புத்தகக் கண்காட்சி/கணேஷ்ராம்

இரண்டு தினங்கள் தங்கி மூன்றாவது நாள் கிளம்ப வேண்டிய சூழலில் புத்தகக் கண்காட்சி கொஞ்சம் அதிகம் தான். அதிலும், குடும்ப சகிதம், மனைவி, ஒரு மாத விடுப்பில் வந்திருக்கும் மகள் மற்றும் மருமகன் உள்பட நாலு பேர்.

உள்ளே நுழையும் போதே ஏழரை. பொதுவாகவே ஏழரை நல்ல வார்த்தை இல்லை.

அதுவும் மனைவியாகப் பட்டவள் ஞானாம்பிகாவைப் பார்த்த பார்வை வேறு, அதன் பிறகு என்னைப் பார்த்த பார்வை வேறு.

திங்கள் கிழமைகள் அவள் திங்காத கிழமைகள். அதாவது, திங்கட்கிழமை வெளியில் சாப்பிடாத விரதம். கண்கண்ட தெய்வம் கணவன் நல்வாழ்வுக்காக அவளது தியாகம். அதை மீறினால் கணவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்னும் பயம்.

என் போதாத காலம் சமீப காலங்களில் வெளியே செல்லும் நாட்கள் எல்லாம் சொல்லி வைத்தாற் போல திங்கட்கிழமைகளில் அமைந்து விட்டது தான்.

அம்மாதிரி இக்கட்டுகளில் அவள் என்னைத் தாளிப்பதை விட, அவள் விரதத்தை மீறுவதால் வரும் சிக்கல் குறைவாகத் தான் இருக்கும் என்று தோன்றும்.

ஞானாம்பிகாவைக் கடும் பிரயாசத்தில் கடந்து டிக்கெட் வாங்கச் சென்றால் எல்லா கவுன்ட்டர்களின் துவாரங்களிலும் பிளாஸ்டிக் நாற்காலிகளை நுழைத்து இருந்ததில் அதிசயித்து… (இதில் எப்படி உட்காருவார்கள்?)

மூடியிருக்குப்பா..

அதுவும் ஒரு விதத்தில் சௌகரியமாகப் போய்விட்டது.

மனைவிக்குப் பயந்து ஓடியது, வெளி உலகிற்கு டிக்கெட்டுக்காக ஓடியது போல காட்சிப்பிழை ஏற்படக் காரணமாகி விட்டது.

நல்லவேளை, ஒரு இடத்தில் டிக்கெட் விநியோகம் இருந்தது. அதன் தற்காலிக சுவர்களில் இருந்த க்யூ ஆர் கோடுகளில் ஆனமட்டும் தடவி விட்டு, ஒரு பெண்மணி கவுன்ட்டரில் குனிந்து ரெண்டு டிக்கெட் எவ்வளவுப்பா?

இருவது ரூவாக்கா..

அத்தை அக்காவானதில் புளகாங்கிதமடைந்து, அந்த அம்மணி தொழில்நுட்பத் தோல்வியைத் தற்காலிகமாகப் புறந்தள்ளி, கைப்பையின் கடைக்கோடி வரை நீண்ட நேரம் துழாவி, பீடி போல் சுருட்டி இருந்த இரண்டு பத்து ரூபாய்களை ஒன்றன் பின் ஒன்றாக மிகுந்த நிதானத்துடன் எடுத்து, அரையிருட்டில் அண்ணாத்திப் பார்த்து..
என் அவசரங்கள் அத்தை முன் தவிடு பொடியாகி விட்டன.

என்னுடைய போதுகிற காலம், நாங்கள் நுழைந்த வரிசையிலையே விருட்சம் ஸ்டால் இருந்தது.

அழகிய சிங்கர் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தார். யார் கலைத்திருப்பார்கள்?

போன முறை பார்த்ததற்கு இந்த முறை லேசாக வயதாகியிருந்தார். அது என்னமோ என்னைத் தவிர எல்லோருக்கும் வயதாகிக் கொண்டே இருக்கிறது.

