யாரும் யாருடனும் இல்லாத காலம்/ஆர்.அபிலாஷ்

தனியாக திட்டமிட்டு முதுமையைக் கழிப்பதெல்லாம் கொடுமை. ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்கும் முதியோர் சராசரியாக பத்தாண்டுகள் கூடுதலாக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்று. நான் இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் போது ரோட்டரேக்ட் அமைப்பின் சார்பாக எங்களை ஒரு முதியோர் இல்லத்துக்கு அழைத்துப் போனார்கள். அங்கு நாங்கள் செலவிட்ட ஒரு மணிநேரத்தின் போது அந்த தாத்தா, பாட்டிகளை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது இன்றும் நினைவில் உள்ளது. ஒரு ஆங்கிலோ இந்திய மூதாட்டி எங்களை உட்கார வைத்து தன் பழைய புகைப்படங்களைக் காட்டி பாடல்கள் பாடிக் காட்டினார். அவரை அப்படியே தூக்கி நம் வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என நாங்கள் சில நிமிடங்கள் ஆலோசித்து விட்டு கலைந்து போனோம்.

இன்று நிலைமை இன்னும் கொடுமையாகி விட்டது – முதியோர் தாமே தனியாக வாழ்வதே பிரைவெஸிக்கு நல்லது என நினைக்கிறார்கள். அல்லது பிள்ளைகள் குற்றவுணர்வே இன்றி தம் பெற்றோரைக் கழற்றி விட்டுவிடுகிறார்கள். இரண்டு தரப்புமே அது தான் சரி என நினைக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு தனித்தீவு – கணவனுக்கும் மனைவிக்கும் தத்தமது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. குழந்தைகள் கூட தனியாக உணர்கிறார்கள். ஐந்து வயது குழந்தை தனக்கு டிப்ரஷன் உள்ளதாக சொல்கிறது. எல்லாரும் சேர்ந்து வாழும் அமைப்பில் இந்த சிக்கல்களை களையலாம் என நம்புகிறேன். குறைந்தது உரையாட ஒரு சூழல் உருவாகும். பெற்றோரின் அனுபவம், பக்குவம் பிள்ளைகள் நெருக்கடியில் இருக்கையில் உதவும்.

முன்பு நான் சென்னையில் வாழ்ந்த குடியிருப்பில் கீழ்த்தளத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம் இருந்தது. கணவன், மனைவி, இரு பிள்ளைகள் என அழகிய குடும்பம். கணவர் துறைமுகத்தில் வியாபாரம் பண்ணி வந்தார். அவருடைய அப்பா பக்கத்து தெருவில் இன்னொரு வீட்டில். இவருக்கு வியாபாரத்தில் ஒரு பிரச்சினை – ஒரு டீல் தவறாகப் போக பெருத்த நஷ்டமாக கடன் வாங்கி சமாளிக்க முயன்று மேலும் சிக்கிக் கொண்டார். ஒருநாள் விடிகாலையில் வீட்டில் உள்ள எல்லாருக்கும் விஷம் வாங்கிக் கொடுத்து தானும் தற்கொலை பண்ணினார். இவர்களுடைய பிணங்களுடன் மூன்று வயதுக் குழந்தையின் பிணத்தை வெளியே எடுத்த போது பார்த்து நின்ற உறவினர்கள் கதறி அழுதார்கள். பத்து வயதுக் குழந்தை ஒன்று மட்டும் விஷம் அருந்தி இருந்தும் எப்படியோ பிழைத்தது. அதனை உறவினர் ஒருவர் தத்தெடுத்துக் கொண்டார். இந்த குடும்பத் தலைவனின் அப்பா அன்று மாரில் அடித்து அழுதது இன்னும் நினைவுள்ளது: “இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதென்று என்னிடம் சொல்லியிருந்தால் நான் எப்படியாவது உதவியிருப்பேனே. ஏன் சொல்லவில்லை?” எனக்கு உறுதியாகத் தோன்றியது – இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்திருந்தால் நிச்சயமாக இந்த கூட்டுத்தற்கொலை நடந்திருக்காது. கண்காணிக்கப்படுகிறோம் எனும் உணர்வே ஒருவிதத்தில் குடும்பத்துக்குள் இறுக்கத்தை தளர்த்தும், ஆதரவுண்டு எனும் எண்ணம் தற்கொலை முடிவை தள்ளிப்போட வைக்கும். ஆனாலும் ஏன் தனித்தனியாக ஒரே தெருவிலோ பக்கத்து பக்கத்து தெருக்களிலோ வாழ்கிறார்கள்?

