
பத்தாயிரம் பாடல்களைப் பாடிய
வாணி ஜெயராம்
தனிமையில்தான் இறந்து கிடந்தார் என்பது
பத்தாயிரம் பாடல்களும்
அவரை கைவிட்டுவிட்டன
என்றுதான் புரிந்துகொள்ள முடியுமா?
அந்தத் தனிமை
அவரது உளப்பூர்வமான தேர்வாக
இருந்திருக்கலாம்
அல்லது தன் பாடல்கள்
தன்னோடிருக்கின்றன
என்று அவர் நம்பியிருக்கலாம்
ஆனால்
ஒருவர் தூக்கத்தில்
கட்டிலிருந்து தவறிவிழுந்து
தலையில் காயத்துடன்
தனியாக இறக்கும்போது
அங்கு யாரும் இருப்பதில்லை
அவர் உருவாக்கிய
எதுவுமே இருப்பதில்லை
பணிப்பெண்
திறக்கப்படாத கதவின் முன்
அழைப்பு மணியை அழுத்தும்வரை
வாணி ஜெயராம்
கைவிடப்பட்டவராகத்தான் இருந்தார்
அவர் தனியாக இறந்த அந்த இரவில்
நானும் தனியாகத்தான் இருந்தேன்
வாணி ஜெயராமின் பாடலொன்றை
திரும்பத் திரும்ப கேட்டபடி
அந்த இருளை கடந்துகொண்டிருந்தேன்
மனிதர்கள் தனியாக இருப்பதைப் பற்றி
சொல்வதற்கு ஏதுமில்லை
ஆனால் ஒருவர் தனியாக இறக்கும்படி
இந்த உலகின் கதவுகள் மூடிக்கொள்ளும்போது
ஒரு பாடலால் அந்தக் கதவை
திறக்க முடியாதா என்ன?
பத்தாயிரம் பாடல்கள்
நெற்றியில் காயத்துடன்
தனியே கிடப்பதை
ஒரு சித்திரமாக வரைய யாரால் முடியும்?
5.2.2023
காலை 11.26
