
ஒரு உடல் இறப்பதைவிட
ஒரு மனம் இறப்பதைவிட
ஆயிரம் மடங்கு
துக்கமாக இருக்கிறது
ஒரு குரல் இறப்பது
அது ஒரு பாடும் குரல் என்றால்
அது நம்புவதற்கு
மிகவும் கடினமாக இருக்கிறது
ஏனெனில்
ஒரு குரல் இறக்கும்போது
நம் மனங்களில்
ஏதோ ஒன்று நிசப்தமாகிவிடுகிறது
நம்மால் அந்த நிசப்தம்
ஒருபோதும் கலைக்கப்பட முடியாததாக இருக்கிறது
அது நம்மை அஞ்ச வைக்கிறது
வாணி ஜெயராம் இறந்துவிட்டார்
சர விளக்கொன்று
கீழே விழுந்து சிதறுகிறது
அப்புறம் நிசப்தம்
ஒரு முறிந்த மனதின் நிசப்தம்
கானகம் அமைதியாகிவிட்டது
4.2.2023
மாலை 5.05
மனுஷ்ய புத்திரன்
