வருவீர்களா இராமசாமி?/ஹரணி

மண நிகழ்விலாகட்டும்
மரண நிகழ்விலாகட்டும்
இராமசாமி முன்னர்
வந்து விடுவார்..

அதனதன் சடங்கை
அடி பிறழாமல் சொல்லி
அசத்துவார்..

அப்படியே நடப்பதைப்
கண்கொத்திப் பம்பாய்
கவனிப்பார்…

எதையும் எதிர்பார்க்க
மாட்டார்
அழைப்பது கெளரவிப்பது
சாப்பிட உபசரிப்பது
என எதனையும்
எதிர்பார்க்க மாட்டார்..

ஐம்பது ஏக்கர் நிலமும்
அசராத வேளாண்மையும்
அடுக்கிய முட்டைகளும்
ஆள் அம்பாரமும் என
அறுவடை ப் போரில்
அத்தனை கம்பீரமும்
அத்தனை கருணையுமாய்
இருப்பார்..

இரவில் பெய்த அடர்
மழை நாளில்
இயற்கை எய்திய
இராமசாமியின் பிள்ளைகள்
அவசர அவசரமாகக்
காரியம் பார்த்து வண்டியிலேற்றி
சுடுகாட்டில் அன்றைக்கே
அனைத்தும் முடித்துப்
போனார்கள்..

இராமசாமி ஒருவேளை தன் சடங்கை எதிர்
பார்த்திருப்பாரோ
இல்லையோவென அறிய
முடியவில்லை..

சாம்பலில் இருந்து
உயிர்த்தெழுந்தால்
கேட்கலாம்தானே..

வருவீர்களா இராமசாமி?

2 Comments on “வருவீர்களா இராமசாமி?/ஹரணி”

  1. “வருவீர்களா இராமசாமி?” கவிஞர் ஹரணியின் புதிய முயற்சி பாடுபொருள் தேர்விலேயே தெரிகிறது.

    இராமசாமிகள் ஊருக்கு ஊர் உண்டு … பணக்காரராகவோ.. ஏழையாகவே.

    இந்த இராமசாமி எனக்குச் சில “இராமசாமிகளை” நினைவுபடுத்துகிறார்.

    வாழ்த்துங்க ஹரணி.

    வெற்றிப்பேரொளி.

Comments are closed.