அன்பு மகளே../ஜீவ கரிகாலன்

நான் உன் அப்பாவாகப் பிறந்து இரண்டு மாதங்களாகிவிட்டன.. இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம். உன்னிடம் பேசுவதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. இதுவரையான என் பயணம், உனது வரவுக்கு பின் வேறொரு உலகாகவும் வேறொரு பயணமாகவும் மாறிவிட்டதை உணர்கிறேன். அதற்கு உன்னிடம் நன்றி தெரிவிக்கக் கடமைபட்டிருக்கிறேன்.

இன்று உனக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. மிக எளிய முறையில் நண்பர்களின், உறவுகளின் வாழ்த்தோடும் ஆசிர்வாதத்தோடும் நடைபெறுகிறது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உன் மீது எடுத்துக்கொள்ளும் உச்சபட்ச உரிமை, உனக்கான பெயரை நாங்கள் தீர்மானித்தது மட்டும் தான். ஆனாலும் இந்த உலகம் நமக்கான நிறைய பெயர்களை தாங்கிக் கொண்டு காத்திருக்கிறது என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு நானே சாட்சி.

இந்த மீச்சிறு வாழ்க்கை தேன் போன்றது, சொல்லப்போனால் ஒரேயொரு தேன்துளி தான். எத்தனை சோதனைகள், துயரங்களைச் சந்தித்தாலும், ஜனிப்பதற்கே எத்தனை லட்சம் உயிரணுக்களோடு போட்டி போட்டு பிறக்கிறோம்? அவ்வகையில் பிறப்பே மகத்தானது தான்.

உன்னைக் கையில் ஏந்திய தருணம் என்னால் மறக்கவே முடியாது, அதை என்னால் எழுதவும் இயலாது.

மிகமிகத் தீவிரமாக உன்னிடம் நான் உரையாடக் கூடாது. ஆகவே தொனியைக் கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன்.

ஸ்பைடியின் favorite quoteகளில் ஒன்று Greater power comes with Greater responsibilities என்று வரும்.. ஒரு தந்தையாக இந்த உலகிற்கு உன்னை அத்தனை எளிதாக வரவேற்க இயலாது. சூழல், சமூக அமைப்பு, பொருளாதார கட்டமைப்பு, அரசியல் என பல்வேறு அம்சங்கள் காரணமாக இருக்கின்றன.
இந்த உலகிற்கு உனக்கு சிலவற்றைத் தர விரும்புகிறோம். அதுவே எங்களது முக்கியப் பொறுப்பாகக் கருதுகிறோம்.

  1. உன்னை சாதியற்றவளாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்கிறோம். எத்தனையோ நண்பர்கள் எங்கள் முன்னோடிகளாகச் செய்துவரும் இந்த சங்கிலியில் நாமும் இணைந்து கொள்வோம். உனக்கு உறவுகள் பலர் உண்டு ஆனால் சாதி என்று உனக்கு இல்லை. ( என் தாத்தா, என் தந்தை வழி கடத்தப்படும் படிநிலையாக இந்த சாதியற்ற அமைப்பிற்குள் என் மகளின் கரம் பிடித்து நானும் நுழைகிறேன்)
  2. உன் மொழிக்காகவோ, கலைக்காகவோ அல்லது விளையாட்டாகவோ நம் வீட்டில் நடக்கும் ஆன்மீகப் பழக்கங்களுக்கு நாங்கள் உதவுவோம் ஆனால் எந்த சடங்குகளுக்கும் உன்னை வற்புறுத்த மாட்டோம். We are spiritual nor ritual.
  3. நீ எங்கள் மூலமாக இந்த உலகத்திற்கு வந்தவள் என்கிற அளவிற்கு மட்டுமே உரிமையும், இந்த உலகிற்கு உன்னைக் கொடுத்தவர்கள் நாங்கள் என்கிற பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது.
  4. நான் மார்வெல் ஃபேன் என்பதால் நீயும் மார்வெல் ரசிகையாக இருக்கும் என்று வற்புறுத்த மாட்டேன். உனக்கு எல்லா DC படங்களும் போட்டுக் காண்பிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சில படங்களைப் பார்த்துவிட்டு நீ தாமாக marvel ரசிகையாக மாறிவிடுவாய் என்று நான் நம்புகிறேன். 🙂
  5. நல்ல பயணம், நல்ல நண்பரகள், நல்ல உறவுகள் என உனக்கு அறிமுகப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

5 A. உனது உணவுப் பழக்கத்தையும் நீயாகவே தீர்மானிக்கலாம். உனது ஆரோக்கியம் மட்டுமே எமது பொறுப்பு.

  1. இந்த நவீன காலத்திய கல்விப்புல நெருக்கடியை, வதையை, அழுத்தத்தை நாங்கள் ஒருபோதும் உனக்குத் தரமாட்டோம்.
  2. நீ சுதந்திரமானவளாக இருக்கிறாய்.. இந்த சமூகம், அரசியல், சூழல் உன்னை, உன் சுதந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அபகரிக்கும். உன் கல்வி, பயணம், அனுபவத்தால் எல்லா தளைகளையும் தாண்டி உன்னை நீ சுதந்திரமானவளாகத் தக்கவைத்துக் கொள்ளலாம்.

Now I declare you my child you’re liberated.

இன்று உன்னை வாழ்த்தப்போகும் எல்லா நண்பர்களும், உறவுகளும் அதற்கான ஆசிர்வாதத்தை வழங்குவார்கள்.

12/02/2023
08.10 Am