வள்ளுவ வினை – வினை வள்ளுவம்/ஹரணி

திருக்குறளின் சிறப்புரைக்கவும் மேன்மைப் பேசவும் பழமைப்
போற்றவும் சொற்கள் போதா. உலகின் மானுடம் இருக்கும் வரையில்
திருக்குறள் வாழ்வில் கலந்துநிற்கும் செம்புலப் பெய்ந்நீர் போல என்று
சொல்வதுபோல. நன்கு கற்றாரையும் செம்மைப்படுத்திட வழிப்படுத்தும்
வல்லமை திருக்குறளையன்றி வேறு நூலுக்கில்லை என்பது உண்மை.
ஒவ்வொரு குறளும் ஒரு கோள்போல இயங்கும் தன்மைகொண்டது. ஒரு
மனிதனின் வாழ்நாள் முழுக்க நிழல்போல இருந்து வாழ்வைக் கட்டுக்குள்
வைக்கும் திறம்பெற்றது திருக்குறள். இக்கட்டுரை வினை குறித்த மூன்று
அதிகாரங்களின் உள்ளடங்கிய செய்திகளைக் கட்டுரையாசிரியர்
உணர்ந்தவாறே உணர்ந்துகொள்ள ஏதுவாய் பகிர்ந்துகொள்ள விழைகிறது.
வினை அதிகாரங்கள்

இக்கட்டுரைக்கென்று பின்வரும் மூன்று அதிகாரப் பகுப்புகள்

ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

  1. வினைத்தூய்மை (அதிகாரம் 66
  2. வினைத் திட்பம் (அதிகாரம் 67)
  3. வினைசெயல்வகை (அதிகாரம் 68)

இவ்வதிகாரப் பொருண்மை மையங்களைப் பாவலரேறு ச.பாலசுந்தரனார்
எளிமையான புரிதல் மொழியில் சுருங்கத் தலைப்பிட்டு வாசலைத் திறந்து
வைக்கிறார்.

வினைத் தூய்மை செய்யும் செயல்களைத் தூய்மை

யாகச் செய்தல்

வினைத் திட்பம் மேற்கொண்ட வினைகளில் மனத்
திண்மையுடையனாயிருத்தல்.
வினை செயல் வகை மேற்கொண்ட செயலைப் புரிந்து

செய்யும் முறைமை

வினைத் தூய்மை – அதிகாரம் – பொருண்மை

  1. வினைநலம் வேண்டியவற்றைத் தரும்.
  2. பயன்தராத செயல்களை நீக்குதல்
  3. மதிப்பற்ற செயல்களைச் செய்யக்கூடாது
  4. தெளிந்த அறிவுடையர் இழிவான செயலைச் செய்யார்.
  5. வருத்தம் தரும் செயல்களைத் தவிர்த்தல்.
  6. சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது.
  7. பழிசெயலால் ஈட்டிய செல்வத்தைவிட வறுமை பெரிது.
  8. சான்றோர் விலக்கிய செயலைச் செய்தல் எப்பவும் துன்பமே.
  9. நல்ல வழியில் செயலாற்றி வந்த செல்வம் நீங்காது.
  10. தீயவழியில் வந்த செல்வம் மண்குடத்திட்ட நீராகும்.

மேற்சுட்டிய பொருண்மைகள் வினைத்தூய்மை அதிகாரக் குறள்களின்
சுருங்கிய சாரம். இவ்வதிகாரப் பத்துக் குறள்களும் உணர்த்தவருவது
இதுதான்.
துன்பம் தராத, மதிப்புடைய, பயன்தரும்,
சான்றோர் காட்டிய செயல்களைச்
செய்தல் வினைநலமாகும்.
என்பதுதான். இதனைச் சற்று விரித்தும் பார்க்கலாம். தனக்கு மட்டுமின்றி
அடுத்தவர்க்கும் துன்பம் தராத செயல், நம்மையும் மற்றவரையும் மதிப்புக்
குறையாமல் காக்கும் செயல், எல்லோர்க்கும்பயன்தரும் செயல், சான்றோர்
காட்டிய வழியில் செய்தல் என்பதாகும்.

