கடல் தானாக வரும்/லட்சுமி மணிவண்ணன்

1

கடற்கரையில் இருந்து
சிப்பி கொண்டு வந்தேன்
சங்கு கொண்டு வந்தேன்
சிறுமணல் கொஞ்சம்
கடலும் உடன் வந்ததை
கவனிக்கவில்லை
நெடுநாள் கழித்து
சிப்பியை தொட்டேன்
அலையடித்தது
சங்கில் கடற்காற்றின் விசில்
சிறு மணலில் கடல்
அப்போது பார்த்தது
எப்போதோ வருகிறது
எப்போதோ பார்க்கத் தானா
அப்போது காண்பது ?

2

குடிகாரன் பார்த்த சாமி
தரிசனம் தந்தார்
மங்கலாக விஸ்வரூபத்தில்
நடுங்கிய வண்ணம் .
அப்போது
குடிகாரனுக்கு அருளிய
சாமியும் மிதமிஞ்சிக் குடித்திருந்தார்

3

என்ன செய்வது இப்படி இருக்கிறது
என்றாள் ஒருத்தி
இப்படியிருப்பதுதானே
உனக்கு சௌகரியமாக இருக்கிறது
என்றானொருவன்
இப்படியிருப்பது மாறினால் எப்படியிருப்பாயோ
அப்படியிருக்கத் தொடங்கு
என்றார் பகவான்
இப்படியிருந்தால் இப்படித்தானிருப்பாய்
என்றானொருவன்
அப்படியிருந்த பின்னர் இருவரும்
வந்து சேருங்கள்
என்கிறார் பகவான்

4

முள் குத்துவது போலும் இருக்கின்றன
உங்கள் வார்த்தைகள்
குத்திக்கிழிக்கட்டும்
உள்ளிருக்கும் தேனை மீட்க
வேறு என்ன தான் வழி ?

5

என்னை என்னை புகார் சொல்லாதே
நான் வழியில் நிற்பவன்
உள்ளே போ என்று சொல்வது என் கடன்
உள்ளே இருப்பதே உட்பொருள்
உள்ளே இருப்பது
உனக்குள்ளும் இருக்கிறது
உனக்குள்ளிருப்பது தெரியவில்லையானால்
உள்ளே இருப்பதும் தெரியாது
வெளியேறு
இனி அடுத்தவருக்கானது
நேரம்

6

யாருக்கும் இல்லையென்று சொல்லாதவன்
இறைவன்
நீ எப்படி கேட்டாயோ
என்னவோ ?
குடிபோதையில் கேட்டிருந்தால்
அவனும்
குடிபோதையில்
தருகிறான்
கேட்கத் தகாததைக் கேட்டிருந்தால்
கேட்கத் தகாததை தந்து விடுகிறான்
அனைத்தையும் கேட்பவனுக்கு
அள்ளியெடுத்துக் கொள்ளச் சொல்லி
பிராந்தைத் தருகிறான்
அல்லல் கேட்டவனை அல்லல்படுத்துகிறான்
ஆகாரம் கேட்டிருந்தால்
அமுது செய்கிறான்
அறிந்து கேட்பானென்றால் மட்டும்
முன்னமே செய்கிறான்
7
முன்னர் வினைகளை ஒன்றுமே செய்ய இயலாது
கேட்கும் அத்தனைக்கும் அடியில்
அது இருக்கும்
விடை கேட்கும்
துடிகொள்ளும்
வலியேற்கும்

8

முதலில் கடற்கரைக்கு போ
சிப்பி எடுத்து வா
சங்கு எடுத்து வா
பின்னொரு நாளில் கடல் தானாக வரும்