ஓர் எழுத்தாளராக நமக்கு அறிமுகமான சரவணன் சந்திரன் முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது ஒரு ஹாக்கி ப்ளேயராகதான். சரவணன் சந்திரனுக்கு பள்ளிப் பருவம் முதல் தான் ஒரு ஹாக்கி ப்ளேயராக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பமாக இருந்ததாம்.
வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு விபத்தில் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் தனது ஹாக்கி கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சரவணன்.
ஹாக்கி விளையாட்டு வீரருக்கு பேனாவைப் பிடிக்கும் சூழல் எப்படி நேர்ந்தது என்று கேட்டேன். “ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கல்லூரியில் நடக்கும் ‘வனம்’ என்ற கவிதை, சிறுகதை வாசிப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வேன். அந்த ஆர்வம்தான் நான் எழுத அடித்தளமாகவும் அமைந்தது.
அதன்பின் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சினிமா, வேலை என்ற இரு பாதைகள் என் கண்முன்னே இருந்தன. பொருளாதார நெருக்கடியால் வேலையைத் தேர்ந்தெடுத்து விட்டேன். ‘ஆறாம்திணை’ என்ற இணைய இதழில்தான் முதல்முதலாக வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு காலச்சுவடு, இந்தியா டுடே, கதையல்ல நிஜம் போன்ற நிகழ்ச்சிகளில் பணிபுரிந்தேன். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இயக்குனராகவும் பணிபுரிந்தேன்” என்று தொடர்ந்த சரவணன் சந்திரன், பத்திரிகையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இடையிடையே மீன் தொழில், பட்டாசுக் கடை, பிபிஓ என பல தொழில்களை செய்து வந்திருக்கிறார்.
இலக்கிய உலகில் தொடர்ந்து பயணப்பட்டிருந்தும் புத்தகம் என்று ஒன்றும் வராமலிருந்தது ஒருவிதக் குற்றவுணர்ச்சியை அவருக்குள் ஏற்படுத்தியதாக கூறுபவர், தனது முதல் நாவலான ‘ஐந்து முதலைகளின் கதை’ எப்படி உருவானது என்பதை சுவாரசியம் மிகுந்த குரலில் பகிர்ந்தார்.
“நான் தொழில்ரீதியாக ஒருமுறை தைமூர் நாட்டிற்கு பயணம் சென்றிருந்தேன். அங்கு கிடைத்த அனுபவத்தை கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரனிடம் சொல்லும்போது ”நீ எவ்வளவோ விஷயங்களை செய்கிறாய். ஆனால் அது எதுவுமே நிலைக்காது. உன் அனுபவங்கள் மூலம் நீ எழுதும் புத்தகங்கள்தான் கடைசி வரை உன்னை நினைவுபடுத்தும்” என்றார். அதில் உருவானதுதான் ‘ஐந்து முதலைகளின் கதை’.
நன்றி: இந்து தமிழ் திசை
