19.09.1971 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த “சோ”வின் கவிதை

இதுதான் கவிதையா?


சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா
எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்
என்னவென்று இப்போது புரிந்தது.
எழுதுவதை எழுதிவிடவேண்டும்-எதுகை மோனை
நடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி!
மறக்காமல் ஒன்று மட்டும் செய்ய வேண்டும்
எழுதிய ‘எஸ்ஸே’யின் வார்த்தைகளை உடைக்க வேண்டும்
வரி வரியாகப் பிரிக்க வேண்டும்! அச்சுக்கு
அனுப்ப வேண்டும் அதுதான் கவிதை.
வார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்
கவிஞனும் செய்யலாம்! கம்பாஸிடரும் செய்யலாம்!
தற்காலக் கவிதைகளைத் தருபவர் கவிஞரல்ல… கம்பாஸிடர்தான்
என்ற உண்மையை உடைத்துக்காட்டிய சுரதாவிற்கு நன்றி!

விகடனுக்கு நன்றி!

கவிதை என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு
சுரதா சுலபமாக கவிதையெழுத கற்றுத் தந்துவிட்டார்
இதுவே அவர் பாணியில் நான் எழுதிய கவிதை!

மற்றவற்றை கம்பாஸிடர் கவனிக்க வேண்டுகிறேன்!

அதே இதழில் வெளிவந்த சுரதாவின் பதில் கவிதை

பழுதென்ன கண்டீர் என் பாட்டில்?
சிலரெழுதக் கூடாது; மேடை ஏறிச்
சிலர்பேசக் கூடாது; சிறிதே கற்றுப்
பலரெழுதிக் கெடுக்கின்றார்! துக்ளக் என்னும்
பத்திரிகை நடத்திவரும் நண்பர் சோவோ,
அலைவரிசை வசனந்தான் கவிதை என்னும்
அவதாரம் என்றிங்கே வாதிக்கின்றார்!
தலைவரிசைக் கவிஞர்களைத் தாக்குகின்றார்
தாக்குமிவர் தாக்கெல்லாம் பள்ளத் தாக்கு!
தாக்குவதைத் தொழிலாகக் கொண்டு, இங்கோர்
தாள்நடத்தி வருமிவரோ, சொற்கள் சேர்த்து,
நேர்க்கோடு போலவற்றை அமைத்து விட்டால்,
நிச்சயமாய் அது கவிதை ஆகும் என்றே
ஊர்க்குருவி வேதாந்தம் பேசுகின்றார்.
உள்ள படி சொல்லுகின்றேன் துக்ளக் தோழர்,
பார்க்கின்ற பார்வைகளே சரியா யில்லை!
பாட்டென்ன, வசனத்தால் வளரும் கோடா?
யாரதிகம் கற்றவரோ அவரை யெல்லாம்
ஆதரித்தான் மகமது பின் துக்ளக். அன்று,
பேரதிகம் கொண்ட-இபன் படூடா என்னும்
பெருங்கவியை ஆத்தானப் புலவ ராக்கிச்
சீரதிகம் செய்தானாம்! இவரோ நன்மை
செய்வதுவாய்த் தெரியவில்லை! எனினும், ஏட்டில்
நாரதநா டகம்நடத்து கின்றார்! இந்த
நண்பர்க்குக் கவிதைபற்றிச் சொல்லு கின்றேன்.
மண் வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு;
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;
புகழ்வேறு; விளம்பரச்செல் வாக்கும் வேறு
எண்வேறு; நாமெழுதும் எழுத்தும் வேறு –
எழில்வேறு ;செயற்கைமுறை அழகும் வேறு.
கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு!
ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்,
ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்.
பூக்கும்வரை அரும்பென்றும், பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம். அதுபோல், சொல்லைச்
சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்,
வார்க்கின்ற வடிவந்தான் வசனம். யாப்பில்
வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்.
பழுத்திருந்தால் சாறு வரும்; வயலில் தண்ணீர்
பாய்ந்திருந்தால் ஏர்கள் வரும்; அதுபோல் இங்கே,
எழுத்திருந்தால் அசைகள் வரும்; இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள் வரும்; தளைகள் சென்றே
அழைத்திருந்தால் அடிகள் வரும்; அடியின் கீழே
அடியிருந்தால் தொடைகள்வரும்; தொடைகள் நன்கு
செழித்திருந்தால் பாக்கள் வரும்; இவற்றை எல்லாம்
தெரிந்தவனே பாட்டெழுதிக் காட்ட வேண்டும்.
தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்;
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்;
ஏமாந்தால் தளைதட்டும்; வெள்ளைப் பாட்டின்
இறுதிச்சீர் காசுதரும்; செடியில் பூத்த
பூமீது வண்டுவந்து தங்கும்; நல்ல
புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்;
சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்
தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில்!
ஆனந்த விகடனில்யான் எழுது கின்ற
ஆசிரியப் பாக்களிலே, எதுகை மோனை
ஊனமுண்டா? ஓட்டையுண்டா? கம்பாசிட்டர்
உதவியெனக் கெதற்காக? இவர்க்குச் சொல்வேன்:
மீனெதற்குச் சைவனுக்கு? விளக்கைக் காட்ட
விளக்கெதற்கு? பாப்புனையும் நூல்கள் கற்றே
நானெழுதி வருகின்றேன். நீரூற்றாமல்
நகம்தானாய் வளராதா? வளரு மன்றோ?
என்பாட்டை இவர்படித்துப் பார்த்திட் டாராம்;
எழுதுதற்கு முயன்றாராம்; எழுதி னாராம்;
பொன்பாட்டாம் என்பாட்டோ, விளக்கின் உச்சிப்
புகைப்பாட்டாம்! புதுவசனப் போர்வைப் பாட்டாம் ?
என்பாட்டு வசனமென்றால், துக்ளக் தோழர்
எழுதுவது வசனமல்ல விசன மாகும்!
தன்பாட்டைத் திருத்தட்டும் முதலில்; பாட்டுச்
சண்டைக்கு வரட்டுமிவர் அதற்குப் பின்னர்!
ஆடுதற்குத் தெரியாத பருவமங்கை,
அழகான முற்றத்தைக் கோணல் என்றால்
வீடுகட்டி வைத்தவர்கள் சிரிப்ப தன்றி
வேறென்ன செய்வார்கள்? இலக்கியத்தில்
ஈடுபடா திருக்குமிவர் என்றன் பாட்டை
எடைபோட வந்துவிட்டார்! எந்த நாளும்
மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வ தில்லை!
மாணிக்கம் கூழாங்கல் ஆவ தில்லை!
இணையத்தில் இருந்து எடுத்தது