இன்னொரு பக்கம் தனியாக வாழும் முதியோர் பணத்துக்காக கொல்லப்படுவது அல்லது நோயுற்று தனியாக இறப்பது வெகுசாதாரணமாகி விட்டது. பெங்களூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் நஞ்சுண்டன் தனியாக இறந்து போய் சில நாட்களுக்குப் பிறகே அவரது உடலைக் கண்டெடுத்ததாக நினைவு. நான் பெங்களூருக்கு வந்து தனியாக வாழ்ந்து கொண்டிருந்த ஆரம்ப ஆண்டுகளில் எனக்கு அடிக்கடி ரத்த சர்க்கரை வெகுவாக குறைந்து உறக்கத்திலேயே வலிப்பு வந்து கீழே விழுந்து விடுவேன். (இப்போது அப்படி வருவதில்லை.) சர்க்கரை அளவு வெகுவாக இறங்கும் போது ஒரு மின்னதிர்ச்சி போல ஏற்படும் என சொல்வார்கள். இது நம்மை மயக்கத்தில் இருந்து தானே தெளிவிக்கும். அப்படித்தான் நான் விழித்துப் பார்த்தால் தரையில் கிடப்பேன். என்ன நடந்ததென்றே நினைவிருக்காது. நாக்கையோ உதட்டையோ கடித்திருப்பேன். அதை வைத்து எனக்கு உறக்கத்தில் வலிப்பு வந்திருந்ததென ஒருவாறு கணிப்பேன். அப்போதெல்லாம் நான் விழுந்த வாகில் தலையில் அடிபட்டு செத்திருந்தாலோ அல்லது மயக்கத்தில் இருந்து மீளாமலே அப்படியே காலமாகி இருந்தாலோ எத்தனை நாட்களுக்குப் பிறகு என் உடலைக் கண்டெடுப்பார்கள் என யோசிப்பேன். நஞ்சுண்டனின் நிலைதான். அந்த எண்ணமே அவலமான உணர்வைத் தரும். சாகலாம், ஆனால் தனியாக சாகக் கூடாது என நினைப்பேன்.

இது நகரங்களின் ஒரு தனித்த சிக்கல். என்னுடைய சொந்த ஊரில் என் வீட்டுக்கு எதிரிலுள்ள வீட்டில் ஒரு மூதாட்டி வாழ்கிறார். அவர் காலையில் ஒரு மணிநேரம் தாமதமாக எழுந்தால் கூட என்னுடைய அம்மாவோ வேறு அண்டை வீட்டாரோ போய் கதவைத் தட்டி விசாரிப்பார்கள். அவர் எந்த நேரத்துக்கு எழுகிறார், என்ன சாப்பிடுகிறார், எப்போது தூங்குகிறார், உடல் நலமாக இருக்கிறாரா என எல்லாமே அண்டை வீட்டாருக்கு அத்துப்படி. இப்படித்தான் பரஸ்பரம் மக்கள் அக்கறையுடன் சேர்ந்து வாழ வேண்டும், ஒரு தனிமனிதன் மீது அவனுடன் இருக்கும் சமூகமும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும என்பேன். இங்கே நகரங்களிலோ இதை ஒரு அந்தரங்க அத்துமீறல் என நினைக்கிறார்கள்.

வாணி ஜெயராம் கீழே விழுந்து அடிபட்ட போது யாராவது ஒரு உறவினர் கூட இருந்திருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போயிருக்கலாம், அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் தானே? குறைந்தது 1% வாய்ப்பாக இருந்திருக்கும் தானே. அவர் மேலும் பல ஆண்டுகள் சமூகத்துக்கு பங்களித்திருக்கலாமே?

சென்னையிலும் சில குடும்பங்களில் நலமில்லாத தம் பெற்றோரை கூட வைத்து பாதுகாக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அண்மையில் நான் சென்னை சென்றிருந்த போது அத்தகைய ஒரு குடும்பத்துடன் தான் ஒருநாள் தங்கினேன். அவர்களுக்கு ஆயிரம் சிரமங்கள். பணமில்லை, ஆரோக்கியமில்லை, கடும் நெருக்கடி, ஆனாலும் பரஸ்பரம் விட்டுவிடாமல் பாதுகாத்து சார்ந்திருக்கிறார்கள். இத்தகையோரை நாம் அங்கீகரித்து ஒரு உதாரணமாக முன்னெடுக்க வேண்டும். இவர்களுக்கு விருதுகள் அளிப்பதும் நல்ல முடிவாக இருக்கும். இத்தகையோருக்கு அரசு ஒரு உதவித்தொகையை அறிவித்தால் இன்னும் உதவியாக இருக்கும்.

