வாசிப்பானுபவம்…./ஜெ.பாஸ்கரன்

தோற்றவர் வரலாறு (கட்டுரைகள், அ.முத்துலிங்கம், நற்றிணை பதிப்பகம்).

Ano Neuvo அதாவது ‘புதுவருட முனை’ – அங்கு ஆண்டுதோறும் அலாஸ்காவிலிருந்து வரும் ஆண் சீல்களும், எதிர்ப்பக்கம் உள்ள ஹவாயிலிருந்து வரும் பெண் சீல்களும் சந்தித்து, காதல் விளையாட்டுகள் விளையாடி, பிப்ரவரி
14 ல் உச்சமடைகின்றன! அதிலிருந்துதான் ‘காதலர் தினம்’ உண்டாகியது என்று சிலர் கூறுகிறார்கள்! இந்த விபரத்தை எழுத்தாளர் அ.முத்துலிங்கம், சு.ரா. அவர்களிடம் சொல்ல, அவர் இந்த அனுபவதைக் கட்டுரையாக எழுதச் சொல்கிறார். அதுவரை கட்டுரைகள் எழுதாத அ.மு. முதன்முறையாகக் கட்டுரை எழுதுகிறார்! சு.ரா.வின் தீர்க்கதரிசனத்திற்குக் கை கூப்பி வணக்கமும் நன்றியும் சொல்ல வேண்டும் – அ.மு. வின் கட்டுரைகள் அத்தகைய வளம் நிறைந்தவை! அவரது அமெரிக்க உளவாளி, ஐயாவின் கணக்குப் புத்தகம், நாடற்றவன், தோற்றவர் வரலாறு போன்ற கட்டுரைத் தொகுப்புகளை வாசித்தவர்கள் நிச்சயமாக என் கருத்துடன் ஒத்துப்போவார்கள்!

இரண்டு வருடத்தில் (2014 – 2016) எழுதிய கட்டுரைகள் ‘தோற்றவர் வரலாறு’ தொகுப்பில் உள்ளன. நான்கு நேர் காணல்கள், பதினேழு கட்டுரைகள் அடங்கிய சுவாரஸ்யமான தொகுப்பு! ‘ஜெகந்நாதரின் தேர்’ என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள முன்னுரையே மிக அருமையான கட்டுரையாக பிரகாசிக்கிறது – எப்படி கட்டுரை எழுதத் தொடங்கினார், கட்டுரை எழுதுவதற்கும், கதை எழுதுவதற்கும் என்ன வித்தியாசம், அனுபவங்கள், பயணங்கள், தரவுகள், செலவாகும் பணம், சந்திக்கும் ஆளுமைகள் என அவர் விவரிக்கும் ஒவ்வொன்றும் கட்டுரைகள் எழுதுபவர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள். 16 சக்கரங்கள் கொண்ட பூரி ஜெகந்நாதர் ஆலயத் தேர், நிற்கவே நிற்காமல் வேகம் பிடித்து ஓடும் – ‘நிறுத்தவே முடியாத மாபெரும் விசை’ என்ற பொருள் கொண்ட ‘Juggernaut’ என்ற ஆங்கில வார்த்தை இதிலிருந்துதான் வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? அ.மு. கட்டுரை மூலம் நான் இப்போதுதான் தெரிந்துகொண்டேன்!

1712ல் முதல் தமிழ்ப் புத்தகம் தங்கம்பாடியில் அச்சிடப்பட்டது. அது முதல் இன்று வளர்ந்துள்ள அறிவியல் வசதிகள் வரை சுவாரஸ்யமாகச் சொல்கிறார் ‘வாசகர் தேவை’ கட்டுரையில்! சொல் வங்கியில் இலட்சக்கணக்கான வார்த்தைகள் கிடைக்கின்றன. இலட்சக்கணக்கான எழுத்தாளர்கள் உள்ளனர். ஆனாலும் அழியா காவியம் படைக்க இவைகள் மட்டும் போதுமா? ‘அதற்கு கணினி மாத்திரம் போதாது, மனித மூளையும் தேவை’ என்கிறார் அ.மு. யார், என்ன, எப்படி, எழுதினாலும், வாசிக்க நல்ல வாசகர்கள் வேண்டும் என்று முடிக்கிறார். வாசிக்க வேண்டிய கட்டுரை!

