டி.எஸ்.கே./எஸ்.எல். நாணுடி.எஸ்.கே.

சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று எழுத்தாளர் மணவாளனின் புத்தக வெளியீட்டு விழா.. கோலாகலமான ஏற்பாடுகள்.. பல முன்னணி எழுத்தாளர்கள் அரங்கில் ஆஜராகியிருந்தனர். அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. காரணம் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பதிப்பாளர் திலகம் என்று எல்லோராலும் கொண்டாடப்படும் அமிர்தலிங்கம்.. அருமையான பேச்சாளர்.. அவருடைய பேச்சைக் கேட்கவே எல்லோரும் ஆவலோடு காத்திருந்தனர்.
புத்தகம் வெளியிடப்பட்டு முதல் பிரதி பெறப்பட்டு எழுத்தாளர்கள் பலர் மணவாளனின் எழுத்தையும் புத்தகத்தையும் புகழ்ந்தனர்.. நிறைந்திருந்த அரங்கு தொடர்ந்து கரகோஷம் எழுப்பி சூழ்நிலையை திருவிழாவாக்கியது..
இறுதியாக அமிர்தலிங்கம் உரையாற்ற வந்தார்.
கரகோஷம் அந்தப் பகுதியையே அதிரச் செய்தது..
முதலில் சம்பிரதாயமாக விழாவை ஏற்பாடு பண்ணியவர்களைப் பாராட்டினார். பிறகு மணவாளனைப் பற்றியும் அவருடைய புத்தகத்தைப் பற்றியும் விரிவாகப் பேசினார்.. புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுப் பேசியதை பலர் வியந்து பார்த்தனர்.. காரணம் இதற்கு முன் பேசிய சிலர் புத்தகத்தைப் படிக்காமல் பொதுவாகப் பேசி தப்பித்துச் சென்றிருந்தனர்..
உரையின் முடிவில் அமிர்தலிங்கம் கொஞ்சம் நிதானித்தார்..
பார்வையாளர்களை ஒரு முறை பார்த்தார்..
பிறகு நிதானமாக..
“இப்ப நான் சொல்லப் போற விஷயம் இந்த விழாவுக்கு சம்பந்தப்பட்டது இல்லை.. ஆனா இப்பலாம் நான் எங்க பேசினாலும் இந்த விஷயத்தைச் சொல்லாம முடிக்க மாட்டேன்.. உங்களுக்கேத் தெரியும்.. நான் நிறைய புஸ்தகங்கள் படிப்பேன்.. அதுவும் தெருவோர பழைய புத்தகக் கடைகளை தேடிப் பிடிச்சு அதுல கிடைக்கிற வைரங்களையும் வைடூரங்களையும் ஆனந்தமா படிச்சு அனுபவிப்பேன்.. நல்ல எழுத்துக்கள்னா அந்த எழுத்தாளரை தேடிப் பிடிச்சு அவரோட புஸ்தகங்களை என் பதிப்பகம் மூலமா வெளியிட்டிருக்கேன்.. ரெண்டு மூணு வருஷங்களுக்கு முன்னால ராயப்பேட்டைல ஒரு பழைய புத்தகக் கடைல மேஞ்சிட்டிருந்த போது அந்த கடைக்காரர் ஒரு புஸ்தகத்தை நீட்டி “இதைப் படிச்சுப் பாருங்க சார்.. ரொம்ப நல்லா இருக்கும்” அப்படின்னு சொன்னார். வாங்கிப் பார்த்தேன்.. சரணாலயம்னு புஸ்தகத்தோட பேர்.. யாரோ டி.எஸ்.கே. அப்படிங்கறவர் எழுதியிருந்தார்.. அவரைப் பத்தி அதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை.. ஆனா கடைக்காரர் ரொம்ப சொன்னதுனால வாங்கிட்டுப் போய் ஆர்வம் இல்லாம படிக்க ஆரம்பிச்சேன்.. ஆனா முதல் வரிலேர்ந்தே அந்த ஆசிரியர் என்னைக் கட்டிப் போட்டுட்டார்.. அன்னிக்கு ராத்திரியே படிச்சு முடிச்சேன்..”
