நித்ய முகூர்த்தம்/ஷாஅ

ஆயிரங் காலத்து அட்சதை
அள்ளி
மங்கலம் கொட்டிசை

விண்ணகமும் மண்ணகமும்
வாழ்த்தொலி முழங்க
மூன்று முடிச்சு போடுகிறது கடல்

அணைக்க ஓடோடி வரும்
நதியுடன்
கழிமுகத்தில் ஒரு
முடிச்சு

மறு பிணைப்பை
கருமேகம் சூழ்ந்து
மேலெங்கும் விழும்
துளியோடு
கோடானு கோடி சொடுக்கிட்டு

மூன்றாவது ஒன்றை
நிலை கொள்ளா அலை பெருக்கி
நீள்கரையினில் விழித்த நம்
நிரந்தர கண்ணோடும்.

இனிதுறும் வையகம் இனிதாய்ப்
பயிர் செழிக்க
வற்றா நதி
பொய்யா மழை
மட்டுமல்ல, ஒருமுறையும்
கடலோடு இணைந்த கண்ணை
இமைத்தும்
விலக்கி விடாதே
என் தீரா அன்பே.

  • ஷாஅ
    14/02/2023