உயிர்க்காற்று/நா.விச்வநாதன்

குறுக்கும் நெடுக்குமாய்
ஒரு பூனை
எப்போதும் அலையும்
உற்றுப் பார்த்துவிட்டு
உறுமும் விரோதமாய்.

சம்போகத்தின் போதும்
ஒலியெழுப்பிக்
களங்கப்படுத்தி
விடுகிறது.

காலைத்தூக்கம்
கெட்டுப்போகிறது.

எதிர்வீட்டுக்காரியோடு
எதைச் சாக்கிட்டும்
சண்டைபோட
இயலாமல்
சோர்ந்துபோகும்
மனைவி.

கனவாகிப் போகிறது
எல்லாமும்-

பூனை சிலநேரம்
மகிழ்ச்சியா சோகமா
புரியாது கத்தும்
வித்யாசமாய்.

அடித்துவிரட்டினால்
பாபம் சூழும்
என்ற பயம்வேறு.

ஆயிரம் முயற்சி
செய்தாலும்
நிறுத்த முடியாது
பூனையின் சப்தத்தை.

மனைவி கெஞ்சினாள்
விரட்டச்சொல்லி.

பிராண்டலும் கத்தலும்
தாவுதலும் சீறலும்
கூடவே.

கூப்பிட்டது எதுவும்
விழாது செவிகளில்.
நெஞ்சுக் குழிக்குள்ளிருந்து
கிளம்புகிறது
ம்யாவ் சத்தம்
மெலிசாய் வாலோடு
எலிவாசனை தேடும்

என் மனசு.