அதாவது வினைத்தூய்மை என்பது செய்யும் செயலில்
மேற்கண்ட கூறுகள் அடங்கியதாக உள்ள செயல்கள் –இவற்றைச் செய்தால்
அவையே வினைத்தூய்மை.
வினைத் திட்பம் – அதிகாரம் – பொருண்மை

  1. வினைத்திட்பம் என்பது மனத்திட்பமே.
  2. கேடு செய்யும் வினையை நீக்கல் செய்யும் செயல்

பழுதுபடின் மனந்தளராமை.

  1. செயலின் மாண்பு இறுதியில் வெளிப்படல். இடையில்
    வெளிப்படின் துன்பம் நேரிடும்.
  2. கூறுதல் எளிது செய்தல் அரிது.
  3. உயர்ந்தவனின் வினைத்திட்பம் மன்னனால் மதிப்புறும்.
  4. மனத்திட்பமுடையவர் வினையை எண்ணியவாறு முடிப்பர்.
  5. பெரிய தேருக்கு அச்சாணிபோல எளியவரை எள்ளல்கூடாது.
  6. மனங்கலஙகாமல் செய்யும் செயலைக் காலத்தில் முடிக்க
    வேண்டும்.
  7. இடையிடையே துன்பம் நேரினும் விடாது
    செயலாற்றவேண்டும்.
  8. செயலில் உறுதிகொள்ளாதவரை வேறு வலிமை வீணே.
    மேற்கண்ட வினைத்திட்பம் அதிகாரத்தின் குறள்கள் உணர்த்த வரும்
    சாரம் என்பது இதுதான்.
    வினைத்திட்பம் மனத்திட்பமாகும். அதுதான்
    செயலை வலிமையாகவும் உயர்வாகவும்
    குறித்த காலத்திலும் முடிக்க வைத்துப் பெருமை
    தரும்.
    அதாவது இதனைச் சற்று விரித்தால் வினைத்திட்பம்
    என்பது மனத்தின் திறனைப் பொருத்தது. மனஉறுதியே செயலைத்
    திறம்படப் பெருமைகொள்ளும் வகையில் செய்ய வைக்கும்.
    எல்லோரும் புகழ நிலைத்திருக்கும்.
    வினைசெயல்வகை – பொருண்மை
  9. செயலில் துணிவு – காலந்தாழ்த்தின் தீங்காகும்.
  10. காலத்தைப் பொருத்து செயலை நீட்டித்தல், விரைந்து
    செய்தல்.
  11. முடியும் சூழலில் செய்தல் – முடியாத சூழலில்
    முயற்சித்தல்.
  12. முடிக்காத செயல் அணைக்காத நெருப்பையொக்கும்.
  13. பொருள்,கருவி,காலம்,திறம்,ஏற்ற இடம் அறிந்து செய்தல்.
  14. விளைவறிந்து செயல் செய்தல்வேண்டும்.
  15. வினையறிந்தவன் கருத்தறிந்து செய்தல் நலமாகும்.
  16. செயலால் இன்னொரு செயலாக்கல் யானையால்
    யானையைப் பழக்குதல் போல.
  17. நண்பருக்குச் செய்யும் நன்மையைவிடப் பகைவர்களை
    நண்பராக்க வேண்டும்.
  18. சிற்றரசரிடம் பெருவேந்தர் பணிந்தால் அதனைப் பணிவாக
    ஏற்கவேண்டும்.

மேற்கண்ட வினைசெயல்வகை அதிகாரத்துக் குறள்களின் சாரம்
என்பது இதுதான்.

செய்யும் செயலைப் புரிந்து காலத்தில் கருத்தறிந்து
செய்தல் நலமாகும். காலந்தாழ்த்தாது விளைவறிந்து

செய்தல்வேண்டும்.

வினைத்தூய்மை, திட்பம், செயல் வகை குறித்த சிந்தனைகள்.

வினை என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி பின்வரும்

பொருள்களைத் தருகிறது.

