
விருட்சம் சார்பில் 48வது கதைஞர்களின் கூட்டம் 10.02.2023 ‘வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்தது. அப்போது பானுமதி அவர்கள் வழக்கறிஞர் சுமதி அவர்களின் யாத்திரிகம் சிறுகதையைப் பற்றி பேசியது.
எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞரான திருமதி சுமதி அவர்களின் யாத்திரிகம் என்று சிறுகதை 2021 ஜூலை கலைமகள் இதழில் வெளியாகி உள்ளது. அவரது சிறுகதை தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
கதாநாயகி சிஸ்டர் மேரி என்பவர். தன்னுடைய 24 ஆம் வயதிலிருந்து 18 ஆண்டுகளாக செயிண்ட் லூர்து சர்ச்சில் கன்னியாஸ்திரி ஆக இருப்பவர். அந்த தேவாலயத்திற்கு வரும் அனைவரிடமும் அன்பும் மிகப் பரிவும் கொண்டவர். தன்னுடைய குடும்ப விஷயங்களையும் பிரச்சனைகளையும் அவரிடத்தில் சொல்லி ஆறுதல் பெறுவோர் நிறைய மனிதர்கள். அவர் செய்யும் ஜெபம் மற்றும் பிரார்த்தனைகளால் தங்கள் பிரச்சனைகள் வெகுவாக தீர்ந்து தாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று பலர் சொன்னாலும், ‘அனைத்தும் கர்த்தரின் கருணையே, யார் பிரார்த்தித்தாலும் கர்த்தர் அருள் புரிவார்’ என்று அவர்களுடைய நெற்றியில் குரிசில் இட்டு, தனக்கும் இட்டுக் கொள்ளும் பேரன்புமிக்க அந்த சிஸ்டருக்கு புனித வெள்ளி அன்று ஒரு மனக் கலக்கம் ஏற்படுகிறது. ‘வரோம் சிஸ்டர்’ என்று அனைவரும் சொல்ல, ‘வருகிறேன் மதர்’ என்று ஒரு இளைஞன் சொல்கிறான். தன் கண்களால் சிஸ்டர் மேரியின் கண்களை ஆழமாகப் பார்த்துவிட்டு சரிவு பாதையில் இறங்கி ஆலய முகப்பு கதவில் நின்று மீண்டும் ஒரு முறை அவரைப் பார்த்துவிட்டு பஸ்ஸில் ஏறி அங்கிருந்தும் அவரைப் பார்த்துவிட்டு அவன் போகிறான். இந்தச் சரிவுப்பாதை ஒரு குறியீடு. அவனது நிலையையும் சொல்கிறது; சிஸ்டர் மேரி சந்திக்கப் போவதையும். எழுத்தின் அழகு இது. அவன் அழகான இளைஞன் இள நீல நிறத்தில் ஷர்ட், கரு நீல நிற கால் சட்டை, சீரான காலணி என்று அனைத்தும் தன் மனதில் எப்படி அந்த நொடிக்குள் பதிந்தன என்று அவர் நினைக்கிறார். இதில் ஏதோ மர்மமும் இருக்கலாம் என கலக்கமும் வருகிறது.
ஈஸ்டருக்கு முந்திய இரவில் கூட்டம் கலைந்த பிறகு வெகு நேரம் தேவனின் முன் நின்று மண்டியிட்டு அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை மதர் சுப்பீரியர் பார்க்கிறார். அவருக்கெனவே காத்திருந்து, பிறகு சொல்கிறார் ‘கர்த்தர் நம்மைக் காப்பார்’. சிஸ்டர் மேரிக்கு மனம் கலங்கி கண்ணீர் பெருக்கெடுக்கும் நிலை. ஆனால் ‘தனக்கென சிந்துவதில்லை இந்தக் கண்ணீர்’ என்று அதை அணை போடுகிறார். இந்த வரி சிஸ்டரின் குணச் சிறப்பைச் சொல்கிறது. இந்த இடத்தில் சுமதி ஒரு வாக்கியம் எழுதி இருக்கிறார்: ‘கேட்டு விடுபவர்களிடம் கூட சொல்லத் தோன்றாத, சொல்ல முடியாத, சொல்ல விருப்பம் ஏற்படாத துக்கங்களும் மன உணர்வுகளும் பல நேரம் என்ன என்று கேட்காமல், ஒரே வாக்கியத்தை சொல்லிவிட்டு விலகி நின்று சிதறிக் கிடக்கும் நம் மனதை சேமிக்கும் சூட்சுமத்தை வீசும் ஆழமான பெரியவர்கள் முன் கதறிக் கதறி நம்மை கொட்டித் தீர்க்க தோன்றி விடுகிறது
எனினும் பார்வைகளால் மேரியும் சுப்பீரியர் மதரும் மன கலக்கத்தை புரிந்து கொள்வதே சிறப்பு.
