அவர் ஒரு சகாப்தம்…! /ஆர்க்கே…!

“வாடா வக்கீல்! ” என நான் அவருடன் நடித்துக்கொண்டிருந்த கதாபாத்திர பெயரைச் சொல்லியே என்னை அழைப்பார். எனக்கு மொபைலும் அதிர்ஷ்டமும் இல்லாத நாட்கள் அப்போது. இரண்டு மூன்று சினிமா கம்பெனிகளில் எனக்காக சிபாரிசு செய்து “போடா!போய் அவரைப்பாரு” என்பார் அன்பும் உரிமையுமாய்.இந்த வாழ்க்கை புகழ் கரையோரம் என்னைச் சேர்க்காமல் அதிர்ஷ்டம் என் எதிர்த்திசையில் பயணித்த காலம்.

பதின்மூன்று எபிசோட் தொடரில் அவருடன் ஆறு எபிசோடுகளில் காம்பினேஷன் ஷாட்ஸ்.
ஷூட்டிங்கில் மாலை ஆறுமணிவரைதான் அவர் கால்ஷீட் எல்லை. கம்பெனி காரினுள் இரவு தாண்டி வெகுநேரம் அவர் மனம்விட்டுப்பேசி பகிர்ந்துகொண்ட திரையுலக அனுபவங்கள் மறக்கமுடியாதவை. ஒரு காட்சி படமாகும்போது திரையில் ஃபிரேமில் எப்படிப்பட்ட ஜாம்பவான் நடித்தாலும் எப்படி நீ உன்னைத் தனித்துவப்படுத்திக் காட்டி மிளிரலாம் எனும் வித்வத் மகாமந்திரத்தை உதாரணத்திற்கு தான் பங்காற்றிய சில படங்களுடன் குறிப்பிட்டு பகிர்ந்த ஆச்சரிய ஆச்சாரியன்.!

பின்னாளில் அதை அவர் பங்காற்றிய திரைப்படங்களில் நுணுக்கமாய் கண்டு வியந்திருக்கிறேன்.

எங்க ஊர் டெண்ட் கொட்டாயில் திரையில் வியந்து பார்த்த மேதைகளுடன் இணைந்து நடித்தது என் பூர்வ ஜென்ம புண்ணியமன்றி வேறென்ன.!?

இந்த சந்திப்பு படச் சமயத்தில் கூட அவரின் இயல்பு நகைச்சுவை இழையோடிய முக்கிய தருணங்கள் இரண்டுண்டு.

“வக்கீல்! உன் முகம்பார்த்து பேசணும்னு பாக்கறேன். ஒன்னு குனி! இல்ல.. மணல்ல ரெண்டடிக்கு குழி பறிச்சு நில்லு!”

அடுத்தது சபா கேன்டீன் நபர் வடை சாப்பிடச்சொல்லி அவரை வார்த்தையால் தொடர்ந்து வறுத்தெடுக்க இவர் வேண்டாமென்று சாத்வீகமாக மறுத்து மறுத்து பொறுத்துப் பார்த்தார்.
“சார்! மசால் வடை சார் கேபேஜ் வடை” என இம்சை அரசனாக விடாமல் கேன்டீன் மறுபடி மறுபடி படுத்தியெடுத்து துளைத்தெடுக்க அவர் சொன்ன பதில் இப்பவும் எனக்குள் சிரிப்பை பொரித்தெடுக்கும்.

” இத பாருப்பா! வடை விஷயத்தில நான் எலியைவிட மோசம்பா! ஆனா இப்ப வேணாம்!”

அந்த எவர்க்ரீன் இன்ஸ்டண்ட் நகைச்சுவை ஜீவ நதிதான் அவர்.!

இன்று அவர் நினைவு தினம்!

——–அன்புடன் ஆர்க்கே…!