வினை – இரண்டு, ஊழ், கருத்து, கள்ளம், தொழில், போர்,
வஞ்சகம், செய்தற்குரியது, பரிகாரச் சொல்,
தீச்செயல், முயற்சி, தந்திரம், தொந்தரவு.

இப்பொருள்கள் யாவற்றிலும் வினை எனும் சொல்லுக்கு செயல் எனும்
பொருள் நேரடியாகக் கூறப்படவில்லை. பரிமேலழகர் வினை என்பதையே
உரையில் குறிப்பிடுகிறார். என்றாலும் மேற்கண்ட பொருள்கள்
செயல்களின்பாற்பட்டே மறைந்து நிற்கின்றன. இதில் இரண்டு என்பதன்
பொருள் எதுவென்று உறுதிசெய்யவும் முடியவில்லை. இரண்டு என்பது
வினையை எங்ஙனம் சார்ந்து பொருளுரைக்கிறது என்று ஆய்தல் வேண்டும்.
திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப்
அவர்கள் இந்த அதிகாரங்களுக்குப் பெயர் சூட்டுகையில்

வினைத்தூய்மை – PURITY OF ACTION
வினைத்திட்பம் – POWER IN ACTION
வினைசெயல் வகை – METHOD OF ACTIVITY

என்கிறார். சென்னை ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் 1949 இல் வெளியிட்டுள்ள
திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பில் இவ்வதிகாரங்களுக்குப் பின்வருமாறு
பெயர் சூட்டப்பட்டுள்ள வேறுபாட்டைக் கண்டறிதல் வேண்டும்.
வினைத்தூய்மை – UPRIGHTNESS OF ACTION
வினைத்திட்பம் – QUALITY OF ACTION
வினைசெயல் வகை – MODE OF ACTIVITY

தூய்மை என்பதற்கு Purity. Uprightness ஆகிய இருசொற்கள்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனினும் இந்த இரு ஆங்கிலச்சொற்களும்
சற்றே பொருள் வேறுபாட்டை உடையன. ஆழ்ந்த நிலையில் இவை ஒரே
பொருளை வெவ்வேறு வெளிப்பாட்டில் உணர்த்துவனவாகக்
கருதவேண்டியுள்ளது. Purity என்பதன் இணைபொருள் சொற்களாக chastity,
cleanliness, innocence, clarity போன்ற சொற்கள் குறிப்பிடப்படுகின்றன.
இதேபோன்று Uprightness எனும் சொல்லுக்கு இணைபொருள் சொற்களாக
honesty, probity,honour, போன்ற சொற்களும் குறிப்பிடப்படுகின்றன. இவ்ற்றின்
அடிப்படையில் பார்க்கையில் தூய்மை என்பதற்கு குறை சொல்லமுடியாத
களங்கமற்ற தெளிவான என்பதையும் இன்னொரு வகையில் நேர்மையான,
நேரான, செம்மையான, செவ்வையான (பைபிள்) என்பதையும் பொருளாகக்
கொள்ளலாம்.
தூய்மை என்பதற்கு சுத்தம், கற்பு என்கிற பொருள்களும்
குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே வினைத் தூய்மை என்பது களங்கமற்ற
நேர்மையான குறைசொல்லமுடியாத செயல் என்று பொருள்கொள்வது
ஓரளவுக்கு ஏற்புடையதே. இதனடிப்படையில் வினைத்தூய்மை அதிகாரத்தைப்
பார்க்கையில் இத்தகைய பொருள்புலப்பாட்டை மையப்படுத்திக்கொள்ளலாம்
என்றாலும் வள்ளுவர் எத்தகைய செயல்பாடுகளாக இருந்தாலும் அவை
மனத்தைச் சார்ந்தே அமையவேண்டும் என்பதையே குறிப்பாக
உணர்த்துகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. இதனைத் தொடர்ந்து
இத்தகைய செயல்களை அடுத்த அதிகாரத்தின் வழியாக உறுதிப்படுத்துகிறார்.