ஈஸ்டர் பூஜை சிறப்பாக நடந்த மாலையில் ஃபாதர் ஆம்ப்ரோசை சந்தித்து பாவ மன்னிப்பு கோர சிஸ்டர் மேரி விழைகிறார்.
இதுவரை சிஸ்டர் மேரி பூரண அர்ப்பணிப்புடன் தேவாலயத்தில் பணி செய்து வந்ததால் ஃபாதருக்கு ஆச்சரியம். இருந்தும் மாலை 4 மணிக்கு தன்னை சந்திக்க நேரம் தருகிறார்.
பாவ மன்னிப்பு கோருகையில் மேரி சொல்கிறார்: ‘நான் அனாதை என்று சொன்னது பொய். எனக்கு அன்னை தந்தை குடும்பம் எல்லாம் உண்டு. எங்களது காதல் கல்யாணத்தில் கணவரின் குடும்பத்திற்கு விருப்பமில்லை. எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வயதாகும் போது கணவர் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றார். என் மாமியாரும் மைத்துனரும் என்னைக் கொடுமை செய்தனர். என் கணவரிடம் எதுவும் சொல்ல இயலாத நிலை. இந்த சந்தர்ப்பத்தில் என் மைத்துனருக்கு திருமணம் நிச்சயமாகி அதில் கலந்து கொள்ள என் கணவர் வந்தார். நானும் என் பிள்ளையும் மயக்கமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றோம். உயிர் ஆபத்து இல்லாத அளவில் எங்களுக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் அதை நானே செய்தேன் என்று என் மாமியாரும் மைத்துனரும் நாடகமாடி, போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டோம் என்று சொல்லி என் கணவரை நம்ப வைத்தார்கள். கிடைத்த நேரத்தில் நான் அவரிடம் உண்மையைச் சொன்னபோது ‘ஆமாம் நம் காதல் திருமணம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை இந்த முறை உன்னை சிங்கப்பூருக்கு குழந்தை உடன் அழைத்துப் போய் விடுகிறேன் என்று சொன்னார். குழந்தையை தன்னிடம் வைத்துக் கொண்டு என்னை என் பெற்றோர்கள் வீட்டிற்கும் அனுப்பினார்கள். எங்களைத் திருமணத்திற்கும் அழைத்தார்கள். சில நாட்கள் பெற்றோர் வீட்டில் இருக்கச் சொன்ன அந்த இடைவெளியில் என் மகனுக்கும் பாஸ்போர்ட் வாங்கி, என் கையெழுத்தை ஃபோர்ஜெரி செய்து விவாகரத்தும் பெற்று அவர் வெளிநாடு சென்று விட்டார் என்று தெரிந்த போது இத்தனைக்கும் அவரும் உடந்தை என்று என் மனம் கசந்து போனது.
கடவுளின் ஊழியத்தில் உண்மையாக ஈடுபட வேண்டும் என்றே நான் இங்கு வந்து சேர்ந்தேன். ‘என் வரலாற்றை மறைத்தது தவறு. ஆனால் நான் என் தொண்டை மனப்பூர்வமாக செய்தேன்.
இங்கு வரும்போது கல் மேடையில் குழந்தை இயேசுவை அணைத்தவாறு நிற்கும் அன்னை மேரியின் சிலையைப் பார்த்தேன். காயும் வெயிலில் வறண்ட கண்களோடு என்னை எதிர்பார்த்திருக்கும் என் மகனிடம் நான் போகிறேன் ஒரு அன்னையாக.’
‘கர்த்தரை நான் விலகுவதில்லை அவர் என்னை விட்டு நீங்குவதும் இல்லை.’
சிறப்பாக எழுதப்பட்ட கதை. ஒரு பெண் சிஸ்டராக அனைவருக்கும் அன்பையும் அமைதியையும் தருகிறாள். தன்மகன் ஊடுருவிப் பார்க்கும் கண்களுடன் அந்த அன்பை யாசிக்கும் போது அவள் அவனுக்கான அன்னையாக மாறுகிறாள்.
எந்த இடத்திலும் கதை மிகை உணர்வு கொள்ள வில்லை. எதார்த்தங்களை மீறவில்லை. பெண் தன் குடும்பத்தை நேசிப்பாள், ஆண் பரந்த உலகத்தை என்று பலரும் சொல்வதை உண்மை என இந்தக் கதையில் அவர் நிறுவ பார்க்கிறாரோ?
யாத்திரை என்பது பயணம்
யாத்திரிகன் என்பவன் பயணி
யாத்திரிகம் என்பது வாழ்க்கையா?
