செய்திகளின் ஈர்ப்பு/கு.மா.பா. திருநாவுக்கரசு

பத்திரிகை செய்தித்தாள்
சகிதமாக
நகர இரயிலில்
பயணிக்கும் – ஒரு
நபரைச்சுற்றி
நடக்கும் வேடிக்கைக்
காட்சிகளென்
மனதிற் பதிய,
விவரித்து நான் வரையும்
கவிதை கேளீர்!

ஓர் ஓரம் ஜன்னலுக்கு
அருகே அமர்ந்து,
ஆர்வமுடன் பத்திரிகை
வாங்கி வந்த
அந்த நபர் செய்தித்தாள்
பிரித்த உடனே,
‘யார் அவர்?’ என்று அறியா
பயணிகள் சில பேர்,
அவரைச் சூழ்ந்துகொண்டு
இரயில் சிநேக உறவோடு
உரிமையோடு – அந்த
ஈரெட்டுப் பக்கமுள்ள
செய்தித் தாளை,
எட்டுப் பேர் பங்கிட்டு
எடுத்துக்கொண்டு,
ஆளுக்கொரு தாளெடுத்துப்
படித்த வண்ணம்
அவரவரின் பயண இலக்கு
நெருங்கும் வரையில்,
அடிக்கின்ற காற்றலையில்
அதனைக் கசக்கி,
அங்குமிங்கும் தாளோரம்
கிழித்தும் விட்டு, அவரவர்கள்
படித்தங்குப் பொழுதைப்போக்க
நக்கல் தரும் சுவாரஸ்யம்
உற்றுப் பார்த்தால்
‘பொக்’கென்று வரும் சிரிப்பை
அடக்கவா முடியும்?

ஒரு நபர் கை விரித்திருக்கும்
தாளைப் பற்றி
இழுத்தபடி இன்னொருவர்
வாசித்திருப்பார்! – அவர்
குறுக்கே மற்றொருவர்
தலையை நுழைத்து
விளையாட்டுச் செய்தி மட்டும்
விரைந்து படிப்பார்!!
பின்புறத்தில் தெரிகின்ற
சினிமா செய்தியை
முண்டிவந்து
எதிர் இருக்கைக்காரவர்
படிக்கும் போது – முன்னவரோ
இதழ் புரட்டி பின்பக்கத்
தகவல்களைப் படித்தபடி,
அசடு வழியும் எதிர் நபரை
நோட்டம் விடுவார்!

ஒற்றை வரி ராசிபலன்
சோதிடம் படித்து
ஓரிருவர் சிலாகித்து
பேசிச் செல்வார்!
தலையங்கச் செய்தி தந்த
அரசியல் பேச்சில்
தலை தனியாய்
அங்கம் தனியாய்
பிரிந்த நால்வர் – வாய்ச்
சண்டையிட்டங்கே
மோதிக்கொள்வார்

விலாநோக நகைக்க – நமக்கு
வேடிக்கையாகும் – இந்த
விறுவிறுப்புக் காட்சியன்றோ
செய்தி ஈர்ப்பு!
என்னைப் போல் இதுபோன்ற
காட்சியை ரசித்தோர்
எண்ணற்றோர் இருப்பர் – இதை
பலரும் அறிவார்!

பத்திரிகை எடுத்துவந்த
பயணி மட்டும்
பயணத்தின் முடிவினிலே
பத்திரமாக
பத்திரிகைத் தாள்களெல்லாம்
திரட்டிக்கொண்டு
எந்திரிக்கும் போது – பாவம்…
இடைப்பக்கத் தாளாக
கசங்கி இருப்பார்!
நடுப்பக்கம் காணாத
அவர் முகம் அங்கே
நகைச்சுவையை ரசிக்காமல்
தொலைத்திருக்கும்!

பி.கு: ஆண்டுக்கு ஒருநாள் “இந்தியச் செய்தித்தாள் தினம்” (29/1/2023) கொண்டாடப்படுகிறது.👆

One Comment on “செய்திகளின் ஈர்ப்பு/கு.மா.பா. திருநாவுக்கரசு”

  1. இந்தக் கவிதையை “விருட்சம்” மின்னிதழில் பதிவிட்ட இதழின் ஆசிரியர். அழகியசிங்கருக்கு மிக்க நன்றி.

Comments are closed.