திட்பம் என்பதற்கு POWER. QUALITY எனும் இரு ஆங்கிலச்சொற்களைக்
காணுகையில் முதலாவது ஆற்றல் எனும் பொருளையும் இரண்டாவது
சொல் தரம் எனும் பொருளையும் உணர்த்துகின்றன. எனவே திட்பம் என்பது
ஆற்றல் உடையதாகவும் தரமானதாகவும் இருக்கையில் இவையே
வினையைத் தீர்மானிப்பதில் சரியானது என்பதை வள்ளுவர் உணர்த்துகிறார்.
ஆகவேதான் இந்த வினைத்திட்பம் என்பது மனத்திட்பம் என முதல்
குறளிலேயே குறிப்பிடுகிறார். ஆக வினையின் திட்பமும் ஆற்றலும், தரமும்
மனத்தைச் சார்ந்தே அமைகின்றன. வினையாற்றுவதற்கு மனத்திற்கு
இவையே பண்புகளாகக் கொள்ளப்படவேண்டும் என்பதை வள்ளுவர்
உணர்த்துகிறார் இவ்வதிகாரத்தில்.
வினையும் செயலும் வேறு பொருளின என்பதுபோல வள்ளுவர்
மூன்றாவது குறிப்பிடும் வினைசெயல் அதிகாரத்தில் வினை, செயல் என
இருசொற்களையும் ஒருசேரப் பயன்படுத்துவதால் வினை என்பது
வேறானதோ என்கிற ஒன்றும் மனத்துள் ஐயப்படுகிறது. தவிரவும் வினை
என்பது மனம் (உள்ளம்) இவற்றோடு தொடர்புறுத்தியே வெளிப்படுகிறது
எனும் நிலையில் மனம், உள்ளம் என்பதன் படிநிலைகளையும் இங்கே
ஆராயத் தோனுகிறது. மேலும் திருக்குறளைப் பொருத்தமட்டில் அதிகாரப்
பகுப்பும் பொருட்பகுப்பும் பத்துப்பத்துக் குறட்கள் எனும் தொகுப்பும் பின்னர்
நேர்ந்தது என்கிற உண்மையையும் ஆழமாகக் கருத்தில்
கொள்ளப்படவேண்டியதாயிருக்கிறதென்பதையும் திருவள்ளுவரால் இவை
செய்யப்படவில்லையென்பதையுமுணரவேண்டும்.

முன்னரே சுட்டியதுபோன்று மனம்,உள்ளம் என்பதன்
துல்லியமான பொருளையும் நாம் உணரவேண்டியுள்ளது. இந்த இரண்டு
சொற்களையும் இலக்கியங்களில் புலவர்கள் பயன்படுத்தியுள்ளார். வள்ளுவர்
மனம்,உள்ளம் இரண்டு சொற்களையும் பயன்படுத்தியுள்ளார். சஙக
இலக்கியங்களிலும் பக்திப் பனுவல்களிலும் உள்ளம் என்கிற சொல்
பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மனம் என்கிற சொல் பழமைச் சிறப்புடைய பயன்பாடுடையதாக
இருப்பதைச் சில சான்றுகள் வழி உறுதிப்படுத்தலாம்.
ஆறறிவதுவே அவற்றொடு மனனே

