பெரியப்பா… /ஹரணி

இருபதுவேலி நிலம்வைத்து
வேளாண்மை செய்தார்..
கத்தரியும் கடலையும் பயிரிட்ட
கொல்லைகள் ஏக்கரில் கிடந்தன…
எப்போதும் ஆட்கள் வீட்டுவாசலில்
கூட்டமாய் நின்று விவசாயம் பேசினர்
திண்டில் உட்கார்ந்தபடி
நன்றாக இருந்த முன்பற்களை உடைத்துத்
தங்கப்பற்கள் கட்டிய வாயோடு
அதட்டிக்கொண்டிருப்பார்..
இரவானால் முட்டக் குடிப்பார்
கிராமத்து விழாக்களில் அரிச்சந்திரன்
வேடம் கட்டி மயானக் காண்டத்தை
ஒலிபெருக்கியில்லாமல் உரக்கப்பேசுவது
ஊர்களுக்கே கேட்கும்
நாலைந்து குதிரைகள் வண்ணங்களில்
வைத்து ரேஸில் வெல்லுவார்
தன்னுடைய பெருமைகளிலேயே
வாழ்ந்த பெரியப்பா
மூன்று தாரங்களில் பதினைந்து
பிள்ளைகளைப் பெற்றார்
பெண்பிள்ளைகள் கரையேற
ஆண்பிள்ளைகள் கறையாயின
நாற்பதாண்டுக்கால கதையிது..
இடிந்துபோன வீட்டில் எலிபேஸ்ட்டும்
இருபது தூக்கமாத்திரையும் சாப்பிட்டுப்
போராடி இறந்துபோன
அண்ணனின் பிணத்தை வைத்திருந்தார்கள்
வாக்கரிசி எடுப்பதற்கு சண்டை நடந்தது
கோடி போடுவதற்குக் குற்றம் பேசினார்கள்
கைப்பாடை தூக்குவதற்குக் கணக்குப்
பார்த்தார்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
உறவுகளைவிட அக்கம்பக்கம்
மனிதர்களே நின்றார்கள் கூட்டமாய்
சர்க்கரை நோய் முற்றி எடுக்கப்பட்ட
இடதுகாலின் முழங்காலுக்குக்கீழே
கட்டைக்கால் பொருத்தி சந்ததிகள்
தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டினார்கள்
கட்டைக்காலில் ஒட்டாமல் வழிந்த
நீரைப்போலவே உறவினர்கள்
இருபது வேலி வைத்து ஆண்ட
இடத்தில் குண்டுமணி நிலமும்
இல்லை வெறுங்குதிரே சாட்சியாய்.
என்ற பெரியப்பா கதைபேசியே
அண்ணனைத் தூக்கினார்கள்
எதுவுமற்ற வாழ்க்கையில் எரிவதற்குப்
பேசாமல் அண்ணனும் போனார்..
முப்பது வரை இக்கதையைப்பேசி
எல்லாமும் மறந்துபோவார்…