முல்லா நஸ்ருதீனும் தத்துவஞானிநீட்ஷே/எம்.டி.முத்துக்குமாரசாமி

தமிழின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கிள் மால்ட் விஸ்கியைப் பார்த்து சப்புகொட்டுவது போல முல்லா நஸ்ருதீன் தத்துவஞானி நீட்ஷேயின் நூல்களை அலமாரியில் பார்த்து சப்புக்கொட்டிக்கொண்டு புத்தகத்தை எடுக்க கை துறுதுறுத்தாலும் மனம் ஒத்துழைக்காததால் அங்கேயும் இங்கேயுமாய் நடைபழகிக்கொண்டிருந்தார். சூரியன் அஸ்தமித்துவிட்டது என்றாலே தத்துவ வாசிப்புக்கு முல்லா நஸ்ருதீன் தவியாய் தவிப்பார் என்று உங்களுக்குத் தெரியும்தானே. ஆனால் நீட்ஷேயை மட்டும் கையால் தொடக்கூடாது என்று நஸ்ருதீன் மனதிற்குள் சங்கல்பம் எடுத்திருந்தார். பின்னே அந்த மனிதர் பாட்டுக்கு கடவுள் சீக்கு கட்டிலில் கிடக்கிறார், இறந்து போய்விட்டார் என்றெல்லாம் அறிக்கை விடுகிறாரா முல்லாவுக்கு வியர்த்து கொட்டிவிடுகிறது.
ஆனாலும் ,’நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்’ என்ற தலைப்பு மிகவும் கவர்ச்சிகரமாக அல்லவா இருக்கிறது. நஸ்ருதீனும் என்னதான் செய்வார். புத்தகத்தை எடுத்து பிரித்துவிட்டார். அவர் கண்ணில் பட்ட முதல் வாக்கியமே அவரை அசர அடித்துவிட்டது,“ உண்மையற்றதே வாழ்க்கையின் அடிப்படை நிபந்தனை என்பதை அடையாளம் காண்பது மரபான மதிப்பீடுகளை அபாயகரமாக அணுகுவதாக இருந்தாலும் அதைச் செய்யும்போதே தத்துவம் தன்னை நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் நிலைநிறுத்திக்கொள்கிறது”. உண்மை எது என்று தெரியாமல் எப்படி உண்மையற்றதை அனுமானிப்பது? நஸ்ருதீன் சென்னையில் நடைபெறும் சர்வதேச புத்தகக்கண்காட்சிக்குச் சென்று மொழிபெயர்ப்பு நூல்களை வாங்குவது என்று முடிவு செய்தார். மொழிபெயர்ப்பு நூல்களில் உண்மை அதிகமும் இருப்பதால்தானே அவற்றை இவ்வளவு அதிகமாக தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள்? அட்டைப்பட பத்தியில் ‘உண்மை’ என்ற வார்த்தை வந்திருக்கும் நூல்களை எல்லாம் தன் பர்ஸ் காலியாகும் வரை நஸ்ருதீன் வாங்கினார். அவற்றுள் ஒரு மொழிபெயர்ப்பு நூலில் ஒரு வாக்கியம் இவ்வாறாக இருந்தது: “ இந்தப் புத்தகம் இதுவரை திறந்து காட்டாத ஆண்களின், பெண்களின் உண்மைகளைப் ( hitherto undisclosed truths about men and women) பற்றிப் பேசுகிறது.”