பார்த்ததும் கேட்டதும் – 13/ஜெயராமன் ரகுநாதன்

கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப்பிறகு என் பெரிய மகன் ஜெர்மனியிலிருந்து வந்திருந்தான்.

ஒரு காலை திடீரென்று, “அப்பா! நாம அப்பல்லாம் மாடில ஹேண்ட் கிரிக்கெட் விளையாடுவோமே, மொட்டை மாடிக்குப்போய்ப்பார்க்கலாமா” என்று கிளம்பிவிட்டான்.

இரண்டாவது தளத்துக்கு ஏறுவதில் இப்போது எனக்கு நாக்கு தள்ளிவிடும் என்பது தெரிந்தும் பின்னாலேயே போனேன்.

முதல் தளத்தில் வெளி மாடிக்குப்போய் பின் புறம் அந்த கைப்பிடி இல்லாத ரெயிலிங்கில் ஏறித்தான் இரண்டாம் தளத்துக்குப்போக வேண்டும்.

அப்போதெல்லாம் நான் முதலில் ஏறி லிண்ட்டலில் நின்று கொள்வேன். பெரியவன் தட்டுத்தடுமாறி மெதுவாக படியேறி, மேல் படியில் லேசாக வளைந்து, கொஞ்சம் கொஞ்சமாக திரும்புவான். நான் குனிந்து அப்படியே அவன் கைகளுக்கிடையில் லாகு கொடுத்து ஜாக்கிரதையாகத்தூக்கி விட, பக்கென்று பிருஷ்டபாகமாகக்குதித்து மொட்டை மாடிக்கு வந்துவிடுவான். அவன் ஏறினவுடன் நானும் குதித்து ஏறுவேன்.

அம்மாவுக்குத்தெரியாமல் ஸ்வாமிக்கு வைத்திருக்கும் பலகாயை எடுத்து வந்துவிடுவோம். அதுதான் ஸ்டம்ப். அதில் போட்ட மாக்கோலம் ரொம்பத்தோதாக இருக்கும். அவுட்டா இல்லியா என்னும் சச்சரவுகளை பந்தில் படிந்திருக்கும் வெள்ளை மாக்கோலம் காட்டிக்கொடுத்துவிடும்!

பந்து வெளியே போய் விழும்போதெல்லாம் அவனை விரட்டிவிடுவேன். மாங்கு மாங்குவென ஓடி ஓடி எடுத்து வருவான்.

“அப்பனும் புள்ளயும் மாடில வெயில் பாழாப் போறதேன்னு போனேளா?”

கீழே இறங்குமுன்னரே அம்மாவின் வசவு கேட்கும்.

“ஏண்டா அந்தக்காலத்துலேர்ந்தே உங்கப்பாவுக்கு மொட்டை மாடி பித்து உண்டு. இப்ப உனக்கும் சொல்லிதரானா?”

குழந்தையை இழுத்து முகத்தைத்துடைத்து விட்டு கூடவே போட்டு வைத்திருக்கும் ரோஸ் மில்க் தருவாள்.

இப்போது கைப்பிடி இல்லாத ரெயிலிங்கின் படிகளில் விடுவிடுவென அவன் ஏறிவிட்டான். எனக்குத்தான் கொஞ்சம் தலை சுத்தியது. தட்டுத்தடுமாறி மேல் படியில் ஏறினவுடன், அவன் லிண்ட்டல் அருகில் வந்து கையை நீட்டினான்.

”என் கையைப்பிடிச்சுண்டு வாங்கோப்பா!”

மூச்சுத்திணற நான் ஒரு எகிறு எகிறி அவன் கைகளில் என்னை ஒப்படைக்க, அவன் அப்படியே என்னைத்தூக்கி விட்டான்!

“இங்கதான் ஸ்டம்ப் வெச்சுப்போம், இல்ல?”

பாட்டியோட சுவாமிப்பலகா! கோலம்லாம் போட்டிருக்கும்! அத ஏண்டா எடுக்கறேள்னு கத்துவா!”

“அடிக்கடி பக்கத்தாத்து மாடிக்கு அடிச்சுடுவோம் பந்தை!”

“நான் நாலு தரம் கீழே போனா நீங்க ஒரு தரம்தான் போவேள்!”

“டயர்டா வேர்க்க வேர்க்க கீழே போனா, பாட்டி ஜில்லுன்னு ரோஸ் மில்க் தருவா!”

“ஊருக்குப்போறதுக்குள்ள ஒரு கேம் ஆடிடணும்ப்பா!”

நினைவுகள் அவனையும் தாண்டி என் அம்மாவிடம் போய்விட்டது.

பல வருஷங்களுக்கு முன்பு எழுதின மொட்டை மாடி வ்யாசத்தை கீழ்ப்படி முடித்திருந்தேன்.

//”ஆங்காங்கே குப்பை, அழுக்கு. காய்ந்த இலைகள். அழுக்கேறிப்போய் கிழிந்த ஒரு ரப்பர் பந்து, சேறு படிந்த ஒரு இஸ்பேட் க்வீன் சீட்டு. இப்போது கூப்பிட்டால் கூட கிரிக்கெட் அல்லது சீட்டு ஆடுவதற்கு நாற்பத்து ஐந்து வருடத்தொடர்பில் இருந்துவரும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், காலர் வைத்த டி ஷர்ட் வாங்கித்தரவோ “சொல்ல சொல்ல மொட்டை மாடிக்கு போறியா”, காலில சூடுதான் வெக்கணும் உனக்கு” என்று திட்டவோ அம்மாதான் இல்லை!”//

நினைத்துப்பார்த்தேன்.

அடுத்த பத்துப்பதினைந்து வருடங்களில் பிள்ளை சென்னைக்கு வரும்போதெல்லாம் மொட்டை மாடிக்கு வருவானோ? வந்து பழைய நினைவுகளை அசை போடுவானோ?

அவனுடைய ப்ளாகில் மொட்டை மாடி பற்றியும் என்னைப்பற்றியும் எழுதுகிறானா என்று வானுலகிலிருந்து கவனிக்க வேண்டும்!