சிங்களப் பகுதியில் உள்ள பூசா சிறைக் கைதி அங்கிருந்த நூலகத்தில் இவரது புத்தகங்களை வாசித்திருக்கிறார். இவரது புத்தகம் ஒன்றைத் தேடி வெளியில் எங்கும் கிடைக்கவில்லை என இவருக்குப் போன் செய்து கேட்கிறார் அந்த கைதி. (‘சித்திரவதைக்கு என் புத்தகங்களை சிங்கள அரசாங்கம் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் சாதுவாக எழுந்தது’. ஆனால் நான் அதை வெளிக்காட்டவில்லை!). அந்தக் கைதி சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். “ஒரு நல்ல சிறுகதை என்றால் எழுத்தாளர் ஓர் அடி முன்னே நிற்பார். வாசகர் பின்னே தொடர்வார். வாசகரால் எழுத்தாளரை எட்டிப் பிடிக்கவே முடியாது. அதுதான் நல்ல சிறுகதை” (‘நல்ல சிறுகதை’ கட்டுரையில்..)

‘பூக்கள் பறப்பதில்லை’ கட்டுரையில் எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள் என்பதைப் பல சுவாரஸ்யமான தரவுகளுடன் விவரிக்கிறார். ஐஸாக் அசிமோவ் கடைசிக் கதையை தட்டச்சு செய்யும்போது, தட்டச்சு மெஷினில் தலை கவிழ்ந்து இறந்து போனார்; ‘கிழவனும் கடலும்’ நாவலை எழுதிய ஏர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு வசனம் வரவில்லை என்ற விரக்தியில் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு இறந்து போனார் போன்ற தகவல்கள் வியப்பளிப்பவை. எழுத்தாளருக்குச் சம்பளம் இல்லையென்றாலும் அவரால் எழுதாமல் இருக்க முடியாது – எழுதும்போதுதான் அவர் பிறந்ததின் அர்த்தம் அவருக்கு நிறைவேறுகிறது என்கிறார் அ.மு.

‘எழுத்தாளரும் வாசகரும்’ என்ற கட்டுரை இன்றைய வாசகர் மனோநிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. ‘எழுத்தாளர் எழுதாத ஒன்றைக் கண்டுபிடிப்பதே, வாசகருக்கும், பத்திரிகைக்காரருக்கும் வேலை’ என்கிறார் அதற்கான தரவுகளுடன்!

நாயும் தாயும், பழைய சப்பாத்து, இளம் விதவை பெட்ரோனியஸ், கிருஸ்மஸ் தவளை – இந்தக் கட்டுரைகள் சிறுகதைகளாக, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை – அ.மு. வின் எழுத்தில் நம்மை நெகிழ் வைப்பவை.

‘ராஜவீதி’ நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்றபோது அவரைப் பற்றி எழுதிய கட்டுரை. நாஞ்சில் நாடன் அவர்களின் மரபிலக்கியத் தேர்ச்சி குறித்து வியக்கிறார். ‘கொங்குதேர் வாழ்க்கை’ சிறுகதையை சிலாகிக்கிறார்.

‘ஜேசியும் வேசியும்’, கால்பந்தாட்டம் தொடர்புள்ள அருமையான கட்டுரை. ‘அப்பு’ எழுதிய ‘வன்னி யுத்தம்’ புத்தகம் பற்றிய விமர்சனப் பார்வை, ‘தோற்றவர் வரலாறு’ கட்டுரை. அதில் மனதை நெகிழ வைக்கும் பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்.

“ஒரு கதையை எப்படித் துவங்குவது, எப்படி வளர்ப்பது, எதை முதலில் சொல்வது எதைப் பின்னர் சொல்வது, எதைச் சொல்லாமலே விடுவது, எந்த இடத்தில் முடிப்பது போன்ற எல்லாவற்றையுமே திட்டமிடவேண்டும்” என்கிறார் ‘ஐந்தாவது கால்’ கட்டுரையில் – இந்த சூத்திரத்தைத் தனது ஒவ்வொரு கட்டுரையிலும் அ.மு. கடைபிடிக்கிறார்!

இறுதியில் உள்ள நான்கு நேர்காணல்களும் சிறப்பானவை – ஏராளமான அனுபவப் பகிர்வுகள்!

வாசிக்க வேண்டிய தொகுப்பு!

ஜெ.பாஸ்கரன்.

One Comment on “வாசிப்பானுபவம்…./ஜெ.பாஸ்கரன்”

Comments are closed.