ஆல்பர்டோ கைரோவுக்கு/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா

தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி


—-
போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, ரிக்கார்டோ ரீஸ் என்ற புனைபெயரில் எழுதிய கவிதை. ஆல்பர்டோ கைரோ என்பது பெசோவாவின் இன்னொரு புனைபெயர். ரிகார்டோ ரீஸ் ஆலபர்டோ கைரோவைத் தன்னுடைய குருவாக கருதுபவர். பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித். தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———-
எல்லா மணி நேரங்களும், குருவே
அமைதியாக இருக்கின்றன
நாம் அவற்றை இழக்கிறோம்
அவற்றை பூச்சாடியில் மலர்களை
வைப்பது போல வைக்கும்போது

நமது வாழ்வில்
துன்பங்களும் இல்லை மகிழ்ச்சிகளும் இல்லை
ஆகையால் நாம் கற்றுக்கொள்வோம்
விவேகத்துடன் கவலையற்றிருப்பதற்கு
வாழ்வை எப்படி வாழ்வது என்பதுபற்றியல்ல
ஆனால் அதை எப்படி தன் போக்கில் கடந்து செல்ல விடுவது என்று

நிரந்தரமாய் அமைதியாகவும்
சலனமற்றும்
குழந்தைகளை ஆசிரியர்களாகக் கொண்டு
இயற்கையைக் கொண்டு நம்
கண்களை நிறப்புமாறு….

நதியின் போக்கிலோ
சாலையின் ஓரத்திலோ
நாம் எங்கேயிருந்தாலும்
அதே படியாய் இருப்போம்
எளிதாகவும்
வாழ்தலின் ஆழ் அமைதியோடும்…

காலம் கடந்து செல்கிறது
நமக்கு எதுவும் சொல்லாமல்
நாம் வயோதிகத்தை அடைகிறோம்.
நாம் தெரிந்து கொள்வோம்
சில விளையாட்டுத்தனமான குறும்புகளின் வழி
நாம் எப்படி விட்டு விலகுதலை உணர்வது என.

அதற்கான கரியங்களில் ஈடுபடுவது என்பது
எந்த குறிக்கோளையும் நிறைவேற்றாது
யாராலும் தடுக்க இயலாது
தன் குழந்தைகளை
தானே சாப்பிடும்
கொடூரமான கடவுளை.

நாம் பூக்களைப் பறிப்போம்
நமது கைகளை
அமைதியான நதிகளில்
மெலிதாக நனைத்துக்கொள்வோம்
அவற்றின் அமைதியை
நாமும் கற்றுக்கொள்ளும் பொருட்டு…

சூரியகாந்தி மலர்கள்
நிரந்தரமாய் சூரியனைத் தாங்கியிருப்பது போல
நாம் மென்மையான அமைதியுடன்
வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுச் செல்வோம்
வாழ்ந்தோம் என்பதற்கான
எந்தவித வருத்தமும் இல்லாமல்.