இலக்கிய இன்பம் 67/கோவை எழிலன்

அஞ்சுவரு பேய்மகள்

இலக்கியத்தில் பேய் என்றாலே கலிங்கத்துப் பரணியும் தக்கயாகப் பரணியும்தான் நினைவிற்கு வரும். அவ்விலக்கியங்களுக்கு வெகுகாலம் முன்பே நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் பேய்மகள் அச்சமூட்டும் தோற்றம் கொண்டவளாக வருணிக்கப் படுகிறாள்.

சூரபத்மனின் போர்க்களத்தில் உலவும் அவள் வறண்ட குழலையும் வரிசையற்ற பற்களையும் கொண்டவளாய் தன் பச்சை நிற விழிகளை உருட்டி நோக்குகிறாள். மார்பில் பாம்பை அணியாகத் தொங்க விட்டுக் கொண்டும் ஆந்தைகளைக் காதணியாகவும் அணிந்து இருக்கும் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் அசுரரின் கண்களைத் தன் நகங்களால் தோண்டித் தின்று நாற்றம் அடிக்கும் தலைகளைக் கையில் ஏந்தியவாறு அசுரரின் நிணத்தைத் தின்ற வாயால் முருகப் பெருமானின் வெற்றியைக் கொண்டாடி கூத்தாடுகிறாள்.

அசுரர்களையே அச்சுறுத்தும் இப்பாடலடிகள் திருமுருகாற்றுப் படையின் துவக்கத்திலேயே வருகின்றன

உலறிய கதுப்பின்
பிறழ்பல் பேழ்வாய்
சுழல்விழிப் பசுங்கண்
சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு
கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும்
காதின் பிணர்மோட்டு
உருகெழு செலவின்
அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய
கூர்உகிர்க் கொடு விரல்
கண்தொட்டு உண்ட
கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின்
ஏந்தி வெருவர
வென்று அடு விறல்களம்
பாடித் தோள்பெயரா
நிணம்தின் வாயள்
துணங்கை தூங்க …