
தாழ்வாகப் பறந்து தரையிறங்கி நடக்க
ஆரம்பித்த போதுதான் பார்த்தேன்
அந்தக் கரப்பான்பூச்சியை
‘தட்’ டென்று தரையில் தட்டி
ஓசை யெழுப்பினேன்
கதவிடுக்கில் ஒளிந்துகொள்ள
எத்தனித்தது அது
ஆனாலும் நீண்ட ஒற்றை ரோமம்
காட்டடிக் கொடுத்து விட்டது
கையால் கதவில் தட்டியபோது
பறந்துபோய் சுவரில் பதிந்தது
ஐஸ்கிரீமில் தூவிய அத்திப்பழம் போல்
பளீரெனத் தெரிந்தது என் கண்முன்னே –
ஒளிந்து கொள்ளத் தெரியாத அப்பாவியாய்
கோபத்தில் இரைந்தேன்..
“என்ன ஜந்து நீ.. ஓடவும் தெரியவில்லை
ஒளியவும் தெரியவில்லை
என்ன எதிர்கொள்ளல்
இது..”
“அற்ப மானிடனே நூற்றுக்
கணக்கில் என் வாரிசுகளை
உன் வீட்டில் விதைத்திருக்
கிறேன்..
வந்து என்னை நசுக்கித் தொலை”
என்றது கர்வமாய்.
