ராமேஸ்வரம் கோயிலில்/ஷோபனா ரவி

ராமநாதஸ்வாமிக்கு வில்வமாலையும் அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிவப்புரோஜா மாலையும் வாங்கிக் கொண்டேன். ஸ்வாமியை தரிசித்துவிட்டு வரிசையில் அம்மன் சன்னிதிக்கு வந்த போது நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக வேட்டிசட்டையில் இரண்டுபேர் உள்ளேவருவோரிடம் ” காணிக்கையை உண்டியலில் போடுங்கள். தட்டில் போடவேண்டாம்,” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“ஏன்,” என்பது போல் அவர்களைப் பார்த்தேன். இருவரும் பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள். வரிசை மெதுவாக நகர்ந்தது. எனக்குத் தெரிந்த அம்பாள் கீர்த்தனைகளை முணுமுணுத்துக்கொண்டே வரிசையில் முன்னேறினேன். என்பக்தியை மெச்சி எனக்கு முன்னால் சென்றவர் தரை பெயர்ந்து ஏற்பட்டிருந்த பெரிய குழியைக் காட்டி எச்சரித்தார். நல்லவேளை, இல்லாவிட்டால் பாதத்தின் இரண்டாவது விரலில் வழக்கம்போல் அடிபட்டுக் கொண்டிருப்பேன். அந்த விரலைப் பார்த்துவிட்டு “ரவி உங்களை எப்படிக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்?” என்று ஓர் அம்மணி ஆச்சர்யப்பட்டதுண்டு. காரணம் அந்தவிரல் கட்டைவிரலைத் தாண்டி நன்றாக நீண்டிருக்கும். அப்படி நீண்டிருந்தால் அன்னார் ‘வணங்காமுடியாம்!’ எது எப்படியோ, ‘பட்டகாலிலே படும்’ என்பது போல் இரண்டு காலிலும் அந்த விரலுக்குத் தான் எப்போதும் அடி. ஒருமுறை இரும்பு மேஜையில் மோதி அந்த விரல் பந்துக் கிண்ணமூட்டிலிருந்து கழன்று நெட்டுக்குத்தாக நின்றது. அரண்டுவிட்டேன். வலியில் கண்ணீர் பொங்க, “டாக்டர்..” என்று என்குருநாதரை அழைத்தபடி லேசாகக் கீழ்நோக்கித் தள்ளிவிட்டேன். நல்லவேளை திரும்பவும் போய்ப் பூட்டிக் கொண்டது. குருநாதரே டாக்டராகவும் இருந்ததால் மீண்டும் கழலாதவண்ணம் பூட்டிவிட்டார் போலும்!

வரிசையில் முன்னேறினேன். “அம்ப காமாக்‌ஷி”யைப் முணுமுணுக்கத்தொடங்கினேன். காமாக்‌ஷி, மீனாக்‌ஷி பர்வதவர்த்தினி எல்லாரும் எனக்கு ஒன்றாகவே தெரிவார்கள்! அது அவர்களுக்குப் புரியாதா என்ன! “குந்தரதனா..” முதல் சரணத்தின் சாஹித்யம் முடிந்தது. எனக்கு முன்னால் இருந்தவர் கற்பூரத்‌தட்டில் நூறு ரூபாய் போட்டார். அர்ச்சகரோ, “உண்டியலில் போடுங்கள்,” என்று தலை நிமிராமல் சொன்னார். அவரும் காரணம் கேட்காமல் உண்டியலில் போட்டார். கண்கொத்திப் பாம்புகள் பார்த்துக்கொண்டு நின்றனவே! நான் காணிக்கையை கற்பூரத் தட்டிலேயே போட்டேன். எனக்குத் தான் கால் கட்டைவிரலைவிட அடுத்த விரல் நீளமாயிற்றே!

அம்மனுக்கு நாங்கள் வாங்கிப் போயிருந்த மாலை வெகு ஜோராக இருந்தது. பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தோம். பிரகாரத்தைச்சுற்றிவிட்டு வெளியே வந்தபோது ஓர் அர்ச்சகர் தாங்கித் தாங்கி நடந்தபடி இன்னொரு சன்னிதி யிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். படியேறி இறங்கி ஸ்வாமியையும் அம்பாளையும் பாராட்டும் இவர்களுக்கல்லவோ வாழ்வு சிறக்கவேண்டும்! இறைவா, அதற்கொரு வழி பிறக்கட்டும்!

வரும்போது ஒரு pose கொடு என்று ராமலக்‌ஷ்மியிடம் கெஞ்சிக் கேட்டேன். அவளும் நின்று திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு என்ன அழகான முன்னுச்சி! அளவான கூந்தலென்றாலும் அழகான செம்பொன்னிறக்கூந்தல். அதே நிறத்தில் விழிகள்!

ராமேஸ்வரம் கோயிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தபோது என்ன பாடலாம் என்று யோசித்தேன். அப்போது நண்பர் சொன்னார். “நீங்கள் hum செய்யும் பாட்டெல்லாம் ஒரேமாதிரி இருக்கிறது,” என்றார். முயற்சியை உடனே கைவிட்டேன்! 😄😄