இனிக்கும் தமிழ் – 171/டி வி ராதாகிருஷ்ணன்

தென்றல் காற்று

‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து,
பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச்
சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து,
குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும் சென்று அந்தக்கலை என்ன சொல்கிறது? இது என்ன சொல்கின்றது? என கலைகளை ஆராய்ந்து கற்று அறியும் மாணவனைப் போல இயங்குமாம்’ என்கின்றது திருவிளையாடற் புராணம்.

“பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப்
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட்டு உண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போல் இயங்கும் அன்றே”

  • (திருவிளையாடற் புராண திருவாலவாய்க்
    காண்டம்: 19)

“பொங்கரில் [சோலையில்] நுழைந்து வாவி புகுந்து பங்கயம் [தாமரை] துழாவிப் [தடவி] பைங்கடி [பசுமையான] மயிலை [இருவாட்சி] முல்லை மல்லிகைப் பந்தர் [பந்தல்] தாவிக் கொங்கலர் [மரந்தம் விரிந்த] மணங்கூட்டு [மணத்தை] உண்டு [சேகரித்து] குளிர்ந்து மெல்லென்று [மென்மையாகத்] தென்றல் அங்கங்கே [பல இடங்களிலும்] கலைகள் தேரும் [தேர்ச்சிபெறும்] அறிவன் [மாணவன்] போல் இயங்கும் அன்றே”

                     -