
இன்றைய நவீன விருட்சம் நிகழ்வில் வாசித்த எனது கவிதை
வீடு தொடங்கி நாடு முழுக்க
விரவிக் கிடக்கும்
அடைப்புக் குறிகள்
அடுப்படிச் சுவற்றுக்குள்
அடக்கி வைக்கும்
அடைப்புக் குறிகள்
சுடுகாடு செல்லவும்
முடக்கி வைக்கும்
அடைப்புக் குறிகள்
படிப்பில் வேலையில்
பரிகாசம் செய்யும்
அடைப்புக் குறிகள்
இனத்தில் நிறத்தில்
இளக்காரம் செய்யும்
அடைப்புக் குறிகள்
அடைப்புக் குறிகளை
அகற்றி எறியட்டும்
ஆவேசக் குறிகள்
வியப்புக் குறிகளாய்
விண்ணை முட்டட்டும்
வீரக் குறிகள்
