ராம் வசந்த் கவிதை

நாங்கள் அப்போது…
சென்ட்ரல் பாலிடெக்னிக்கில்
டிப்ளமோ படித்தோம்.
அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில்
இன்ஜினியரிங் பயின்றார்கள்.
நாங்கள் பல்லவன் பேருந்தின்
படிக்கட்டில் தொங்கினோம்
அவர்கள் மோட்டார் சைக்கிளில்
ஒய்யாரமாய் உலா வந்தார்கள்.
நாங்கள் நடைபாதைக் கடைகளில்
ஆடைகள் வாங்கினோம்
அவர்கள் ரேமாண்ட்ஸ் , நார்த் ஸ்டார்
பூணிப் பிரகாசித்தார்கள்.
நாங்கள் குவாட்டர் வாங்கி
பண்போடு பகிர்ந்து கொண்டோம்
அவர்கள் பொறுப்பின்றி
பியரை ஆளுக்கொன்றாய் குடித்தார்கள்
நாங்கள் பரங்கிமலை ஜோதியில்
மலையாளப் படம் பார்த்தோம்
அவர்கள் மவுண்ட் ரோடு தேவியில்
ஆங்கிலப் படம் ரசித்தார்கள்.
நாங்கள் குமுதம் விகடன் புரட்டினோம்
அவர்கள் ரீடர்ஸ் டைஜஸ்ட் வாசித்தார்கள்
நாங்கள் ஆபாவாணன் கண்டு வியந்தோம்
அவர்கள் ஸ்பீல்பெர்க் தேடி ஓடினார்கள்
நாங்கள் பன்னீர் சோடா குடித்தோம்
அவர்கள் கோல்ட் ஸ்பாட் பருகினார்கள்.
நாங்கள் சாத்தனூர் செஞ்சி சென்றோம்
அவர்கள் சிம்லா குலுமணாலி புறப்பட்டார்கள்
நாங்கள் அரியர்ஸ் வைத்தோம்
அவர்கள் ஜி ஆர் இ ,டோஃபல் எழுதினார்கள்
இத்தனைக்குப் பிறகும்…
அவர்கள் கல்லூரிப் பெண்களுக்கு
எங்களைத்தான் பிடித்திருந்தது.

#

One Comment on “ராம் வசந்த் கவிதை”

Comments are closed.