எனது பார்வை சூரியகாந்தியைப் போலத் தெளிவாக இருக்கிறது/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா ஆல்பெர்டோ கைரோ

தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி


———
போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா ஆல்பெர்டோ கைரோ என்று புனைபெயரில் எழுதிய கவிதை. பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித். தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———-
எனது பார்வை சூரியகாந்தியைப் போலத் தெளிவாக இருக்கிறது
சாலையின் வலதுபுறமும் இடதுபுறமும் பார்த்தபடி நடப்பது எனக்கு வழக்கம்
சில சமயங்களில் நான் எனக்குப் பின்னால் பார்க்கிறேன்
ஒவ்வொரு கணமும் நான் பார்ப்பது
அதற்கு முன்னால் நான் என்றுமே பார்க்காததாயிருக்கிறது
நான் பொருட்களை வெகு நன்றாகக் கவனிப்பவன்
புதிதாய்ப் பிறந்த குழந்தை உலகைப் பார்க்கும் அதே அதிசயத்தை
நான் உணரமுடிந்தவன்
ஓவ்வொரு கணமும் நான்
முற்றிலும் புதிய உலகத்தில்
அப்போதுதான் பிறந்தவனாய் உணர்கிறேன்…

நான் டெய்சி மலர்களில் நமபிக்கை வைத்திருப்பது போலவே
உலகின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்
ஏனெனில் நான் இந்த உலகைப் பார்க்கிறேன்; ஆனால் அதைப் பற்றி சிந்திப்பதில்லை
ஏனெனில் சிந்திப்பது என்பது புரிந்துகொள்ளாமல் போவதற்கு.
உலகம் நாம் புரிந்துகொள்வதற்காக உண்டாக்கப்பட்டதில்லை
(சிந்திப்பது என்பது சரியாக இயங்காத கண்கள் கொண்டிருப்பது)
ஆனால் உலகைப் பார்ப்பது என்பது அதோடு சம்மதம் கொள்வது.

எனக்கு எந்த தத்துவமும் இல்லை, எனக்குப் புலன்கள் இருக்கின்றன…
நான் இயற்கையை பற்றிப் பேசுகிறேன் என்றால் எனக்கு அது என்னவென்று தெரியும் என்பதால் அல்ல
நான் இயற்கையைக் காதலிக்கிறேன் என்பதால்
ஏனென்றால் காதலிப்பவர்கள் அனைவருக்கும் தாங்கள் எதைக் காதலிக்கிறோமென என்றுமே தெரிவதில்லை
அல்லது
ஏன் காதலிக்கிறோமென
அல்லது
எது காதல் என
காதல் என்பது நிலைபேறுடைய அப்பாவித்தன்மை
ஒரே அப்பாவித்தன்மை சிந்திக்காமலிருப்பது மட்டுமே….