
சிவாயநம. நேற்று விருட்சம் நிகழ்வில் வாசித்த கவிதை :
நதியசைந்தால் ஓரழகு; இருகரையும் தொட்டு
நளினமாக சிறுமழலை நடையிடல்போல் அழகு!
மதியசைந்தால் ஓரழகு; வான்குளத்தில் விண்மீன்;
மீன்பிடிக்க அசைந்துவரும் மென்கொக்கின் அழகு!
பொதியசைந்தால் ஓரழகு; வண்டியது பாரம்
பொறுத்திடுமோ பொறுக்காதோ எனும்ஐய அழகு!
விதியசைந்தால் அதன்வசத்தில் வீழ்ந்தோரைப் பார்த்து
வீழாதார் தம்மறிவை வியந்திருத்தல் அழகு!
கண்ணோரம் நீரசைந்தால் கவலைகளைக் கரைக்கும்;
காதோரம் இசையசைந்தால் காலமதே கரையும்!
நுண்ணோரம் உணர்வசைந்தால் நற்கவிதை பிறக்கும்;
நிகழோரம் நினைவசைந்தால் இதழ்நகைப்பில் விரியும்!
விண்ணோரம் கதிரசைந்தால் அடிவானம் சிவக்கும் ;
விடியலின்அம் மெல்லசைவில் உயிரினங்கள் உவக்கும்!
மண்ணோரம் அசைவில்லா மௌனநிலை வருமுன்
மனமசைந்தால் உள்விரியும் மனிதம் பேரழகாய்!
பொன்னசைந்தால் பெண்மேனி பொங்கழகுக் கழகு;
பொருள்பொதிந்த அடிஅசைச்சீர் பைந்தமிழுக் கழகு!
முன்னசைவு பின்னசைவு கண்ணசைவெல் லாமே
முதற்பார்வை அசைவினிலே பேரழகாய்த் தோன்றும்!
தன்னசைவின் அதிர்வுகளைத் தானறியாப் பெண்மை
தாங்குநிலம் அசையாமல் அசைவிக்கும் எல்லாம்!
“என்அசைவால் யாப்பினில்சொல் அசைவித்தாய்?” என்பீர்?
என்மனதை அசைத்ததொரு எழிலசைவால் என்பேன்!
