வெளிச்சப் பறவை /நாகேந்திர பாரதி

வெளிச்சப் பறவை ஒன்று
விரிந்து பரந்து , பறந்து திரிகிறது

அது போக்குக் காட்டும்போது
பகலில் வெண்மையாய்
இரவில் கருமையாய்

அதன் அகன்ற சிறகுக்குள்
மூக்குக் காட்டும்
சூரிய சந்திரர்கள் கோடி

அதன் ஊமை மொழிக்குள்
சிரிக்கின்ற இறைவன்

அதற்குக் கோபம் வந்தால்
காற்றைப் புயலாக்கி
கடலின் குடலைப் புரட்டிப் போடும்

அதன் அமைதி நேரத்தில்
தென்றலாய்த் தடவி
மலராய் , வண்ணமாய் மணக்கும்

அது நடத்திச் சென்ற
நாடகம் ஏராளம்

அது கடத்திச் சென்ற
காலமும் பலப்பல

அதன் வெளிச்சம்
வெளியில் மட்டும் அல்ல

உற்றுப் பார்த்தால்
நமக்குள்ளும்

ஒரு சிட்டுக்குருவியாய்
அந்தப் பட்டு உடலோடு
வெளிச்சப் பறவை