தேநீரின் ஓரிரு சொட்டுகள்/தங்கம் மூர்த்தி


என்னிடம்
ஒரு பழக்கமுண்டு.

எப்போது
தேநீர் அருந்தினாலும்
அணிந்திருக்கும்
சட்டைக்கும்
ஓரிரு சொட்டுக்களை
அருந்தத் தருவேன்.

சட்டையும்
ரசித்து ருசித்து
அகலமாய்ச் சிரிக்கும்

சிரித்த சுவடுகள்
சட்டையில்
பலநாட்களிருக்கும்.

தண்ணீரிலிருத்து
துணிகளையெடுத்து
ஓங்கி உதறும்போது
அந்தக் குரல் ஒலிக்கும்
‘ வாய்தான் காதுவரைக்கும்
உங்கப்பாவுக்கு.
சிந்தாம டீ குடிக்க
துப்பில்லை ‘

தங்களின்
தேநீர் வள்ளல்
அவமானப்படுவதறிந்து
கொடியில் படுத்திருந்த
சட்டைகளின் கண்ணீர்
பூமியை ஈரமாக்கியது.

இடர் ஆயிரம் வரினும்
தேநீர் வள்ளல்
பட்டத்துக்கு
பாதகம் வராமல்
உறுதியாய் வாழநினைத்து
துணிஅலமாரி திறந்தேன்.

வெள்ளைச்சட்டை
எழுந்து நின்று
‘ எனக்கொரு
டீ
ஸ்ட்ராங்காக ‘
என்றது.


————