
வாசலில் பூத்த மல்லியைப்
பறித்து
மூங்கில் கூடை நிறைத்து
நார் பிரிக்கத்
தெரியாது வாழைமரம் வெறித்து,
மின்னலிட்ட
வெள்ளை நூலெடுத்து வந்தேன்.
மூன்று தமிழ் போலே மூன்றாய்
அடுக்கித்
தொடுத்தால் நேரம் ஆகும்
மீதமென்று
இடது கரம் நூல் பிடிக்க
வலதின்
மூவர் எடுத்து இட்டுச் சுற்ற
வளர்ந்தது
மல்லிகைச் சரம்.
விரல்களின் நர்த்தனம்
கண்டு
விழிகள் சுழன்று ஒற்றை
விரலால்
ஆகுமோ ஒரு செயல்
கூடி
வாழ்ந்தால் நன்மை உண்டு
என்பது
மெய்தான் என்றே விரிந்தன
வியப்பில்.