இதைச் சொல்லிவிட்டு மீண்டும் கொஞ்சம் நிதானித்தார்..
“உண்மையைச் சொல்லப் போனா அன்னிக்கு என்னால தூங்க முடியலை.. அந்த எழுத்து என்னை என்னமோ பண்ணித்து.. அந்தக் கதைல வந்த முக்கியமான கதாப்பாத்திரங்கள் என் மனசுல புகுந்து ரொம்பவே பாதிச்சுது.. அந்த எழுத்தாளரை எப்படியாவது தேடிப் பிடிக்கணம்னு புஸ்தகத்துல இருந்த முகவரிக்குப் போனேன்.. மைலாப்பூர் மத்தள நாராயண தெருவுல இருந்த அந்த வீட்டுல வேற யாரோ இருந்தாங்க.. அவங்களுக்கு டி.எஸ்.கே. பத்தித் தெரியலை.. பக்கத்து வீட்டுல விசாரிச்சேன்..
“ஓ.. அந்தக் கிறுக்கனா? ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்த்திட்டிருந்தான்.. ஒழுங்கா இருந்திருக்க வேண்டியது தானே? கதை எழுதறேன்னு எதையோ கிறுக்கி அதை புஸ்தகமாப் போட யார் யாரையோக் கேட்டுப் பார்த்தான்.. எதுவும் நடக்கலை.. கடைசில பொண்டாட்டியோட நகையை வித்து புஸ்தகம் கொண்டு வந்தான்.. ஆனா போணி ஆகலை.. ஒழுங்கா வேலைக்குப் போகாததுனால வேலையும் போச்சு.. ஊரைச் சுத்திக் கடன்.. வேற வேலைக்குப் போன்னு பொண்டாட்டி எவ்வளவோ சொல்லிப் பார்த்தா.. ஆனா அவன் கேட்கலை.. எழுத்து புஸ்தகம்னு அலைஞ்சிட்டிருந்தான்.. ஒரு கட்டத்துக்கு மேல அவன் பொண்டாட்டி வெறுத்துப் போய் அவனை விட்டுப் பிடிஞ்சிட்டா.. அப்புறம் கடங்காரன் தொல்லை அதிகமாக வேற வழியில்லாம இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டான்.. அதுக்கப்புறம் இப்ப எங்க இருக்கான்.. என்ன ஆனான்.. எதுவும் தெரியாது”
இதைக் கேட்ட உடனே எனக்கு ரொம்பவே மனசு கஷ்டப் பட்டுது.. ஒரு நல்ல எழுத்தாளனை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியாம போயிருத்தேன்னு வருத்தம்.. அன்னிலேர்ந்து சரணாலயம் எழுதின டி.எஸ்.கே.வை வலை போட்டுத் தேடிட்டிருக்கேன்.. நான் பேசற ஒவ்வொரு மீட்டிங்குலயும் அவரைப் பத்தி யாராவது தகவல் சொல்லமாட்டாங்களா அப்படிங்கற ஆதங்கத்துல இருப்பேன்.. ஆனா இதுவரை எதுவும் நடக்கலை.. உங்கள்ள யாருக்காவது எப்பவாவது அந்த எழுத்தாளரைப் பத்தின தகவல் தெரிஞ்சா உடனே என்னை காண்டாக்ட் பண்ணுங்க”
அமிர்தலிங்கம் முடித்தவுடன் அரங்கில் மௌனம்..
எல்லோருடமும் விடைபெற்றுக் கொண்டு அவர் கிளம்பினார்..
அவருடைய கார் புத்தகக் கண்காட்சியின் வெளி வாசலைக் கடந்து பிரதான சாலையை அடைந்தது நகர்ந்தது..
வெளி வாசலைத் தொட்டு இருந்த நடைபாதையில் ஒருவர் “சரணாலயம் நாவல்.. அம்பது சதவிகித தள்ளுபடி விலையில் – டி,எஸ்.கே.” என்ற அட்டையுடன் நின்றிருந்ததை அமிர்தலிங்கம் கவனிக்காததற்கு யாரை குறை சொல்வது?