கல்வி/வளவ.துரையன்

பெருந்தனக்காரரின் சொற்கள் போலக்
காய்ந்து கொண்டிருந்த
கதிரவனின் வெப்பம்
மென்மையாக மாறத் தொடங்கிய
மாலை நேரம்

காலையில் இரை ஊட்டி வந்த
குஞ்சினை எண்ணிய
காகம் மேற்குத் திசையில்
பயணிக்கத் தொடங்கியது

அக்கம்பக்கம் திரும்பி
உறவினரை நட்பைப்
பார்ப்பதற்குள் வெளிச்சம்
மெதுவாய் மறைகிறது

வந்து சேர்ந்த தாய்ப்பறவை
தந்த அணைப்பின் நெருக்கத்தால்
கூடிருந்த கிளைகளின் அசைவால்
மெல்லிய நிலவொளியில்
பாதிவயிறுதான் நிரம்பி இருந்தும்
பக்குவமாய்த் தூங்கக்
கற்றுக்கொண்டது குஞ்சு.