பேனா/எல்.ரகோத்தமன்                                                


 
அது எழுகோல் அல்ல!
பேனா தான்!
 
மொழியை
எழுதிப் பழகியது
பலப்பம் தான்
என்றாலும்
ஏனா நான்
ஒரு பேனா வசிறி
ஆகிப்போனேன்!
 
என்
கிறுக்கல் மொழிக்கு
சொந்தக்காரன்
என் பேனா!
 
வசீகரமான
பல வண்ணமிகு
பேனாக்களின்
முனையில்
இதுவரை என் சிந்தனை
அதிசயம் எதையும்
நிகழ்த்தியதில்லை!
 
என் பேனா
நிறைய பரீட்சைகள்
எழுதியிருக்கிறது!
 
தப்புத் தப்பாய்
விடைகள் பகர்ந்து
தோற்கடித்திருக்கிறது
என்னை!
 
என் அவசரம் புரியாமல்
முக்ய  வேளைகளில்
என் பேனா
எழுதாமல் கழுத்தறுத்து
தவித்த நாட்கள்
ஒன்றல்ல இரண்டல்ல!
 
பல சமயங்களில்
இரவல் போயிருக்கிறது
என் பேனா!
அப்படியே காணாமலும்
போயிருக்கிறது!
 
 
வெவ்வேறு விதங்களில்
வெவ்வேறு தருணங்களில்
அடிக்கடி  வாங்கி
அடிக்கடித் தொலைத்த
பேனாக்களுக்கு அளவில்லை!
 
தொலைந்த போன
பேனாக்களை
ஒன்றன் மீது ஒன்றாக
அடுக்கினால்
நூறடி உயரத்திற்கு
ஒரு பேனா சிலையே
வைக்கலாம்!
 
ஆனால்
என் நோக்கம்
சிலை வைப்பது அல்ல!

வண்ணமிகு
பேனாக்களை
வாங்குவதும்
தொலைப்பதும்
மட்டுமே!