அறிதிறன்பேசி/மதுவந்தி

பழமையும் புதுமையும்
சரஸ்வதி பூஜைக்கென
கலைவாணியின் படம்,
தோத்திர நூல்கள்,
என் வணிகவியல் நூல்,
மனைவியின் கணித நூல்,
எல்லாம் அடுக்கியபின்,
மகளிடம் அவள் நூல்
கொணரச் சொன்னேன்.
அறிதிறன் பேசியே
நூலகம், வகுப்பறை எல்லாம்.
நூல் இப்போ ஏதுமில்லையென்றாள்.
அறிதிறன்பேசியைக்
கொடுக்கச் சொன்னேன்,
பூஜையில் வைக்க.
தயக்கத்துடன்தான் தந்தாள்.
மலர்களால் அர்ச்சித்து
பிரசாதம் படையலிட்டு
முடிந்தது பூஜை.

உணவு முடித்து,
அம்மாவும் மகளுமாய்
விஜயதசமிக்கென பொருட்கள்
வாங்க கடைவீதி சென்று
வந்தபின்,
மாலைத் தேநீர் வேளையில்,
பெண் அலைபேசியைத் தேடினாள்.
எப்போதும் தேடுகிற கைப்பை,
காற்சட்டைப்பை, தலையணை கீழே,
குளியலறை எல்லாம்
தேடியபின், தன் எண்ணை
அழைக்க, அதிர்வுடன்
மலர்கள் சிதறியபடி
அறிதிறன்பேசி தரிசனம்
பூஜையறையில்.


. 11.02.23.