கம்பனைக் காண்போம்—67/வளவ.துரையன்

வறியவன் காக்கும் சிறு வயல்

எய்என எழுபகை எங்கும் இன்மையால்
மொய்பெறாத் தினஉறு முழவுத் தோளினான்
வையகம் முழுதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக்காத்து இனிது அரசு செய்கின்றான் [180
]

[எய் என=எறி என்று; மொய்=போர்; செய்=வயல்; முழவு=மத்தளம்]

தயரதன் தம் நாட்டை எப்படி ஆட்சி செய்தான் என்று கம்பன் இப்பாடலில் கூறுகிறான். அவனுக்குப் பகைவர் என யாரும் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்கள் “எம் மீது உன் படைக் கருவிகளைச் செலுத்து” என்று வருவர். போரே செய்யாததால் போர்த்தினவு எடுக்கும் திரண்ட தோள்களை உடையவன் அவன். முழவு என மத்தளத்தை அவன் தோளுக்குக் கம்பன் உவமை கூறுகிறான். அவனது ஆட்சி செய்யும் முறைக்குக் கம்பன் மொழியும் உவமைதான் மிகவும் அருமையானதாகும்.
அதாவது ஒரு வறியவன் இருக்கிறன். அவனுக்கு இருப்பதோ மிகவும் சிறு கழனியாகும். அவனுக்கு வாழ்வை நடத்த வருமானம் ஈட்டி உதவுவது அக்கழனியாகும். அவ்வயலை அவன் எப்படிக் காப்பானோ அப்படித் தயரதன் தம் நாட்டை ஆட்சி செய்தான் எனக் கம்பன் உவமை கூறுகிறான். வரப்புயர நீர் உயரும் என்றுதான் ஔவையார் நாடு உயர்வதற்கு வழிகள் கூறும் பாடலைத் தொடங்குவார். நாட்டை ஆள்வதற்கும் உழவுத் தொழிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதைக் கம்பன் இங்கு இந்த உவமை மூலம் மறைவாக உணர்த்துகிறான் எனலாம்.