்தான். அவனது நிழல் நிரந்தரமாக விடுதலை ஆகி மறைந்து போய் இருந்தது.
————-