என்பது தொல்காப்பியம்.
மனம் (உன்னல் – பிங்கலம்), மனம் (நெஞ்சு – சூடாமணி) மனம்
(உவந்து – திவாகரம்) என நிகண்டுகளும் மனம் எனும் சொல்பற்றியே
பொருள் உரைக்கின்றன.
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே
என்று அப்பர் பாடுகிறார். நீதி நூல்களிலும் மனம் என்கிற சொல்லே
பயன்பாடுடையதாகப் பாடப்பட்டிருக்கிறது. ஆகவே மனம் என்பது ஆன்மா
என்கிற ஒன்றோடு பொருத்திக்கொள்ளுதல் தகும்.
சிக்மண்ட் பிராய்ட் மேல்மனம், அடிமனம், ஆழ்மனம் என்கிறார்.
இந்த ஆழ்மனம் என்பதுவே வினைகளைக் கட்டுக்குள் வைக்கும்
ஆற்றலுடையதாய் இருக்கிறது. எனவே வினை என்பதன் பின்னொட்டாக
அமையும் தூய்மை (மனம்), திட்பம் (மனம்) செயல் வகை (மனம்) ஆகியன
இவ்வாறே பின்னணியில் மறைந்து நிற்கிறது. ஆகவே வினையின்
தூய்மையையும், திட்பத்தையும், செயல் வகையையும் மனத்துடனே அதுவும்
ஆன்மாவுடனேயே எண்ணிப் பொருள் கொள்ளவேண்டும்
இப்போது வினைத்தூய்மை எனும் அதிகாரப் பொருளை
ஒப்பிட்டுப் பார்த்தால் வினைத் தூய்மையாக அப்பழுக்கில்லாமல் யாரும்
குறைசொல்லமுடியாமல் சுத்தமாக (கற்போடு) அமையவேண்டுமெனில்
மனம் சுத்தி என்பது வேண்டும். அது ஆன்மாவோடு கலந்து வெளிப்பட்டால்
அவ்வினை மதிப்புடையதாய், பிறர் நலம்பயப்பதாய் என்றும்
அழிவில்லாததாய் அமையும். இத்தகைய தூய்மையான மனம் அமைந்து
செய்யும் வினை ஆற்றலுடையதாய், உறுதியுடையதாய், அலைபாய்தலுக்கு
உட்படாததாய், திட்பமுடையதாய் இருக்கும், இது வினையின் திட்பத்தை
நிலைப்படுத்தும்.சலனப்படுத்தாது.
மனம் என்பது புத்தி, சித்தம், உள்ளம், நெஞ்சம்,
அகம், சிந்தை என்பதோடு இதனை உணரும்
படிநிலைகளாக ஒழுக்கம், நியதி, உண்மை, இவை
எந்நிலையிலும் வழுவாமை, அலைபாயாமை,
தன்னிலையில் மாறாதிருத்தல் என்பதுவுமாகும்.

இத்தகைய பண்புகளை தூய்மையோடும் திட்பத்தோடு இணைவுகொள்ளச்
செய்யும்போது அவ்வினை சரியாகும். இதுதான், இப்படித்தான் வினை
இயங்கும், செய்யவேண்டும் என்கிற வகையையே வினைசெயல்வகை
குறள்கள் உரைக்கின்றன.
நிறைவுரை
திருக்குறளில் ஆய்தலுக்கு ஆயுள் போதாதெனினும்
சிலவற்றைச் சிந்தைக்குட்படுத்திச் செம்மாந்த உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ளல் பயனாகும். அவ்வகையில் வினை என்பதன் பொருள்
செயல் என்பதை நேரடியாகச் சுடடாவிடினும் அவற்றுக்கான பொருண்மை
செய்தலே என்பதையும் இவற்றுக்குத் தூய்மை, திட்பம், செயல்வகை எனும்
மூன்று பின்னொட்டுச் சொற்களும் உணர்த்தும் பொருளுவகை
எண்ணற்குரியது. அனுபவித்தலுக்குரியது. இக்கட்டுரை ஒரு கடுகென்று
எண்ணிக் கடலைக் கண்டு மிரண்டதுவாகும். வினை என்பது மனம் சார்ந்தே
தூய்மையையும் திட்பத்தையும் செயல்வகையையும் உணர்த்தி நிற்கின்றன
என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தூய்மை என்பதன் பின்னணியாக ஒழுக்கம், கற்பு, சுத்தம்,
கள்ளங்கபடமற்ற தன்மை என்பதுவாகவும், திட்பம் என்பது ஆற்றல், வலிமை,
தரம், உறுதி, திறன் என்பதுவாகவும், செயல்வகை என்பது
முறைமையாகவும், நெறியாகவும், எனப் பொருள்பரப்பில்
விரிவுகொண்டிருப்பதையும் எண்ணி அவற்றையே வினையின்
இயக்கத்திற்குப் பயன்கொண்டிருப்பதையும் ஓரளவு இக்கட்டுரை