கிருபானந்தன் கர்ம சிரத்தையாக யாருக்கோ பில் போட்டுக் கொண்டு இருந்தார். நாணு அவர்கள் அவர் முன்னால் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்டாலின் (முதல்வர் பெயர் இல்லை) வெளியே இந்திரநீலன் சுரேஷ் நின்று கொண்டு இருந்தார்.

நான் நேராக கிருபானந்தன் சாரிடம் சென்று லேசாகக் கனைத்தேன்.

மதியம் முதல் தெருத்தெருவாக அலைந்து கொஞ்சம் கண்றாவியாக இருந்த என்னை சுவாரஸ்யமில்லாமல் கண்ணாடி வழியாகப் பார்த்தார்.

நல்ல வேளையாக அடுத்த கடையைப் பார்க்கச் சொல்லவில்லை. அல்லது அதற்குள் நான் முந்திக் கொண்டு “நமஸ்காரம் சார்…‌ கணேஷ்ராம்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

உள்ளூர உதைப்பாக இருந்தது. குடும்பத்தார் முன் என்னை யார் என்று கேட்டுவிடப் போகிறாரே என்று.

நல்லவேளையாக அவர் என்னிடம் “உங்களைத்தான் தெரியுமே எனக்கு” என்று கூறிவிட்டு மௌலி மௌலி என்று ஸ்டால் உள்ளே அழைக்க, அழகிய சிங்கர் வெளியில் வந்து மிகப்பெரிய ஆச்சரியத்துடன் “வாங்க.. வாங்க” என்று உள்ளே அழைத்துச் சென்றார்.

போகும் முன், திரு நாணுவிடமும் திரு இந்திர நீலன் சுரேஷ் அவர்களிடமும் என்னை அறிமுகப் படுத்தினார்.

உள்ளே நுழைந்தவுடன் “அலர்ட் ஆறுமுகம்” மாதிரி தன் படைப்புகளில் ரவ்வண்டு எடுத்து ரெண்டு மூணு கிலோ கையில் கொடுத்து விட்டார்.

நானாக அவரிடம் இ.நீ.சுரேஷ் அவர்களின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகம் கேட்க, அதையும் கொடுத்தார்.

தூக்க மாட்டாமல் வெளியே கிருபானந்தன் சாரிடம் கொடுக்க, அவர் இதையெல்லாம் எப்போ படிப்பீங்க?

நான் “தெரியவில்லை சார்… மே பீ போஸ்ட் ரிடையர்மென்ட்”

என் மனைவி அவள் பங்குக்கு இரண்டு புத்தகங்கள்.

நான் ஒரு அசட்டு இளிப்பில் உங்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்க, சலங்கை ஒலி மாதிரி நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம்.

அதற்குள் , என் மனைவியிடம் நாணு சாரை அறிமுகப்படுத்தினேன்… சார் தான், காத்தாடி ட்ரூப்பின் ஆஸ்தான ரைட்டர்.

அவள் ஒரு !! ஓ!

நான் அவரிடம், என் மாமனார் காத்தாடி அவர்களின் நண்பர் என்று கூறினேன்.
“எப்படி?” என்று அவர் என் மனைவியைக் கேட்டார்.

“காத்தாடி சாரோட அண்ணன் கிருஷ்ணமூர்த்தி.. அப்புறம் லலிதாக்கா..வெங்கி அண்ணா” என்று எனக்கு அடுத்த முப்பது வருஷத்துக்குப் புரியாத மாதிரி ஏதோ பேசிக் கொண்டார்கள்.

அதற்கு மேல் தாங்காது என்று நாணுசார் விடைபெற்று சடுதியில் விரைந்தார்.

நாங்களும் எங்கள் புத்தகங்களை சுமக்க மாட்டாமல் சுமந்து மருமகனுக்கும் பெண்ணுக்கும் சில புத்தகங்கள் வாங்கினோம்.