பெற்றோரை கூட வைத்துக் கொள்வது – பொருளாதாரம் அனுமதிக்கும் பட்சத்தில் – கட்டாயம் என அரசு ஒரு சட்டம் போட்டால் இப்போதுள்ள பிரச்சினையை ஓரளவுக்கு சரி பண்ணி விடலாம். இதை மென்மையாக வலியுறுத்தும் சட்டம் ஒன்று அண்மையில் அரசால் கொண்டு வரப்பட்டாலும் கட்டாயமாக நிறைவேற்றப்படுவதில்லை. என்னிடம் கேட்டால் மைக்ரோ குடும்பம் எனும் பெயரில் அப்பா, அம்மாவைத் தனியாக விடுவோருக்கு முதலில் வரியை அதிகரிக்க வேண்டும். அடுத்து பெற்றோரோ பிள்ளைகளோ தனியாக வாழ்ந்து செத்துப் போனால் அவர்களைத் தனியாக விட்ட பிள்ளைகள் அல்லது பெற்றோர் மீதான ஒரு கொலைக்குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும்படி தனிச்சட்டம் ஒன்று வர வேண்டும். இப்படி கடுமையான நடைமுறைகள் இருந்தால் ஒழிய இந்த மக்களைத் திருத்த முடியாது. (பொருளாதார நெருக்கடியை மட்டுமே இதற்கு விதிவிலக்காக கருத வேண்டும்.)
அதிலும் எந்த வசதியும் இல்லாத ஏழைகளுக்கு உள்ள குடும்பப் பற்று மத்திய, மேல் வர்க்கங்களுக்கு இருப்பதில்லை. கோவிட் லாக்டவுனின் போது பல ஆயிரம் மைல்கள் நடந்தே சொந்த ஊருக்குப் போன மக்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒருவரிடம் ஏன் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு ரிஸ்க் எடுத்துப் போகிறீர்கள் என்று கேட்ட போது “லாக்டவுனின் போது என் அம்மாவும் மனைவியும் போனில் அழைத்தார்கள். நான் தனியாக இங்கே இருக்கிறேன் என்று அறிந்ததில் இருந்து அவர்கள் சாப்பிடவில்லை என்றார்கள். அதனால் போகிறேன்.” என்று சொன்னார். தன் பெற்றோரும் மனைவியும் சாப்பிடாமல் காத்திருக்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப அவர் சொன்னார். அன்றாடங்காய்ச்சிகளிடம் உள்ள இப்படியான பாசத்தை, ஒட்டுதலை மத்திய வர்க்கம் என்றால் பார்க்க முடியாது. சாப்பிடாமல் காத்திருப்பது போக நாம் சாப்பிட்டோமா என்று கூட கவலைப்பட மாட்டார்கள். எல்லாருக்கும் சொந்த காரியம் மட்டும் சிந்தாபாத். ஏனென்றால் அன்றாடங் காய்ச்சிகள் பரஸ்பரம் சார்ந்திருப்பதைப் போல மத்திய, மேல் வர்க்க மனிதர்கள் இல்லை. அதை நாகரிகம், வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் கருதுகிறார்கள். சார்பின்மை நம்மை தனிமையானவர்களாக மாற்றிவிட்டது.

சமூக நீதி, சாதி ஒழிப்பென்றெல்லாம் வீராவேசமாகப் பேசும் நாம் ‘குடும்ப நீதி’ பற்றி முதலில் பேச வேண்டும். மனிதர்களின் தனிமை பற்றி பேச வேண்டும். இன்றைய பல குழந்தைகளுக்கு தகப்பன் இல்லை, கடைசி காலத்தில் முதியோரைப் பார்த்துக் கொள்ள பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இல்லை. தனிக்குடும்பத்தில் கூட்டுத்தற்கொலைகள் நடந்த பின் பெற்றோர் வந்து நின்று புலம்புகிறார்கள். ஊடகங்கள் இந்த அதிமுக்கிய பிரச்சினையைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பதே முற்போக்கு என நினைக்கிறது. என்ன எழவெடுத்த காலம் இது!