சிதம்பரம்/க.நா.சு.

பராந்தகன் என்கிற சோழன் கூரைக்குப் பொன் வேய்ந்தான்.
வேறு யாரோ ஒருவன் பெயர் தெரியாதவன் நடனராஜன் குடிபுகக்
கோவில் கட்டித் தந்தான் சௌகரியமான வாசஸ்தலம்தான்.
அரண்மனைகள் போல இருட்டு மண்டபம் நீராழி மண்டபம்
உள்படக் கட்டித் தந்தான். அதற்கெல்லாம் முன்னதாக
பெயரற்ற ஒரு சிற்பி – அவன் பெயர் சாத்தனோ அல்லது
மயனோ, நிச்சயமாகச் சொல்லமுடியாது- உருவமாக
வடித்துத் தந்தான். உருவம் பெற்றது நிலைத்துவிட்டது.
மக்கள் வந்துவந்து அலைமோதி அங்கு புனிதம் ஸ்தாபித்துப்
பெருகி வழிய ஏற்பாடு செய்துவிட்டார்கள். சிதம்பரம்
உருவாகிவிட்டது.

மனிதன் மல்லாந்து படுத்துக் கால்
அகட்டிக் கைகள் பரப்பிப் படுத்திருப்பதுபோலக் கோயில்

அமைந்திருப்பதாகவும், அந்த மனிதனின் இதயம்
இருக்கவேண்டிய இடத்தில் நடனராஜன் நின்று
கால் தூக்கி, கைவீசி ஆடுவதாகவும், கூரையில் மனிதன்
ஒரு நாழிகையில் விடுகிற மூச்சுகளை எண்ணிக் கணக்குப்
பண்ணித் தங்க ஓடுகளைச் செய்து அத்தனை ஆணிகளால்
அடித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இருக்கலாம்.
நடனராஜன் என் இதயத்தில் ஓயாது நடனமாடுவது
தெரிகிறது.

அபயம் என்று தூக்கிய கையை நேர
டியாகப் பார்த்து விட்டாலும், தூக்கிய குஞ்சிதபாதத்தைக்
கண்கொண்டு பார்த்துவிட்டாலும் உடனேயே-
கொல்லிப்பாவை போல-சாயுஜ்ஜியம் நிச்சயம்
என்று அவற்றிற்குத் தங்கக் கவசமிட்டு மறைத்
திருக்கிறார்கள். ரகசியம் என்பது இத்தருணத்தில்
எதுவுமில்லை – தேடுபவனுக்கு எதுவும் கிடைக்கும்
என்கிற அர்த்தத்தில் சிதம்பர ரகசியமாக ஒரு
சூனியத்தையும் தங்க வில்வ தளமிட்டுக்
காட்டுகிறார்கள்.

நானும் மௌனியும் இரவில்
கோயிலைச் சுற்றி வலமாக வந்துவிட்டு இருட்டில்
ஆயிரக்கால் மண்டபத்தில் உட்கார, மௌனி
சற்று உற்சாகம் இழந்து புட்டியிலிருந்து எதையோ
அருந்திவிட்டு புனர் உற்சாகம் பெற்று ஜென் பற்றியும்
ராபர்ட் ம்யூஸிலின் நிர்க்குண மனிதன் பற்றிப் பேசவும்
தொடங்க, மணி பன்னிரண்டடிக்கக் கோயில் கதவைச்
சாத்திவிடுவான் என்று கிளம்ப வௌவால்கள் சிறகால்
எங்கள் தலையில் தட்டிவிட்டு வேறுஇடம் தேடி ஓட
நாங்கள் வீடு நாடிப் போகிறோம். சிதம்பரம் உடன்
வருகிறதா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.
ஆனால் அப்படியொன்றும் சிதம்பரத்தைத் தப்பிவிடுவது
என்பது சுலபமல்ல. அகப்பட்டுக் கொண்டவர்கள்
அகப்பட்டுக் கொண்டவர்கள் தான். கோவில்கள்
அல்ல அவை- சிறைக் கூடங்கள். சித்த புருஷர்கள்
கட்டிவைத்த சிறைக் கூடங்கள்.

மாணிக்கவாசகரும்
மற்றவர்களும் கோயிலுக்கு சிவனைத் தேடிமட்டும்
தான் வந்தார்களா? சிவனுடன் நல்ல சம்பா
கொத்ஸும் கிடைக்குமே என்று வந்தார்களா?

(ஞானரத்தம் ஜனவரி 1987)