என் மருமகன் ஒரு தீவிர தமிழ் புத்தக விசிறி. ஆனால், என் மகள், இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் பூனாவில் ஒரு நாள் பாரதியார் கவிதைகள் புத்தகம் வைத்து, ரொம்ப மெனக்கெட்டு “அம்மா… பாரதியார் வரைஞ்சுட்டேன்” என்றாள்.‌ ஓடிப் போய் பார்த்தால், ஒரு வெள்ளைக் காகிதத்தில் பாரதியார் என்று எழுதியிருந்தாள். அவளுக்குத் தமிழுடனான பரிச்சயம் அவ்வளவு தான்.

அவளுக்காக முப்பது நாளில் தமிழ் மாதிரி ஏதாவது கிடைக்குமா என்று தேடிய போது, “பிச்சுப் புடுவேன் பிச்சு.. இப்போ மெதுவா தமிழ் புக்ஸ்லாம் படிக்கறேன் தெரியுமா” என்றாள்.
கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அவர்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, நான் மட்டும் F33 சந்தியா பதிப்பகம் தேடி அலைந்து அலைந்து, பத்து நிமிடம் கழித்து என் மனைவி செல்லில் அழைத்து, “எங்கப்பா தொலைஞ்சு போனீங்க.. நாங்க ரெண்டே நிமிஷத்துல சந்தியா வந்துட்டோம்.. உங்களைக் காணோம்?”

அது என்னமோ F sequence மட்டும் அஞ்சறைப் பெட்டியில் அஞ்சாறு ஐட்டம் ஒன்றாகக் கலந்த மாதிரி ஒரே குழப்பம்.

எப்படியோ ரமண‌மகரிஷி மாதிரி தேடி அடைந்து, கல்யாண்ஜியின் இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அதில் ஒன்று ஏற்கனவே வீட்டில் இருக்கிறது.

இதைவிடக் கொடுமை, என் மருமகப் பிள்ளை நான் எந்தக் காலத்திலோ படிப்பதற்காக “வேள்பாரி” இரண்டு பாகங்களும் வாங்கித் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு நின்றிருந்தார்.

நான் போன வாரம்தான் கோவையில் அதை மெனக்கெட்டு என் சம்பந்திக்காக வாங்கி, பெட்டியில் இடமில்லாததால் எடுத்து வரவில்லை.

என்னிடம் ஆயிரம் புத்தகங்கள் இருக்கும் என்று மருமகனிடம் பீற்றிக்கொண்டு இருக்கும் போது என் மனைவி குறுக்கிட்டு, அதில் ஐநூறு டூப்ளிகேட் என்றாள்.

நான் சந்தியாவில் பில் போடும் மனிதரிடம் வண்ணதாசன் வருவாரா என்று கேட்டேன்.
அவரை எனக்குத் தெரியும் என்ற ஹோதாவில் “போன மாசம் அவர் வீட்டுக்குப் போனேன்.. அவரால் முன் போல நடக்க முடியவில்லை” என்று சொன்னதும், அவர் “இல்லையில்லை.. பத்தொன்பது அவர் வருகிறார்” என்று சொன்னார்.

எனக்குப் பொசுக்கென்று போய் விட்டது.

பில் போட்ட பின், என் கையில் இரண்டு புத்தகங்களையும் கொடுத்த அவர், என் துவண்டு போன முகத்தைக் காணச் சகியாதவராய், “ஒரு காலண்டர் வேணும்னாத் தரட்டுமா” என்றார்.

நான் வேண்டாம் என்று மறுத்தேன்.

“வீட்ல இனுமே ஆணி அடிக்க முடியாதுங்க”
“அப்படியா”
“ஆமாம்.. என் மனைவி ஏற்கனவே ஏழெட்டு ஆணி அடிச்சு வச்சிருக்கா.. வீட்டுக்குப் போனவுடனே முதல் காரியமா என்னை அதில் தொங்க விட்டுடுவா.. என்னை விடப் பெரிய காலண்டர் எங்க கிடைக்கும் ” என்றேன்.
அவர் சிரிக்கவில்லை.

அவர் வீட்டிலும் ஏழெட்டு ஆணி இருக்குமாயிருக்கும்.